தமிழ்

திருவள்ளுவர் கூறும் பெரியாரைத் துணைக்கோடல்

தமிழ்நாட்டு மன்னர்கள் நல்லாட்சி புரிய உதவியாக இருந்தவர்களை ஐம்பெருங்குழு என்றும், எண்பேராயம் என்றும் பகுத்துக் காட்டுவது வழக்கம். மதுரைக்காஞ்சி என்னும் நூல் நாற்பெருங்குழு என்று ஒன்றினைக் குறிப்பிடுகிறது.

ஒல்லையூர் தந்த பூதப்பாண்டியன் சங்ககாலப் பாண்டிய அரசர்களில் ஒருவன். இவனது அரசவையில் ஐம்பெருங்குழுவைப் போல் ஐந்து நண்பர்கள் இருந்தனர்.

பழந்தமிழ் மன்னன் மழை வளம் முதலியன குறையாதிருப்பது தன் செங்கோல் நலத்தால்தான், என்று நினைத்தான்.

மழைவளம் கரப்பின் வான்பேர் அச்சம்;
பிழையுயிர் எய்தின் பெரும்பேர் அச்சம்;
குடிபுரவுண்டும் கொடுங்கோல் அஞ்சி
மன்பதை காக்கும் நன்குடிப் பிறத்தல்
துன்ப மல்லது தொழுதகவு இல். (சிலம்பு, காட்சி. 100-104)

(நாட்டில் மழை வளங்குறையினும், உயிர்களுக்கு வேறு எத்தகைய துன்பம் வரினும், செங்கோல் பிழையாமல் ஆட்சி செய்யும் மன்னர் குடியில் மகனாய்ப் பிறத்தல் பெருந்துன்பமே அல்லது, விரும்பத்தக்கது அன்று)

இவ்வடிகள் அரசன் தன் வாழ்க்கையை எவ்வாறு நினைத்தான் என்பதை அறிவிக்கும். மன்னர்களாகப் பிறந்தது பிறர் பொருளைச் சுரண்டிச் சுகமடைவதற் காகவே என்று நினைக்கும் இந்நாளில், இவ்வடிகள் சிறிது மன அமைதியை அளிக்கின்றன. மேலே கூறிய இவை நீங்க ஏனைய துன்பங்களும் வராமல் தமிழ் மன்னர் காத்து வந்தனர்.

ஐம்பெருங்குழு:

“ஆசான் பெருங்கணி அருந்திறல் அமைச்சர்
தானைத் தலைவர் தம்மொடு குழீஇ” (சிலம்பு)

அறங்கூர் அவையம், நாற்பெருங்குழு போன்ற குழுக்கள் அறங்களை அரசனுக்குக் கற்பித்தன என்ற செய்தி மதுரைக்காஞ்சியில் உள்ளது.

“அச்சமும் அவலமும் ஆர்வமும் நீங்கி
செற்றமும் உவகையும் செய்யாது காத்து
ஞெமன் கோல் அன்ன செம்மைத்து ஆகி
சிறந்த கொள்கை அறம் கூறு அவையம்” (மதுரைக்காஞ்சி 489-493)

“மழை ஒழுக்கு அறாஅப் பிழையா விளையுள்
பழையன் மோகூர் அவையகம் விளங்க
நான்மொழிக் கோசர் தோன்றியன்ன
தாம் மேஎந் தோன்றிய நாற்பெருங்குழுவும்” (மதுரைக்காஞ்சி,507-510)

என்ற பகுதி நாற்பெருங்குழுவின் நேர்மையைக் காட்டுகின்றது.

அறனறிந்து மூத்த அறிவுடையார் கேண்மை
திறனறிந்து தேர்ந்து கொளல். (441)

அறம் உணர்ந்தவராய்த் தன்னை விட மூத்தவராய் உள்ள அறிவுடையவரின் நட்பை, கொள்ளும் வகை அறிந்து ஆராய்ந்து கொள்ள வேண்டும்.

உற்றநோய் நீக்கி உறாஅமை முற்காக்கும்
பெற்றியார்ப் பேணிக் கொளல். (442)
வந்துள்ள துன்பத்தை நீக்கி, இனித் துன்பம் வராதபடி முன்னதாகவே காக்கவல்ல தன்மையுடையவரைப் போற்றி நட்புக் கொள்ள வேண்டும்.

அரியவற்று ளெல்லாம் அரிதே பெரியாரைப்
பேணித் தமராக் கொளல். (443)
பெரியாரைப் போற்றி தமக்குச் சுற்றத்தாராக்கிக் கொள்ளுதல், பெறத்தக்க அரிய பேறுகள் எல்லாவற்றிலும் அருமையானதாகும்.

தம்மிற் பெரியார் தமரா ஒழுகுதல்
வன்மையு ளெல்லாந் தலை. (444)
தம்மைவிட (அறிவு முதலியவற்றால் ) பெரியவர் தமக்குச் சுற்றத்தராகுமாறு நடத்தல், வல்லமை எல்லாவற்றிலும் சிறந்ததாகும்.

சூழ்வார்கண் ணாக ஒழுகலான் மன்னவன்
சூழ்வாரைக் சூழ்ந்து கொளல். (445)
தக்க வழிகளை ஆராய்ந்து கூறும் அறிஞரையே உலகம் கண்ணாகக் கொண்டு நடத்தலால், மன்னவனும் அத்தகையாரைக் ஆராய்ந்து நட்புக்கொள்ள வேண்டும்.

தக்கா ரினத்தனாய்த் தானொழுக வல்லானைச்
செற்றார் செயக்கிடந்த தில். (446)
தக்க பெரியாரின் கூட்டத்தில் உள்ளனவாய் நடக்கவல்ல ஒருவனுக்கு,அவனுடைய பகைவர் செய்யக்கூடியத் தீங்கு ஒன்றும் இல்லை.

இடிக்குந் துணையாரை யாள்வரை யாரே
கெடுக்குந் தகைமை யவர். (447)
கடிந்து அறிவுரை கூறவல்ல பெரியாரின் துணை கொண்டு நடப்பவரை கெடுக்கும் ஆற்றல் உள்ளவர் எவர் இருக்கின்றனர்.

இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்
கெடுப்பா ரிலானுங் கெடும். (448)
கடிந்து அறிவுரைக் கூறும் பெரியாரின் துணை இல்லாதக் காவலற்ற அரசன், தன்னைக் கெடுக்கும் பகைவர் எவரும் இல்லாவிட்டாலும் கெடுவான்.

முதலிலார்க்கு ஊதிய மில்லை மதலையாஞ்
சார்பிலார்க் கில்லை நிலை. (449)
முதல் இல்லாத வணிகர்க்கு அதனால் வரும் ஊதியம் இல்லை, அதுபோல் தம்மைத் தாங்கிக் காப்பாற்றும் துணை இல்லாதவர்க்கு நிலைபேறு இல்லை.

பல்லார் பகைகொளலிற் பத்தடுத்த தீமைத்தே
நல்லார் தொடர்கை விடல். (450)
நல்லவராகிய பெரியாரின் தொடர்பைக் கைவிடுதல் பலருடைய பகையைத் தேடிக்கொள்வதைவிடப் பத்து மடங்கு தீமை உடையதாகும்.

https://scroll.in/article/882391/lateral-entry-is-the-government-of-india-being-privatised

https://economictimes.indiatimes.com/news/economy/policy/raghuram-rajan-reminds-sitharaman-two-third-of-his-tenure-as-rbi-governor-was-under-bjp/articleshow/71835875.cms?from=mdr

https://www.thehindu.com/news/national/tamil-nadu/why-have-you-not-suspended-ex-special-dgp-hc-asks-govt/article34057372.ece

https://thewire.in/law/supreme-court-modi-years

https://www.degruyter.com/document/doi/10.1515/lehr-2020-2009/html

https://ruralindiaonline.org/en/articles/and-you-thought-its-only-about-farmers/?gclid=CjwKCAiA4rGCBhAQEiwAelVti0rxea_yFOp_DuY4i1ingPq5zyI9OinrQoLs5MJT5JdtyOespY-cdxoC0pwQAvD_BwE

நன்றிக்குரியோர்:
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%90%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81

http://www.muthukamalam.com/essay/literature/p79.html

Standard

Leave a comment