தமிழ்

திருவள்ளுவர் கூறும் பெருமை(98)

ஒளிஒருவற்கு உள்ள வெறுக்கை இளிஒருவற்கு
அஃதிறந்து வாழ்தும் எனல். (971)

ஒருவனுக்கு ஒளி ஊக்கமிகுதியே ஆகும், ஒருவனுக்கு இழிவு அந்த ஊக்கம் இல்லாமலேயே உயிர்வாழலாம் என்று எண்ணுதலாம்.

ஊக்கமே முதன்மை!

உடைய ரெனப்படுவது ஊக்கம்! 591

உள்ளம் உடைமை உடைமை பொருளுடைமை
நில்லாது நீங்கி விடும் 592

வெள்ளத்தனைய மலர்நீட்டம் மாந்தர்தம்
உள்ளத் தனையது உயர்வு 595

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமை யான். (972)

எல்லா உயிர்க்கும் பிறப்பு ஒருத் தன்மையானதே, ஆயினும் செய்கின்ற தொழில்களின் உயர்வு தாழ்வு வேறுபாடுகளால் சிறப்பியல்பு ஒத்திருப்பதில்லை.

மேலிருந்தும் மேலல்லார் மேலல்லர் கீழிருந்தும்
கீழல்லார் கீழல் லவர். (973)

மேல்நிலையில் இருந்தாலும் மேன்மைப் பண்பு இல்லாதவர் மேலானவர் அல்லர், கீழ் நிலையில் இருந்தாலும் இழிகுணம் இல்லாதவர் கீழ் மக்கள் அல்லர்.

ஒருமை மகளிரே போலப் பெருமையும்
தன்னைத்தான் கொண்டொழுகின் உண்டு. (974)

ஒரு தன்மையான கற்புடைய மகளிரைப்போல் பெருமைப் பண்பும் ஒருவன் தன்னைத் தான் காத்துக் கொண்டு நடந்தால் உளதாகும்.

பெண்ணின் பெருந்தக்க யாவுள கற்பென்னும்
திண்மைஉண் டாகப் பெறின். 54

சிறைகாக்கும் காப்பெவன் செய்யும் மகளிர்
நிறைகாக்கும் காப்பே தலை. 57

பெருமை யுடையவர் ஆற்றுவார் ஆற்றின்
அருமை உடைய செயல். (975)

பெருமைப் பண்பு உடையவர் செய்வதற்கு அருமையானச் செயலைச் செய்வதற்கு உரிய நெறியில் செய்து முடிக்க வல்லவர் ஆவர்.

சிறியார் உணர்ச்சியுள் இல்லை பெரியாரைப்
பேணிக்கொள் வேம்என்னும் நோக்கு. (976)

பெரியாரை விரும்பிப் போற்றுவோம் எண்ணும் உயர்ந்த நோக்கம், அவருடைய சிறப்பை உணராத சிறியோரின் உணர்ச்சியில் இல்லை.

அறனறிந்து மூத்த அறிவுடையார் கேண்மை
திறனறிந்து தேர்ந்து கொளல் 441

பல்லார் பகைகொளலின் பத்தடுத்த தீமைத்தே
நல்லார் தொடர்கை விடல் 450

இறப்பே புரிந்த தொழிற்றாம் சிறப்புந்தான்
சீரல் லவர்கண் படின். (977)

சிறப்பு நிலையும் தனக்கு பொருந்தாத சீரற்ற கீழ் மக்களிடம் ஏற்பட்டால், வரம்பு மீறிய செயலை உடையதாகும்.

செறிவறிந்து சீர்மை பயக்கும் அறிவறிந்து
ஆற்றின் அடங்கப் பெறின். 123

அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை
ஆரிருள் உய்த்து விடும் 121

பணியுமாம் என்றும் பெருமை சிறுமை
அணியுமாம் தன்னை வியந்து. (978)

பெருமைப் பண்பு எக்காலத்திலும் பணிந்து நடக்கும், ஆனால் சிறுமையோ தன்னைத் தானே வியந்துப் பாராட்டிக் கொள்ளும்.

கருப்பு ஊதுபை – காவி ஊதுபை – கதை
பெருமை என்பது வெளியே என்ன தெரிகிறது என்பதில்லை; உள்ளே என்ன இருக்கிறது என்பதைப் பொறுத்தது!

பெருமை பெருமிதம் இன்மை சிறுமை
பெருமிதம் ஊர்ந்து விடல். (979)

பெருமை பண்பு செருக்கு இல்லாமல் வாழ்தல், சிறுமையோ செருக்கே மிகுந்து அதன் எல்லையில் நின்று விடுவதாகும்.

அற்றம் மறைக்கும் பெருமை சிறுமைதான்
குற்றமே கூறி விடும். (980)

பெருமைப் பண்பு பிறருடைய குறைப்பாட்டை மறைக்கும், சிறுமையோ பிறருடைய குற்றத்தையே எடுத்துச் சொல்லிவிடும்.

குணம்நாடிக் குற்றமும் நாடி அவற்றுள்
மிகைநாடி மிக்க கொளல். 504

Standard
தமிழ்

திருவள்ளுவர் கூறும் பிறனில் விழையாமை

அனைவருக்கும் வணக்கம். பிறனில் விழையாமையைப் பார்ப்பதற்கு முன் சில அடிப்படைக் கேள்விகளை நம்முன் எழுப்ப வேண்டியிருக்கிறது.

  1. கற்பு என்றால் என்ன?
  2. இதைக் கட்டாயம் பேண வேண்டுமா?
  3. அப்படிப் பேண வேண்டும் என்றால், யார் பேண வேண்டும்? ஆண்களா? பெண்களா?

இந்தக் கேள்விகளுக்கு விடை தேட வேண்டிய நிலையில் தான் நாம் இருக்கிறோம். ஏன் இந்தக் கேள்விகளுக்கு விடை தேடவேண்டிய நிலையில் இருக்கிறோம்? ஏனென்றால்,

  1. கற்பு என்பது மனிதர்கள் கடைப்பிடிக்க வேண்டிய வாழ்வியல் விழுமியம் என்று தமிழ் சொல்கிறது. (தமிழ் மட்டும் தான் சொல்கிறது!)
  2. கற்பு என்னும் பெயரில் பெண்களை அடக்கி ஆள்கிறீர்கள். பெண்ணடிமைத் தனத்தின் இன்னொரு பெயரே கற்பு என்று முற்போக்குவாதிகளாக அறியப்படுபவர்கள் கூடச் சொல்கிறார்கள்.

இப்படியாக, இங்கு ஒரு முரண் நிலவுகிறது. கற்பு கடைப்பிடிக்கப்பட வேண்டிய வாழ்வியல் விழுமியம் என்றால் அது பெண்ணடிமைத் தனம் ஆகாது. கற்பு என்பது பெண்ணடிமைத்தனம் என்றால், தமிழும் தமிழ் சார்ந்த வரலாறும் ஆண் சார்பு நிலை மொழியும் வரலாறும் என்னும் பார்வை கிடைக்கும். ஒரு வேளை, தமிழ் பெண்ணடிமைத்தனத்தை ஊக்குவிக்கும் மொழி என்பதை ஏற்றுக் கொண்டால்,

வீட்டுக்குள்ளே பெண்ணைப் பூட்டி வைப்போம் என்னும்
விந்தை மனிதர் தலை கவிழ்ந்தார்

என்றும்,
நல்ல விலை கொண்டு நாயை விற்பார் – அந்த
நாயிடம் யோசனை கேட்பதுண்டோ?

என்று பெண்ணடிமைத்தனத்திற்கு எதிரான குரலை எழுப்பிய பாட்டுக்கொரு புலவன் பாரதி, எப்படி,

“யா மறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல்

இனி தாவது எங்கும் காணோம்”

என்று பாடினான் என்னும் கேள்வியும் இயல்பாகவே எழுந்து விடுகிறது. இத்தனை கேள்விகளுக்கும் மொத்தமாக விடை தேட முடியுமா என்று தெரியவில்லை. ஆனாலும் தேடலின் தேவை இருக்கிறது என்பதை நண்பர்கள் இப்போது உணர்ந்திருப்பீர்கள். ‘தேடல் தானே விடியல் தரும்’ – வாருங்கள் – தேடுவோம்!

கற்பு என்றால் என்ன?

முதலில் கற்பு என்றால் என்ன என்று பார்த்து விடுவோம். கற்பு என்பதற்குத் தமிழ் கொடுக்கும் விளக்கம் என்ன? ‘அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்’, ‘ஆலயம் தொழுவது சாலவும் நன்று’ என்று நமக்குச் சொல்லிக் கொடுத்த ஒளவையார், அதே கொன்றை வேந்தனில் கற்பு என்பதற்கும் விளக்கம் கொடுக்கிறார். என்ன தெரியுமா?
‘கற்பெனப் படுவது சொல் திறம்பாமை’

திறம்பல் என்றால் என்ன? மாறுபடுதல் என்று பொருள். இந்த வார்த்தையைத் தான், அறிவியலில், திறம்பல் உணர்திறன் என்று Deflection என்னும் கலைச்சொல்லுக்குப் பயன்படுத்துகிறார்கள். திறம்பாமை – மாறுபடாமை. சொன்ன சொல்லை மாற்றிப் பேசக் கூடாது. இது தான் கற்பு! சொன்ன சொல்லை மாற்றிப் பேசக் கூடாது என்றால் இது புற வாழ்க்கைக்குச் சொல்கிறீர்களா? என்று கேட்டால், இல்லை! கற்பை வலியுறுத்துவது அகவாழ்க்கையில்!

அதென்ன – புற வாழ்க்கை – அக வாழ்க்கை! புறம் என்பது வெளி வாழ்க்கை! அகம் என்பது உள் வாழ்க்கை! ஆணும் பெண்ணும் இணைந்து வாழும் வாழ்க்கை. அந்த அகவாழ்க்கைக்குச் சொல்லும் அறிவுரை தான் – கற்பைப் பேண வேண்டும் என்னும் அறிவுரை.

நின்ற சொல்லர் நீடுதோறு இனியர்

என்று தலைவி, தலைவனைச் சொல்வதாகக் கபிலரின் சங்கப்பாடல் (நற்றிணை 1) பாடுகிறது. தலைவனுக்கு உரிய குணங்களுள் நின்ற சொல்லராக இருப்பது முதன்மையானது என்பது இதன் வழி நமக்குத் தெரிகிறது.

சரி, இப்போது அடுத்த கேள்வி வந்து விடுகிறது. அக வாழ்க்கையில் ஆணும் பெண்ணும் சமம் தானே! சூழல் காரணமாகவோ இயற்கையான உடல் வலு காரணமாகவோ ஆண் பொருள் தேடுவதும் இயற்கையான நுண்திறன் உணர்வு காரணமாகவோ தொடர் உழைப்பைக் கொடுப்பதில் ஆணை விஞ்சி நிற்கும் காரணத்தாலோ பெண் தேடிய பொருளைப் பாதுகாத்து, குடும்பத்திற்குத் தலைமை ஏற்கும் பொறுப்பிலும் இயல்பாக நிற்கின்றன. இருவரின் வேலையும் திறனும் வெவ்வேறாக இருந்தாலும் ‘இரண்டும் சேர்ந்தால் தான் குடும்பம்’ என்பதே இயல்பு நிலை. மாட்டு வண்டியின் இரு காளைகளைப் போல, இருவரும் சேர்ந்து இழுக்கும் வண்டியாகக் குடும்ப அமைப்பு முறை இருக்கிறது.

கற்பு – ஆணுக்கா? பெண்ணுக்கா?

நிற்க. இது வரை பார்த்ததில் இருந்து, ஆணும் பெண்ணும் சமமான நிலையில் தான் குடும்ப வாழ்க்கையில் இருக்கிறார்கள் என்பதை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது அல்லவா? அப்படியானால் ‘கற்பு எனப்படுவது சொல் திறம்பாமை’ என்னும் அறிவுரை யாருக்கு? ஆணுக்கா? பெண்ணுக்கா? இருவரும் சமம் என்றால், இந்த அறிவுரை இருவருக்கும் பொருந்துவது தானே, சரியாக இருக்கும்! எனவே, கற்பு என்பது இருபாலருக்கும் உரியது என்பதை முதலில் தெளிவு படுத்திக் கொள்ள வேண்டும்.

இப்போது இன்னும் சில கேள்விகள் எழுந்து விடுகின்றன.

  1. கற்பு என்பது இரு பாலர்க்கும் உரியது என்று சொல்கிறீர்கள். ஆனால், கோவலன் கண்ணகி கதை முதலிய கதைகளில் எல்லாம் ஆண் – அதை மீறியிருப்பது கண் கூடாகத் தெரிகிறதே! இதை எப்படிப் பார்ப்பது?
    வரலாற்றை இரண்டு நிலைகளில் பார்க்கலாம். வரலாற்றின் இரண்டு நிலைகள் என்றவுடன் கி.மு., கி.பி., தானே! என்று நினைக்கிறீர்களா? அதுவும் இரண்டு நிலை தான்! இயேசு பெருமான் வருகைக்கு முன், ‘உலகத்தைப் படைத்த ஒரே கடவுள்’ என்னும் நிலை இல்லாத, திணைக்கு ஒரு தெய்வத்தை வணங்கிய நிலையையும் அதன் பிறகு, உலகைப் படைத்த ஒரே கடவுள் என்னும் கோட்பாடு நிலை பெறுவதையும் பார்க்கும் இறையியல் நிலை அது!

இங்கே நாம் பார்க்கவிருப்பது – பெண்வழிச் சமூகம், ஆண்வழிச் சமூகம் என்னும் இரு நிலைகளைத் தான்! அதென்ன பெண் வழிச் சமூகம், ஆண் வழிச் சமூகம் – இப்படி ஒரு வார்த்தையையே இப்போது தான் பார்க்கிறேன், கேள்விப்படுகிறேன் என்கிறீர்களா? அப்படியானால், நீங்களும் நானும் சரியான கூட்டாளி தான்! வாருங்கள் தொடர்ந்து பேசுவோம்.

சிந்து வெளி நாகரிகம் தமிழருடையது – எளிதாக நிறுவுவது எப்படி?

சிந்து வெளி நாகரிகம் தமிழருடையது என்பது உங்களுக்குத் தெரியும் அல்லவா? இல்லையே! அதை சரஸ்வதி நாகரிகம், வேத நாகரிகம் என்று சிலர் சொல்கிறார்களே! என்றும் நீங்கள் இப்போது கேட்கலாம். சிந்து வெளி நாகரிகம் தமிழருடையது என்பதற்கு அங்குக் கிடைத்திருக்கும் தாய்த் தெய்வச் சிற்பங்களே சான்று! தாய்த் தெய்வச் சிற்பத்திற்கும் தாய்த்தமிழுக்கும் என்ன தொடர்பு? என்று தானே கேட்க வருகிறீர்கள்? கொஞ்சம் பொறுங்கள். அதையும் பேசி விடுவோம்.

வேத இலக்கியங்களில் ஒரே ஓரிடத்தில் தான் பெண் தெய்வம் பேசப்படுகிறாள். அவள் பெயர் ஷ்ரி. அவளும் ஒரு துணைக்கடவுள். ஆனால், சிந்து வெளியில் தோண்டிய இடங்களில் எல்லாம் 100க்கு 80 பெண்தெய்வச் சிற்பங்கள் கிடைத்தன. நம்முடைய சங்க இலக்கியத்தை எடுத்துப் பாருங்கள் – கொற்றவை, அணங்கு என்று பெண் தெய்வங்கள் பற்றிய குறிப்புகள் இருக்கின்றன. இந்தியாவின் எந்தச் சிற்றூருக்குப் போய்ப்பார்த்தாலும் சரி, அந்தக் கிராமத்தின் கடவுள் தேவதை தான்! வேத இலக்கியங்களில் பெண் தெய்வங்களே பேசப்படாத சூழலில், இந்தத் தேவதை எங்கிருந்து வந்தாள்? சங்க இலக்கியத்தில் தாய்த் தெய்வம் இருக்கிறது.

எல்லாம் சரி! இப்போது எதற்காகச் சிந்து வெளி, அங்கிருந்த பெண் தெய்வ வழிபாடு பற்றிப் பேசிக் கொண்டிருக்கிறோம்? ஏன் தெரியுமா? சிந்து வெளி நாகரிகம் முதலிய நாகரிகங்களில் பெண்கள் உயர்வான நிலையில் வைக்கப்பட்டிருந்தார்கள். ஆணும் பெண்ணும் சமம் தானே! பிறகேன் பெண்ணை முதன்மைப்படுத்த வேண்டும்? ஏனென்றால் பெண் தான் உயிரைக் கருவாக்கும், சமூகத்தை உருவாக்கும் இயல்பைப் பெற்றிருக்கிறாள். படைக்கும் தொழிலைச் செய்வதால், பெண்ணுக்கு அங்கே முதன்மை இருந்தது. இதைத் தான் பெண் வழிச் சமூகம் என்கிறோம்.

திருமணத்திற்குப் பின் மணப்பெண் வீட்டில் குடியேறும் ஆண்கள் – தமிழ்நாட்டில் எங்கே?

இன்றைக்கும் நெல்லை மாவட்டத்தில் ‘நன்குடி வேளாளர்’ என்று ஒரு பிரிவு மக்கள், தாய்வழிச் சமூகமாக இருக்கிறார்கள். அவர்களுடைய சமூகத்தில் திருமணமான உடன், ஆண் – பெண் வீட்டிற்குச் சென்று விடுவான். சொத்துகள் அனைத்தும் பெண் குழந்தைகளுக்குத் தான்! ஆணின் சொந்த ஊராகத் தன் தாயின் ஊரைச் சொல்வான். இப்படிப்பட்ட வரலாற்று எச்சங்கள் இப்போதும் இருக்கின்றன. தாய்வழிச் சமூகத்தின் இன்னோர் எச்சம் தான் – தாய் மாமனுக்குத் தந்தைக்கு நிகரான மதிப்பைக் கொடுப்பது! தாயுடன் பிறந்தவனுக்குக் கொடுக்கப்படும் அதே மதிப்பு, தந்தையுடன் பிறந்தவனுக்கு ஏன் இல்லை என்பதைச் சிந்தித்துப் பாருங்களேன் – தாய் வழிச் சமூகத்தின் வரலாறு விளக்கமாகப் புரியும்.

பிறகு வரலாறு மெல்ல மாறுகிறது. மனிதர்கள் உலகம் எங்கும் பயணிக்கத் தொடங்குகிறார்கள். உலகம் எங்கும் பயணிக்கத் தொடங்கும் போது, இயற்கையுடன் பல இடங்களில் மல்லுக்கட்டி நிற்க வேண்டியிருக்கிறது. தமிழகத்தைப் போல், ஒரே ஒரு கைத்தறித் துண்டுடன் ஆண்டில் எல்லா நாட்களிலும் தூங்கி விட, உலகத்தின் மற்ற பகுதிகளில் முடியுமா என்ன? அதனால் தானே, வெளிநாட்டு மனிதர்கள், குளிரூட்டி, வெதுப்பி என்று கண்டுபிடிக்கத் தொடங்குகிறார்கள். தேவை தானே – கண்டுபிடிப்பின் தாய்! (சரி, அந்தத் தலைப்புக்குள் போய் விட வேண்டாம்! நாம் திரும்பவும் சமூகம் பற்றிய பேச்சுக்கே வந்து விடுவோம்!)

இப்படி உலகம் எங்கும் பயணித்து குடியேற்றங்களை அமைக்கும் போது, இயல்பாகவே தன் உடலமைப்புக் காரணமாகப் பெண் பின்னுக்குத் தள்ளப்படுவது நிகழ்ந்து விடுகிறது. பொருள் தேடுவது, குடிகளை அமைப்பது என ஆணின் கை ஓங்குகிறது. ஆணின் கை ஓங்குகிறது என்று சொல்வதால், பெண் இவற்றில் பங்கெடுத்துக் கொள்ளவே இல்லை என்று நினைத்து விடாதீர்கள். இன்றைக்கும் வயல்களில் ஆண்களுக்கு இணையாகப் பெண்கள் வேலை செய்து கொண்டு தான் இருக்கிறார்கள். பாலினச் சமத்துவம் பேசும் படித்தவர்கள் தாம், பெண்களைக் குறைவான சம்பளத்தில் அமர்த்தும் தவற்றைச் செய்து கொண்டிருக்கிறார்கள். பெண்களுக்குப் போதுமான சம்பளம் கொடுக்காமல் இருப்பது, அவர்களுக்கு உரிய உரிமைகளான குழந்தைப் பேறு விடுமுறை ஆகியவற்றைச் சலுகை போலப் பேசுவது, பதவி உயர்வு போன்றவற்றில் இவற்றையே காரணம் காட்டிப் பெண்களைப் புறம் தள்ளுவது – இவற்றை எல்லாம் படிக்காத பாமரர்களா செய்து கொண்டிருக்கிறார்கள்? படித்தவர்களுக்கு மட்டுமே வேலை தரும் பன்னாட்டு நிறுவனங்கள் அல்லவா – இவற்றை எல்லாம் செய்து கொண்டிருக்கிறார்கள்! (சரி, சரி, இந்தத் தலைப்புக்குள்ளும் போய் விட வேண்டாம்! நாம் திரும்பவும் சமூகம் பற்றிய பேச்சுக்கே வந்து விடுவோம்!)

இப்படித் தான் ஆண் வழிச் சமூகமாக மெல்லச் சமூகம் மாறுகிறது. இப்படி ஆண் வழிச் சமூகமாக மாறிய நிலையில் போர் வயின் பிரிதல், பொருள்வயின் பிரிதல், என்று போருக்காக, பொருளுக்காக என்று ஆண், குடும்பத்தை விட்டுப் பல நாட்கள் விலகியிருக்கும் சூழல் இயல்பாகவே வந்து விடுகிறது. பெண் தலைமை தாங்கிய சமூகத்தில், பெண்ணின் உடல் வலு காரணமாகப் பல்வேறு இடங்களுக்குச் சுற்றித் திரிவது என்பது இயல்பாகவே இருந்திருக்காது அல்லவா! ஆனால், ஆண் தலைமைக்கு வரும் சமூகத்தில் குடும்பங்களில் இருந்து ஏதோ ஒரு காரணத்திற்காக, விலகி நின்று வேலை செய்வது என்பது இயல்பான ஒன்றாக மாறி விட்டது.

இப்படி மாறிய பின்னர், இயற்கையான தேவையாகிய உடல் இன்பத்தைத் தீர்ப்பதற்கான மாற்று வழிகளில் ஆண் சமூகம் ஈடுபடத் தொடங்குகிறது. உடல் இன்பம் என்பது இரு பாலருக்கும் உரியது தானே! ஆண் மட்டும் இப்படித் தவறிழைக்கலாமா என்று நீங்கள் கேட்கலாம். அப்படிக் கேட்பது சரியானதும் கூட! ஆனால், பொருள் காரணமாக, போர் காரணமாக ஆண் தான் வேறிடத்தில் இருக்கிறான். பெண் தன்னுடைய சமூகத்துடனே வாழ்க்கையைச் செலுத்துகிறாள். அதே சமூகத்தில் இருக்கும் ஒருவரை விட, வேற்றூருக்குக் குடி பெயர்ந்த தனி மனிதன், தவறு இழைப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் என்பதும் அதில் ஆண், பெண் வேறுபாடு பார்ப்பதை விட, அவனுடைய சிக்கலைப் புரிந்து கொள்வதும் தானே சரியான பார்வையாக இருக்க முடியும்? இந்தச் சரியான பார்வையைக் கொண்டிருந்ததால் தான்,

அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாவதும்‘ என்று சொல்லி நிற்காமல்,
உரைசால் பத்தினிக்கு உயர்ந்தோர் ஏத்தலும்

என்று கற்போடு வாழும் பெண்களை உயர்ந்தோர் புகழ்வார்கள் என்று சொல்கிறது சிலப்பதிகாரம். கோவலன், கண்ணகியை மதுரைக்குக் கூட்டி வரும் போது, “வண்ணச் சீரடி மண்மகள் அறிந்திலள்” என்று எழுதுகிறார் இளங்கோவடிகள். கண்ணகியின் வண்ணச் சீர் அடிகளை, மண்மகளுக்குத் தெரியாது. ஏன் தெரியாது? ஏனென்றால், ஆண் தான் குடும்பத்தைப் பிரிவான். பெண் பிரியவில்லை. எனவே, அவள் வீட்டை விட்டு வெளியே வரவில்லை என்பது பொருள்.


கண்ணகியை விட்டு, மாதவியிடம் போய்த் திரும்பவும் கண்ணகியிடம் வந்த பின், கோவலன் கண்ணகியிடம் மட்டும் தனியாக மன்னிப்பு கேட்கவில்லை. அப்படிக் கேட்டிருந்தால், மனைவியை மயக்கும் வித்தையை அறிந்தவனாக மட்டுமே கோவலன் அறியப்பட்டிருப்பான். சமணப் பெண் துறவியாகிய கவுந்தியடிகளிடமும், தான் செய்வது சிறுமைப்படுத்தும் செயல் என்று கூறுகிறான்.
கோவலன் சென்று, கொள்கையின் இருந்த
கவுந்தி ஐயையைக் கைதொழுது ஏத்தி,
நெறியின் நீங்கியோர் நீர்மையேன் ஆகி
நறுமலர் மேனி நடுங்கு துயர் எய்த
அறியாத் தேயத்து ஆர் இடை உழந்து
சிறுமை உற்றேன், செய் தவத்தீர்!யான்:’
(ஊர் காண் காதை – சிலப்பதிகாரம்)

இப்படித்தான், கோவலன் தன்னைக் கவுந்தியடிகளிடம் அறிமுகப்படுத்திக் கொள்கிறான். எனவே, மனையாளைப் பிரிந்து இன்னொரு பெண்ணிடம் சென்றது சிறுமைத் தனம் என்னும் உணர்வு கோவலனுக்கு இருந்ததை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது.

இராமாயணம் முதலிய காப்பியங்கள் ஆணின் கற்பொழுக்கத்தை நிலை நிறுத்திச் சிறப்பிக்கின்றன. ஆணின் கற்பொழுக்கத்தைப் பேசத் தொடங்கி விட்டாலே வரலாற்றுப் பார்வையில் நாம் என்ன சொல்லலாம்? இவை மிக மிகப் பழம்பெரும் காப்பியங்கள் அல்ல! அதாவது, பெண் வழிச் சமூகம் நிலை பெற்றிருந்த காலத்திற்குப் பின்னர் எழுதப்பட்ட காப்பியங்கள் தாம் இவை! எனவே தான், ஆணின் வாழ்க்கையைச் சிறப்பிக்கின்றன. இந்தப் பார்வையும் சரி தானே! (இராமன் எப்படி அவதாரமானான்? வால்மீகி இராமனை எப்படிக் காட்டுகிறார்? கம்பர் அதை எப்படி மாற்றுகிறார்? என்பதெல்லாம் ஒரு தனிக் கதை! அதை இன்னொரு நாள் பேசலாம்!)

இது வரை பேசியதோடு நிறுத்திக் கொள்வோம். இப்படித் தான், ஆண் ஆதிக்க நிலைக்கு வந்திருக்கிறான் என்பது புரிந்து விட்டது அல்லவா! அது போதும்!

இப்போது வரை,

  1. கற்பு என்றால் என்ன?
  2. அது இரு பாலருக்கும் உரியதா?
  3. தமிழ் – கற்பைப் போற்றுகிறதா?

என்பதை விரிவாகப் பார்த்து விட்டோம். ஆனாலும் முற்போக்குச் சிந்தனையாளர்களாக அறியப்படும் சிலர் இப்போது என்ன பேசத் தொடங்கி விட்டார்கள்? ‘கற்பு’ என்று சொல்லிச் சொல்லியே நீங்கள் ஆணாதிக்கத்தை வளர்த்தெடுக்கிறீர்கள். கற்பு என்னும் கற்பிதமே பொய்! அது தேவையற்றது! பெண் விடுதலைக்கு எதிரானது! என்று வாதிடுகிறார்கள். சாதிப் பிடிப்புக் கொண்டவர்கள், மதத்தின் மீது மதம் கொண்டவர்கள், படிக்காதவர்கள் – இந்தக் கருத்தை முன் வைத்தால், ‘பிதாவே, இவர்கள் செய்வது இன்னதென்று தெரியாமல் செய்கிறார்கள். இவர்களை மன்னியும்’ என்று அவர்களைப் புறம் தள்ளி விடலாம். இந்தக் கேள்விகளை முன் வைப்பவர்களுள் பலர், சமுதாயத்திற்குப் பலவாறு பலன் தரும் ‘உள்ளூர்ப் பழுத்த மரமாக’ இருக்கிறார்கள். மக்களுக்கான அரசியலைப் பேசுபவர்களாக இருக்கிறார்கள். எனவே அவர்களைப் புறம் தள்ளக் கூடாது அல்லவா! வாருங்கள் – விவாதிப்போம்!

கற்பைக் கைவிட்டால் என்ன தப்பு?

ஒருவனுக்கு ஒருத்தி என்று வாழ்வது தமிழ்ப் பண்பாடு. இது உங்களுக்குத் தெரியும். ஒரு சிறுவனோ ஓர் இளைஞனோ நம்மிடம் வந்து ‘இந்தப் பண்பாட்டை நான் மீறினால் என்ன தவறு? நீங்கள் மட்டும் பண்பாட்டில் உள்ள எல்லாவற்றையுமா கடைப்பிடிக்கிறீர்கள்?’ என்று கேட்டால் என்ன பதில் சொல்வது? இதற்கான விடையைத் தேடி, இளைஞர் ஏற்றுக்கொள்ளும் வகையில் சொல்ல வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது அல்லவா? வாருங்கள், தொடர்வோம், தேடுவோம். தேடினால் தானே கண்டடைய முடியும்! தட்டினால் தானே திறக்கும்!

காதல், கல்யாணம், கள்ளக்காதல்:

காதல் என்பது என்ன? வயது வந்த ஆணும் பெண்ணும் உள்ளமும் உள்ளமும் கலப்பது தான் காதல் – சரி தானே! கல்யாணம் என்பது என்ன? கல்யாணம் என்னும் வடமொழிச்சொல்லுக்கு உலக நன்மை என்று பொருள். திருமணம் என்பதும் அதைத் தான்! கல்யாணம் என்பது என்ன? உள்ளத்தால் கலந்த இருவர் உடலாலும் கலப்பது தானே திருமணம்! கள்ளக் காதல் என்பது என்ன? உள்ளத்தால் ஒருவருடன் இணைந்த பிறகு, உடலை மட்டும் வேறொருவருடன் இணைவது தானே கள்ளக் காதல்! அதைத் தான் பிறனில் விழையாமை என்கிறார் திருவள்ளுவர்.

பிறன்பொருளாள் பெட்டொழுகும் பேதைமை ஞாலத்து
அறம்பொருள் கண்டார்கண் இல். (141)

இவ்வுலகில் அறத்தையும், பொருளையும் கற்று அறிந்தவரிடம் அடுத்தவனின் உரிமை ஆகிய மனைவி மீது ஆசைப்பட்டு வாழும் அறியாமை இல்லை.

அறன்கடை நின்றாருள் எல்லாம் பிறன்கடை
நின்றாரின் பேதையார் இல். (142)

அறத்தை விட்டுத் தீநெறியில் நின்றவர் எல்லாரிலும் பிறன் மனைவியை விரும்பி அவனுடைய வாயிலில் சென்று நின்றவரைப் போல் அறிவிலிகள் இல்லை.

விளிந்தாரின் வேறல்லர் மன்ற தெளிந்தாரில்
தீமை புரிந்துதொழுகு வார். (143)

நம்பி பழகியவர் வீட்டில், அவரது மனைவியிடம் தகாத செயலில் ஈடுபட முனைகிறவன், உயிர் இருந்தும் பிணத்திற்கு ஒப்பானவனேயாவான்.

எனைத்துணையர் ஆயினும் என்னாம் தினைத்துணையும்
தேரான் பிறனில் புகல். (144)

தினையளவும் ஆராய்ந்து பார்க்காமல் பிறனுடைய மனைவியிடம் செல்லுதல், எவ்வளவு பெருமையை உடையவராயினும் என்னவாக முடியும்?.

எளிதென இல்லிறப்பான் எய்துமெஞ் ஞான்றும்
விளியாது நிற்கும் பழி. (145)

எளிதாக அடையலாம் என எண்ணிப் பிறனுடைய மனைவியிடம் முறைகேடாக நடப்பவன் என்றும் அழியாத பழிக்கு ஆளாவான்.

பகைபாவம் அச்சம் பழியென நான்கும்
இகவாவாம் இல்லிறப்பான் கண்.(146)

பகை பாவம் அச்சம் பழி என்னும் இந்நான்கு குற்றங்களும் பிறன் மனைவியிடத்து நெறி தவறி நடப்பவனிடத்திலிருந்து நீங்காவாம்.

அறனியலான் இல்வாழ்வான் என்பான் பிறனியலாள்
பெண்மை நயவா தவன். (147)

அறத்தின் இயல்போடு பொருந்தி இல்வாழ்க்கை வாழ்பவன், பிறனுக்கு உரிமையானவளின் பெண் தன்மையை விரும்பாதவனே.

பிறன்மனை நோக்காத பேராண்மை சான்றோர்க்கு
அறனொன்றோ ஆன்ற வொழுக்கு. (148)

பிறனுடைய மனைவியை விரும்பி நோக்காத ‌பெரிய ஆண்மை, சான்றோர்க்கு அறம் மட்டும் அன்று; நிறைந்த ஒழுக்கமுமாகும்.

நலக்குரியார் யாரெனின் நாமநீர் வைப்பின்
பிறர்க்குரியாள் தோள்தோயா தார்.(149)

கடல் சூழ்ந்த உலகத்தில் நன்மைக்கு உரியவர் யார் என்றொல் பிறனுக்கு உரிமையானவளின் தோளைப் பொருந்தாதவரே ஆவர்.

அறன்வரையான் அல்ல செயினும் பிறன்வரையாள்
பெண்மை நயவாமை நன்று. (150)

ஒருவன் அறநெறியில் நிற்காமல் அறமில்லாதவைகளைச் செய்தாலும், பிறனுக்கு உரியவளின் பெண்மையை விரும்பாமல் வாழ்தல் நல்லது.

Standard