தமிழ்

நன்னூல் – சொல்லதிகாரம் பெயரியல் – நாள் 5 – வகுப்புக்குறிப்புகள்

மு சகம் நிழற்றும் முழு மதி மு குடை
அச்சுதன் அடி தொழுது அறைகுவன் சொல் ஏ

சுதம் – அழிவு

அச்சுதம் – அழியாமை

முக்குடை:

சந்திராதித்யம் = நண்மை வெம்மை நல்கி உயிர் வளர்த்தல்

நித்ய விநோதம் = நாள்தோறும் புதுமையோடு உயிர்களைச் சலிப்பின்றி வாழ வைத்தல்

சகலபாசனம் = அனைத்து உயிர்களோடும் தொடர்பு கொண்டிருத்தல்

அருகன்? கதிரவன்?

இயற்கை வழிபாட்டைச் சொல்கிறது. ஆனால், பவனந்தி முனிவர் சமணர் என்பதால் அருகனைச் சொல்வதாக உரையாசிரியர்கள் சொல்கிறார்கள். அச்சுதா அமரரேறே என்னும் சொல் திருமாலைக் குறிக்கிறது.

வயிர ஊசியும் மயன்வினை இரும்பும்

செயிரறு பொன்னைச் செம்மைசெய் ஆணியும்

தமக்கமை கருவியும் தாமாம் அவைபோல்

உரைத்திறம் உணர்த்தலும் உரையது தொழிலே

– அகத்தியர்

வைரத்தை அறுக்க வைர ஊசியும் இரும்பை வெட்ட இரும்பு உளியும் பொன்னைத்துளையிட பொன்னால் ஆகிய மெருகாணியும் தேவை என்பது போலச் சொல்லின் திறம் அறிய சொல்லேகருவியாய் அமையும்.

இவ்வோத்து என்ன பெயர்த்ததோவெனின்

இம்முதல் ஓத்து என்னனுதலியதோவெனின்

ஓத்து நுதலியதூஉம் ஓத்தினது

பெயர் உரைப்பவே விளங்கும்…

என்றெல்லாம் பழம்பண்டிதர்கள் போல இப்போது சொல்லவியலாதெனினும் சாத்தன், சாத்தி, கருவூரான் எனச் சமகாலப் பொருத்தப்பாடின்றி எடுத்துக்காட்டுப் பெயர்களைக் கூட முன்னோர் சொல் பொன்னே போல் போற்றி வேறு பெயர்களைப் பயன்படுத்தாமலும் இருப்பதில் இருந்து சற்று எளிமையாகப்பெயரியலுள் பயணிக்கலாம்.

பெயரில் என்ன இருக்கிறது?

மானங்காத்தான், அஞ்சான், தையான் – விளிம்பு நிலைப்பெயர்கள்.

பெயரன் – பெயர்த்தி (தமிழ் மரபு)

‘சுட்டி ஒருவர் பெயர்கொளப் பெறார்’ அகம் தவிர்த்து பெயர்கள் மிக முக்கியமானவை. அகழ்வாய்வில் பானை ஓடுகளில் பெயர்கள் தொடர்ச்சியாக சில்வர் பாத்திரங்களிலும் பதியப்பட்டன.

பெயரில் என்ன இருக்கிரது?

பெயரில் தான் எல்லாம் இருக்கிறது என்றான் ஷேக்ஸ்பியர்.

” பலரும் சொல்கிறார்கள்
பெயரில் என்ன இருக்கிறது?

சேரி
பறையன்
தேவடியாள்
பீ, மூத்திரம், கொசு
பன்னி
கழுதை, கருவாடு
பூணூல்
அப்பம், வடை, தயிர் சாதம்

ஆங்கிலம்
சமஸ்கிருதம்
மனு
அமெரிக்கா
சங்கர மடம்
கொழும்பு

வள்ளலார்
பெரியார்
அம்பேத்கர்
மார்க்ஸ்

பெயருக்குப் பின்னால்
எல்லாமும் இருக்கிறது “
– இரா. காமராசு

பலவகைப் பொருள்களின் தொகுதியே உலகு. வன்சிரம் – வன்மையான தலையை உடைய மீன், கீழாநெல்லி – கிளையின் கீழே நெல்லி , ஊமணி – ஊணால் ஆகிய மணி போன்ற பொருள் (ஆட்டில் கழுத்தில் இருக்கும்) பொருள்களைக் குறிப்பதற்குக் குறியீடாய்ப் பெயர் தேவை.

Book Post ­ அவிழ்மடல் என்னும் மொழிபெயர்ப்பை ஒரு தச்சுத் தொழிலாளிதான் உருவாக்கினார். பெருஞ்சித்திரனார், கூட்டிப் பெருக்கும் பெண்ணிடம் தான் refill என்பதற்கு மைக்குச்சி என்னும் வார்த்தையைக்கேட்டார்.

பெயர்ச்சொல்லின் இலக்கணத்தை நன்னூலார் 62 நூற்பாக்களில் விளக்க முதல் 17 நூற்பாக்கள் சொற்களின் இலக்கணத்தைப் பொதுவாகவும் எஞ்சியவை பெயர்ச்சொல்லின் இலக்கணத்தைச் சிறப்பித்தும் கூறுகின்றன.

சொல்லின் பொது இலக்கணம்:

ஒருமொழி தொடர்மொழி பொதுமொழி என்றா
இரு திணை ஐம் பால் பொருள் ஐ உம் தன் ஐ உம்
மூ வகை இடத்து உம் வழக்கு ஒடு செய்யுளின்
வௌிப்படை குறிப்பின் விரிப்பது சொல் ஏ

ஒருமொழி – புலம்

தொடர்மொழி – புலம் பெயர்ந்தோர்

பொதுமொழி – பலகை (பல கைகள், அமர உதவும் பலகை)

இரு திணைகள்:

1. உயர்திணை (Rational)

மக்கள் தேவர் நரகர் உயர்திணை

2. அஃறிணை (Irrational)

மற்று உயிர் உள்ளளவும் இல்லவும் அஃறிணை.

பால் – ஆண்(masculine), பெண் (Feminine), பலர் (Common), ஒன்றன்(neuter singular), பலவின்(neuter plural)

பால் பாகுபாடு:

உயர்திணையே பால் காட்டும். தமிழில் அறிவியல் அடிப்படையில் மொழிக்கட்டமைப்பு

மேலைத்தேய / வடவாரிய மொழிகளில் அஃறிணைக்குப் பால் – அதாவது சடப்பொருள்களுக்குப் பால் காட்டுதல், அறிவியலற்ற ஆணாதிக்க மொழிக்கட்டமைப்பு

எ.கா. மேசை (ஆண்பால்), சிறுபலகை (பெண்பால்)

திணை பால்களுக்குப் புறனடை

பெண்மைவிட்டு ஆண் அவாவுவ பேடு ஆண்பால்

ஆண்மைவிட்டு அல்லது அவாவுவ பெண்பால்

இருமையும் அஃறிணை அன்னவும் ஆகும்.

அலி வந்தான் – ஆண்பால்

பேடி அணியாள் – பெண்பால்

இரண்டையும் இப்படி உயர்திணையாகவும்

அலி வந்தது

பேடி வந்தது என்று அஃறிணையாகவும் சொல்லலாம்.

இடம்(Person)

தன்மை (சொல்வோன்)

முன்னிலை (கேட்போன்)

படர்க்கை (அயலோன்)

வழக்கு(Usage)

சொற்களை வழங்கும் முறையே வழக்கு – தொகையும்(2) விரியும்(6)

இலக்கணம் உடையது இலக்கணப்போலி

மரூஉ என்று ஆகும் மூவகை இயல்பும்

இடக்கர் அடக்கல் மங்கலம் குழூஉக்குறி

எனும் முத்தகுதியோடு ஆறாம் வழக்கியல்

I இயல்பு வழக்கு(Natural Usage):

எப்பொருட்கு எச்சொல் அமைந்ததோ அப்பொருளை அச்சொல்லால் கூறுவது

1. இலக்கணம் உடையது (Grammatical form)

தொன்று தொட்டு இலக்கண நெறி மரபில் வருவது. எ.கா. நிலம் நீர் தீ

2. இலக்கணப் போலி(Apparent Grammatical Form)

இலக்கணம் உடையன போல பொருள் மாறாமல் முன்பின்னாக நிற்பன.

எ.கா. நகர்ப்புறம் – புறநகர்.

3. மரூஉ – (Corrupt Form) – அவ்வப்போது இலக்கணம் சிதைந்து வருவது

எ.கா. சோழ நாடு – சோணாடு.

II தகுதிவழக்கு (Appropriate Usage):

1. இடக்கரடக்கல் (Decent Form) சொல்லத்தகாததை மறைத்து வேறொரு சொல்லால் சொல்லுவது எ.கா கால்கழுவி வந்தார் (மலங்கழுவி வந்தார்)

2. மங்கலம் (Eupherism) ­ மங்கலமல்லாததை மங்கலமாகக் கூறுதல்

செத்தாரைத் துஞ்சினார் எனல்.

3. குழூஉக்குறி(Conventional Form) ­இயல்பான சொற்குறியைத் தங்கள் கூட்டத்து மட்டும் விளங்குமாறு வேறொரு சொற்குறியால் குறிப்பது.

பொற்கொல்லர்கள் பொன்னைப் பறி எனல்.

கள்ளை வேடர்கள் சொல்விளம்பி எனல்.

முசுமுசுக்கை என்பதை இருகுரங்கின் கை என்று சித்தமருத்துவர்கள் சொல்லல்.

சொற்கள் பொருள் உணர்த்தும் முறை:

சொற்கள் பெரும்பான்மை வெளிப்படையாகவும் சிறுபான்மை குறிப்பாகவும் பொருள் உணர்த்தும்.

ஒன்றொழி பொதுச்சொல்:

மாடுகள் பால் கறந்தன (பால் என்னும் குறிப்பு ஆண்பாலை ஒழித்துப் பெண்பாலைச் சுட்டியது)

விகாரம்:

மரைமலர் மலர் என்னும் பின்னொட்டால் தாமரையை உணர்த்தியது.

தகுதி: கால் கழுவி வந்தான் (மலம் கழுவி வந்தமையை)

ஆகுபெயர்: புளி தின்றான் (புளி – புளியம்பழம்)

அன்மொழித் தொகை: பொற்றொடி வந்தாள் (தொடியைக் குறிக்காமல் அதனை அணிந்த பெண்ணைக் குறிப்பால் உணர்த்தியது).

குறிப்பு வினைச்சொல்: சொலல்வல்லன்(வல்லன் எனும் பெயர்ச்சொல் சொல்லுதலில் வல்லன் எனும் வினைக்குறிப்புப் பொருளைத் தந்தது).

முதற்குறிப்பு: ஆத்திசூடி கற்றாள் (ஆத்திசூடி என்னும் நூலைக் குறிப்பால் உணர்த்தியது)

தொகைக்குறிப்பு: தமிழ் வேந்தர் மூவர்

பலவகையாய் வரும் குறிப்புச் சொற்கள்: பாயாவேங்கை (வேங்கை(புலி) பாய்வது, பாயததால் வேங்கை மரமாயிற்று)

சொல்லின் பாகுபாடு:

அதுவே

து ஏ
இயற்சொல் திரிசொல் இயல்பின் பெயர் வினை
என இரண்டு ஆகும் இடை உரி அடுத்து
நான்கு உம் ஆம் திசை வடசொல் அணுகா வழி

இயற்சொல் –

செந்தமிழ் ஆகித் திரியாது யார்க்கும்

தம்பொருள் விளக்கும் தன்மைய இயற்சொல்

திரிசொல் –

பெயர்த்திரிசொல் – கிள்ளை தந்தை – கிளி என்னும் ஒரு பொருள் குறித்த பல பெயர்ச்சொல்.

வினைத் திரிசொல் – படர்ந்தான் ஏகினான் – போனான் என்னும் ஒரு பொருளைக் குறித்த பலவினைச்சொல்.

இடைத்திரிசொல் – சேறும் வருதும் றும் தும் என்னும் எதிர்காலம் குறித்த பல இடைச்சொல்

உரித்திரிசொல் – சால உறு தவ மிகுதி என்னும் ஒரு பொருள் குறித்த பல உரிச்சொல்.

திசைச்சொல்:

பல திசைகளிலும் வழங்குகின்ற மொழிகளில் இருந்து வந்து தமிழில்வழங்கும் சொற்கள்.

செந்தமிழ் நிலம் சேர் பன்னிரு நிலத்தின் உம்
ஒன்பதிற்று இரண்டின் இல் தமிழ் ஒழி நிலத்தின் உம்
தம் குறிப்பின ஏ திசைச்சொல் என்ப

தென்பாண்டி, குட்டம், குடம் கற்கா, வேண், பூழி ,
பன்றி, அருவா, அதன் வடக்கு , நன்றாய
சீதம், மலாடு, புனல் நாடு, செந்தமிழ்சேர்
ஏதம் இல் பன்னிரு நாட்டு எண்”

– பன்னிரு நிலம் குறித்த பழம்பாடல்

திசைச்சொல்லாக விளங்கும் பன்னிரு நிலத்துச் சொற்கள்:

சோற்றை சொன்றி எனல் தென்பாண்டி நாட்டுச் சொல்

தாயைத் தன்னை எனல் குட்ட நாட்டுச் சொல்

தந்தையை அச்சன் எனல் குட நாட்டுச்சொல்

வஞ்சரைக் கையர் எனல் கற்கா நாட்டுச்சொல்

தோட்டத்தைக் கிழார் எனல் வேணாட்டுச் சொல்

சிறுகுளத்தைப் பாழி எனல் பூழிநாட்டுச் சொல்

வயலைச் செய் எனல் பன்றி நாட்டுச் சொல்

சிறுகுளத்தைக் கேணி எனல் அருவா நாட்டுச்சொல்

புளியை எகின் எனல் அருவாவட தலை நாட்டுச் சொல்

தோழனை எலுவன் எனல் சீதநாட்டுச் சொல்

நீரை வெள்ளம் எனல் மலையமான் நாட்டுச் சொல்

தாயை ஆய் எனல் புனல் நாட்டுச் சொல்.

திசைச்சொல்லாக விளங்கும் வேற்றுமொழிச் சொல்:

சிங்களம் சோனகம் சாவகம் சீனம் துளுக் குடகம்

கொங்கணம் கன்னடம் கொல்லம் தெலுங்கம் கலிங்கம் வங்கம்

கங்கம் மகதம் கவுடம் கடாரம் கடுங்குசலம்

தங்கும் புகழ்த்தமிழ் சூழ்பதி னேழ் புவி தாம் இவையே(பழம்பாடல்)

மாமரத்தைக் கொக்கு எனல் துளு மொழிச்சொல்

ஐயோ என்பதை அந்தோ எனல் சிங்கள மொழிச்சொல்

அகப்படுதலைச் சிக்குதல் என்றல் கன்னடமொழிச்சொல்

சொல்லுதலைச் செப்புதல் எனல் தெலுங்கு மொழிச்சொல்

பெயர்ச்சொல்:

இடுகுறி காரண மரபோடு ஆக்கம்

தொடர்ந்து தொழில் அல காலம்தோற்றா

வேற்றுமைக்கு இடனாய்த் திணைபால் இடத்தொன்று

ஏற்பவும் பொதுவும் ஆவன பெயரே

இடுகுறி மரபுப்பெயர்: மரம்

இடுகுறி ஆக்கப்பெயர்: பொய்யாமொழிப் புலவர்

காரணக்குறி மரபுப்பெயர்: பறவை

காரணக்குறி ஆக்கப்பெயர்: பொன்னன்

உயர்திணைப் பெயர்கள்:

ஆண்பால்:

பொருளால் அமைவது தமர், மூவர்

இடத்தால் அமைவது: ஆரூரன்

காலத்தால் அமைவது: தையான்

சினையால் அமைவது: செங்கண்ணன்

குணத்தால் அமைவது: அறிஞன்

தொழிலால் அமைவது : ஓதுவார்

இடைச்சொல்லால் அமைவது: அவன்

பெண்பால்:

பொருளால் அமைவது தமன், ஒருத்தி

இடத்தால் அமைவது: பட்டினத்தாள்

காலத்தால் அமைவது: தையாள்

சினையால் அமைவது: கார்குழலாள்

குணத்தால் அமைவது: புலமையாள்

தொழிலால் அமைவது: ஓதுவாள்

இடைச்சொல்லால் அமைவது: பிறத்தியாள்

இருதிணைப் பொதுப்பெயர் – விரவுப்பெயர்:

உயர்திணைக்குச் சிறந்த பெயர் அஃறிணைக் கண் விரவியும்

அஃறிணைக்குச் சிறந்த பெயர் உயர்திணைக் கண் விரவியும்

வருதலின் விரவுப்பெயர். 26 விரவுப்பெயர்களை நன்னூலார் குறிப்பிடுவார்.

கதிரவன் உதித்தான் – கதிரவன் உதித்தது (இருதிணைப் பொதுப்பெயர்)

ஊமை வந்தான்

ஊமை வந்தாள் (இருபால்பொதுப்பெயர்) சமகாலப் பயன்பாடு உளவியல் அடிப்படையில் மாற்றுத்திறனாளி

ஒருவர் என்பது உயர் இருபாற்றாய்ப்

பன்மை வினைகொளும் பாங்கிற்று என்ப.

ஒருவர் சிறப்புவிதி 289ஆம் நூற்பா ஆடவருள் ஒருவர்(ன்) பெண்டிருள் ஒருவர்(ஒருத்தி)

சினைப்பெயர்:

முடவன் செவியிலி முடக்கொற்றன் போன்ற சமகாலப் பொருத்தப்பாடற்ற உளவியல் சிக்கல் கோன்ட சொற்களுக்கு நிகரியாக மாற்றுத் திறனாளி போன்ற சொற்கள் உருவாக்கப்பெற்றது தமிழ்மொழி சார் சமூகநீதி, உளவியல் செம்மொழி.

ஆகுபெயர்:

பொருள்முதல் ஆறோடு அளவை சொல் தானி

கருவி காரியம் கருத்தன் ஆதியுள்

ஒன்றன் பெயரால் அதற்கு இயை பிறிதைத்

தொன்முரை உரைப்பன ஆகுபெயரே

பொருளாகுபெயர் தாமரைமுகம்

இடவாகுபெயர் அகனமர்ந்து

காலவாகுபெயர் கார் அறுத்தான்

சினையாகுபெயர் வெற்றிலை நட்டான்

பண்பாகுபெயர் கார் நிகர் கை

தொழிலாகுபெயர் வற்றலோடு உண்டான்

அளவாகு பெயர்

எண்ணல் ஒன்றிரண்டு கொடு

எடுத்தல் ஒரு பலம் கொடு

முகத்தல் நாழி கொடு

நீட்டல் கீழைத்தடி

சொல்லாகு பெயர் நூற்கு உரை செய்தான்

தானியாகு பெயர் கழல் தொட்டான்

கருவியாகுபெயர் திருவாசகம் படி

காரியவாகுபெயர் இது அலங்காரம்

கருத்தாவாகுபெயர் வள்ளுவரைப் படி

உவமையாகுபெயர் பாவை வந்தாள்

இருமடியாகுபெயர் புளி காய்த்தது

மும்மடியாகுபெயர் கார் அறுத்தான்

பின்மொழியாகுபெயர் வகரக்கிளவி

முன்மொழியாகுபெயர் துலாக்கோல்

ஏற்கும் எவ்வகைப் பெயர்க்கும் ஈறாய்ப் பொருள்
வேற்றுமை செய்வன எட்டே வேற்றுமை.

பெயரே ஐ, ஆல், கு, இன், அது, கண்
விளி என்றாகும் அவற்றின் பெயர் முறை

பெயர் வேற்றுமை (Nominative Case) – எ.கா. செல்வன்

இரண்டாம் வேற்றுமை (Objective Case):

இரண்டாவதன் உருபு ஐயே அதன் பொருள்

ஆக்கல் அழித்தலடைதல் நீத்தல்

ஒத்தல் உடைமை ஆதி ஆகும்.

மூன்றாம் வேற்றுமை(Instrumental Case)

மூன்றாவதன் உருபு ஆல் ஆன் ஒடு ஓடு

கருவி கருத்தா உடன் நிகழ்வு அதன்பொருள்

நான்காம் வேற்றுமை(Dative Case)

நான்காவதற்கு உருபு ஆகும் குவ்வே

கொடை பகை நேர்ச்சி தகவு அது ஆதல்

ஐந்தாம் வேற்றுமை (Ablative Case)

ஐந்தாவதன் உருபு இல்லும் இன்னும்

நீக்கல் ஒப்பு எல்லை ஏதுப்பொருளே

ஆறாம் வேற்றுமை(Possessive Case)
ஆறன் ஒருமைக்கு அதுவும் ஆதுவும் பன்மைக்கு அவ்வும் உருபாம் பண்பு உறுப்பு ஒன்றன் கூட்டம் பலவின் ஈட்டம் திரிபின் ஆக்க மாம்தற் கிழமையும் பிறிதின் கிழமையும் பேணுதல் பொருளே

ஏழாம் வேற்றுமை (Locative Case)

கண்கால் கடை இடை தலை வாய் திசைவயின்

முன்சார் வலம் இடம் மேல் கீழ் புடை முதல்

பின் பாடு அனை தேம் உழை வழி உழி உளி

உள் அகம் புறம் இல் இடப்பொருள் உருபே

எட்டாம் வேற்றுமை(Vacative Case)

எட்டன் உருபே எய்துபெயர் ஈற்றின்

திரிபு குன்றல் மிகுதல் இயல்பு அயல்

திரிபும் ஆம்பொருள் படர்க்கை யோரைத்

தன்முகம் ஆகத்தான் அழைப்பதுவே

நன்றிக்குரியோர்:

முனைவர் தெ. வெற்றிச்செல்வன்,

தஞ்சாவூர்ப் பல்கலைக்கழகம்

Standard
General

நன்னூல் – உருபு புணரியல் – வகுப்பு 4 – குறிப்புகள்

முன்னூல் ஒழியப் பின்னூல் பலவினுள்

நன்னூலார் தமக்கு எந்நூலாரும்

இணையோ என்னும் துணிவே மன்னுக

– சுவாமிநாத தேசிகர்

தொல்காப்பியத்தை முன்னூலாகக் கொண்டு பன்னிரண்டாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட நூல் நன்னூல்.

நன்னூல்:

எழுத்ததிகாரம்:

1. எண்

2. பெயர்

3. முறை

4. பிறப்பு

5. உருவம்

6. மாத்திரை

7. மொழிமுதல்

8. மொழிஈறு

9. இடைநிலை

10. போலி

ஆகிய பத்துக்கூறுகளையும் எழுத்தியல் எனலாம்.

11. எழுத்துப் புணர்ச்சி

12. பதப்புணர்ச்சி

ஆகிய இரண்டிலும் பதவியல், உயிரீற்றுப்புணரியல், மெய்யீற்றுப்புணரியல், உருபு புணரியல் ஆகியன உள்ளன.

சொல்லதிகாரம்:

நன்னூல் ஐந்து அதிகாரங்களுக்கும் எழுதப்பட்ட நூல் என அதன் சிறப்புப் பாயிரத்தில் நன்னூலாசிரியர் குறிப்பிடுகிறார். ஆனால் கிடைத்திருப்பது எழுத்ததிகாரமும் சொல்லதிகாரமும் தான்!

உருபு புணர்ச்சி பொதுவிதி:

உருபு புணரியல் – 6 பிரிவுகள்

1. உருபு எண்ணிக்கை

2. வரும் முறை

3. பெயரும் உருபும் சேரும் போது நிகழும் மாற்றங்கள்.

4. உருபுப் புணர்ச்சியில் இடம்பெறும் சாரியைகள்

5. உருபுகளுடன் சேரும் பெயர்ச்சொற்கள்

6. புறநடை

உருபு புணரியலில் மொத்தம் பதினெட்டு நூற்பாக்கள் இருக்கின்றன.

ஒருவன் ஒருத்தி பலர் ஒன்று பல என
வரு பெயர் ஐந்து ஒடு பெயர் முதல் இரு நான்கு
உருபு உம் உறழ்தர நாற்பது ஆம் உருபு ஏ

ஆண்பால், பெண்பால், பலர் பால், ஒன்றன் பால், பலவின் பால் – ஐந்து பால்கள் * எட்டு உருபுகள் = நாற்பது உருபுகள்.

நம்பி(எழுவாய் வேற்றுமை) நம்பியை, நம்பியால், நம்பியோடு, நம்பியில், நம்பியது, நம்பிகண், நம்பியே(எழுவாய் வேற்றுமை)

பெயர் வழித் தம்பொருள் தரவரும் உருபே (241)

பெயர்ச்சொல்லைத் தொடர்ந்து தான் உருபு வரும். உருபுகளின் பொருளைத் தருவதற்காக!

புலி யானை கொன்றது

புலி யானையைக் கொன்றது – புலியை யானை கொன்றது.

வேற்றுமை உருபுகளுக்கு அல்வழிப் புணர்ச்சி கிடையாது.

சிறப்பு விதி:

ஒற்று உயிர் முதல் ஈற்று உருபுகள் புணர்ச்சியின்
ஒக்குமன் அப்பெயர் வேற்றுமைப் புணர்ப்பே

ஒக்குமன் – என்பதால் சில இடங்களில் வேற்றுமை உருபு பொருந்தாமலும் போகலாம்.

ஐ – ஓரெழுத்து

முதல், எட்டாம் வேற்றுமை – உருபு இல்லை.

நம்பி + கண் + வாழ்வு => நம்பி கண் வாழ்வு

சாரியைகள்

பதமுன் விகுதியும் பதமும் உருபும்

புணருவழி ஒன்றும் பலவும் சாரியை

வருதலும் தவிர்தலும் விகற்பமும் ஆகும்.

பதத்திற்கு முன் விகுதி வரலாம்; பதம் வரலாம்; உருபு வரலாம். இப்படி வரும்போது ஒரு சாரியை வரலாம்; பல சாரியைகள் வரலாம்; சாரியை வராமலும் போகலாம்; சில இடங்களில் வந்தும் வராமலும் முரண்டும் போகலாம்.

பதம் + விகுதி

செய்+த்+அன்+அன் – முதல் அன் – சாரியை

பதம் முன் பதம்

புளி + பழம் => புளியம்பழம்

குளம் + கரை = குளக்கரை, குளத்துக்கரை

அவை+ஐ =அவற்றை (உருபுப் புணர்ச்சி) அற்று சாரியை வந்திருக்கிறது.

கிளி + ஐ = கிளியை

கிளி + ஐ = கிளியினை (இன் சாரியை வந்திருக்கிறது)

சாரியையின் எண்ணிக்கை:

அன் ஆன் இன் அல் அற்று இற்று அத்து அம்
தம் நம் நும் ஏ அ உ ஐ கு ன
இன்ன பிற உம் பொது சாரியை ஏ

பதினோரு பதச்சாரியை, ஆறு எழுத்துச்சாரியை என பதினேழு பதச்சாரியைகள்.

ஒன்று + கூட்டம் = ஒன்றன்கூட்டம்

படை + அல் = படையல்

பல + அற்று = பலவற்றை

வண்டு+ஐ = வண்டினை

பத்து+பத்து = பதிற்றுப்பத்து (பத்து+அற்று+பத்து)

மரம் + அத்து + ஐ = மரத்தை

பனம்+காய் = பனங்காய் (பனம்+அம்+காய்)

ஒன்று + கால் = ஒன்றே கால்.

செய்+த்+அ+து = த் சாரியை

ஒன்று+கொம்பு = ஒற்றைக் கொம்பு – ஐ சாரியை.

கோ+ஐ = கோ+ன்+ஐ => கோனை (ன் சாரியை)

எல்லாம் விதி
எல்லாம் என்பது இழிதிணை ஆயின்
அற்று ஓடு உருபின் மேல் உம் உறும் ஏ
அன்றேல் நம் இடை அடைந்து அற்று ஆகும்

இழிதிணை – அஃறிணை

அஃறிணையில் வரும் எல்லாம் எனும் பெயருமிடத்து அற்றுச்சாரியை வரும; இறுதியில் முற்றும்மை வரும்.

எல்லாம் + ஓடு => எல்லா+அற்று+ஓடு+உம் => எல்லாவற்றோடும்

உயர்திணையாக இருந்தால் நம் சாரியை வரும்.

எல்லார் + ஓடு => எல்லார் + தம் +ஓடு => எல்லார்தம்மோடு

எல்லாம் சிறப்புவிதி:

எல்லாரும் எல்லீரும் என்பவற்று உம்மை

தள்ளி நிரலே தம்நும் சாரப்

புல்லும் உருபின் பின்னர் உம்மே

வேற்றுமை உருபுகள் புணருமிடத்து உம் விலகிஇறுதியில் நிற்க, இடையே முறையே தம் நும் என்னும் இரு சாரியைகள் பெற்று வரும்.

எல்லாரும் + ஐ =எல்லார் தம் + ஐ => எல்லார்தம்மையும்

தான், தாம் முதலியவற்றிற்குச் சிறப்புவிதி:

தான் தாம் நாம் முதல் குறுகும் யான் யாம்
நீ நீர் என் எம் நின் நும் ஆம் பிற
குவ்வின் அ வரும் நான்கு ஆறு இரட்டல்

தான் தாம் நாம் மூன்றும் உருபுகளுடன் புணரும்போது முதலில் உள்ள நெடில் குறுகி, தன், தம், நம் என்றும் யன், யம், நின், நும் என்றும் ஆகிவிடும்.

தான்+ஐ = தன்னை

தாம்+ஐ = தம்மை

தாம்+கு = தமக்கு

நீர் + ஐ = நும்மை

ஆ மா கோ னவ் வணையவு பெறுமே

ஆ, மா, கோ ஆகிய ஓரெழுத்து ஒருமொழி வந்து உருபு புணரும் போது ன சாரியை வரும்.

சோறும் உண்டான் – எச்ச உம்மை.

இறந்தது தழிய எச்சம்மை.

ன சாரியை வரலாம். வராமலும் இருக்கலாம்.

எண்ணுப் பெயர்களுக்குச் சிறப்பு விதி:

ஒன்று முதல் எட்டு ஈறு ஆம் எண் ஊர்
பத்தின் முன் ஆன் வரின் ப ஒற்று ஒழிய மேல்
எல்லாம் ஓடும் ஒன்பது உம் இற்று ஏ

ஒன்று முதல் எட்டு வரை பத்து சேர்த்தால்

ஒன்று + பத்து = ஒருபது

இரண்டு + பத்து = இருபது

என வரும் இடங்களில் ஆன் சாரியை வந்தால், பத்தில் தகர மெய் ஒழிந்து எல்லா எழுத்தும் கெடும்.

ஒருபது +ஆன்+ஐ = ஒருபானை

ஒன்பதும் இற்றே – இந்த விதி ஒன்பதுக்கும் பொருந்தும். ஒன்பது என்பது சர்ச்சைக்குரிய எண். திருவள்ளுவர் பயன்படுத்தாத ஓர் எண் ஒன்பது.

ஒன்பது + ஆயிரம் = தொள்ளாயிரம்.

ஒன்பதுக்கு இணையாகப் பரிபாடலில் தொண்டு என்னும் சொல்லைச் சொல்லியிருக்கிறார்கள். ஆனால் அது பயன்பாட்டில் இல்லை.

ஒன்பது + பத்து = ஒன்பது => தொன்பது

வகர ஈற்றுச் சுட்டுப்பெயர் சிறப்புவிதி:

வ இறு சுட்டின் கு அற்று உறல் வழி ஏ

வகரத்தை ஈறாகக் கொண்டிருக்கும் சுட்டெழுத்துகள் – அவ், இவ், உவ்.

இவற்றுடன் உருபுகள் புணர்ந்தால் அற்றுச் சாரியை வரும்.

அவ்+ ஐ => அவ் + அற்று + ஐ = அவற்றை

அஃது என்பதற்குச் சிறப்பு விதி:

சுட்டின் முன் ஆய்தம் அன் வரின் கெடும் ஏ

சுட்டெழுத்து முன்னால் ஆய்தம் வந்து அன் சாரியை வந்தால் ஆய்தம் கெட்டு விடும்.

அஃது + அன்+ஐ = அதனை (ஃ ஆய்தம் கெட்டு விடும்).

அத்துச்சாரியை சிறப்புவிதி:

அத்தின் அகரம் அகர முனை இல்லை

நிலைமொழி ஈற்றில் உள்ள அகரத்தின் முன் வரும் அத்துச்சாரியை வரும் போது அத்துச்சாரியையின் அகரம் கெடும்.

மகம் + ஐ => மக + அத்து +ஐ => மக+த்து+ஐ => மகத்தை

மரம் + ஐ = மரத்தை

புறனடை – சாரியைகள்:

இதற்கு இது சாரியை எனின் அளவு இன்மையின்
விகுதி உம் பதம் உம் உருபு உம் பகுத்து இடை
நின்ற எழுத்து உம் பதம் உம் இயற்கை உம்
ஒன்ற உணர்த்தல் உரவோர் நெறி ஏ

புறனடை – நால்வகைப்புணர்ச்சி

விகுதி பதம் சாரியை உருபு அனைத்தின் உம்
உரைத்த விதியின் ஓர்ந்து ஒப்பன கொளல் ஏ

பதம்+விகுதி, பதம்+சாரியை, பதம்+உருபு, பதம்+பதம் என நால்வகைப் புணர்ச்சி

எந்த இடத்தில் எந்தப் புணர்ச்சி எனப் புரிந்து செயல்பட வேண்டும்.

புறனடை – இரண்டாம் வேற்றுமைப் புணர்ச்சி:

இயல்பின் விகாரம் உம் விகாரத்து இயல்பு உம்
உயர்திணை இடத்து விரிந்து உம் தொக்கு உம்
விரவுப்பெயரின் விரிந்து உம் நின்று உம்
அன்ன பிற உம் ஆகும் ஐ உருபு ஏ

மண் + குடம் = மட்குடம்

மண் + சுமந்தான் = மட்சுமந்தான் என வரவேண்டும் என்பது பொது விதி. மண் சுமந்தான் என்றும் வரலாம்.

புறனடை – மூன்றாம் வேற்றுமைப் புணர்ச்சி

புள்ளி உம் உயிர் உம் ஆய் இறு சொல் முன்
தம்மின் ஆகிய தொழில் மொழி வரின் ஏ
வல்லினம் விகற்பம் உம் இயல்பு உம் ஆகும்

புறனடை – எழுத்ததிகாரம்:

இதன் கு இது முடிபு என்று எஞ்சாது யா உம்
விதிப்ப அளவு இன்மையின் விதித்தவற்று இயல் ஆன்
வகுத்து உரையாத உம் வகுத்தனர் கொளல் ஏ

நன்றிக்குரியோர்

முனைவர் கு.தயாநிதி

Standard
General

நன்னூல் – மெய்யீற்றுப் புணரியல் – வகுப்பு 3 – குறிப்புகள்

நன்னூலில் எழுத்ததிகாரம், சொல்லதிகாரம் என்று இரண்டு அதிகாரங்கள் இருக்கின்றன. அதில் எழுத்ததிகாரத்தில் உயிரீற்றுப் புணரியலைத் தொடர்ந்து இருப்பது மெய்யீற்றுப் புணரியல்.

புணர்ச்சி இரண்டு வகைப்படும்.

  • இயல்புப் புணர்ச்சி
  • விகாரப் புணர்ச்சி – தோன்றல் திரிதல் கெடுதல் விகாரம்
    பூ + கொடி = பூங்கொடி (தோன்றல்)
    கல்+ தீது = கஃறீது (திரிதல்)
    மரம் + வேர் = மரவேர்(கெடுதல்)
    ஒன்பது + பத்து = தொண்ணூறு (விகாரம்)

வேற்றுமைப் புணர்ச்சி
வேற்றுமை உருபு மறைந்தோ வெளிப்பட்டோ புணர்வது.
கல்லூரி + கட்டினான் = கல்லூரி கட்டினான்
கல்லூரியை + கட்டினான் = கல்லூரியைக் கட்டினான்

அல்வழிப் புணர்ச்சி
உருபு இல்லாத புணர்ச்சி

  1. எழுவாய்த் தொடர்
  2. விளித்தொடர்
  3. வினைத்தொகை
  4. பண்புத்தொகை
  5. உவமைத் தொகை
  6. உம்மைத் தொகை
  7. அன்மொழித் தொகை
  8. பெயரெச்சத் தொடர்
  9. வினையெச்சத் தொடர்
  10. தெரிநிலை வினைமுற்றுத் தொடர்
  11. குறிப்பு வினைமுற்றுத் தொடர்
  12. இடைச்சொல் தொடர்
  13. உரிச்சொல் தொடர்
  14. அடுக்குத் தொடர்

இந்தப் பதினான்கும் புணர்கின்ற புணர்ச்சி தான் அல்வழிப் புணர்ச்சி.

மெய்யீற்றுப் புணரியல்
நிலைமொழி ஈற்றிலே மெய்யெழுத்து நின்று வருமொழியுடன் புணர்வது மெய்யீற்றுப் புணரியல்.

ஆவி பன்னிரண்டு ஞணநமன யரலவழள (சாயும் உகரம்) குற்றியலுகரம் => 12 + 5 + 6 + 1 => 24 எழுத்துகள் மொழிக்கு இறுதியில் வரும்.

இந்த 24இல் ஆவி – உயிரெழுத்துகள்.
ஞணநமன + யரலவழள -> 11 மெய்யெழுத்துகளும் மொழிக்கு இறுதியில் நின்று புணர்வது தான் மெய்யீட்டுப் புணர்ச்சி.

  1. உடல்மேல் உயிர் வந்து ஒன்றுவது இயல்பே
    தமிழ் + அழகு = தமிழழகு
    நூல் + ஆசிரியர் = நூலாசிரியர்
  2. தனிக்குறில் முன் ஒற்று உயிர்வரின் இரட்டும்.
    கண் + இமை => கண்ண் + இமை = கண்ணிமை

மெய்யீற்றின் முன் மெய்:
தன் ஒழி மெய்முன் யவ்வரின் இகரம்
துன்னும் என்று துணிநரும் உளரே

(துணிநரும் உளரே – இழிவு சிறப்பும்மை)
வேல் + யாது => வேல் + இ + யாது = வேலியாது
ல் + இ = உடல் மேல் உயிர் வந்து ஒன்றுவது இயல்பே

வேல் + யாது = வேல்யாது என்றும் புணரும்.

சில முதல்நிலைத் தொழிற்பெயர்க்கும் ஏவற்கும் சிறப்பு விதி
ஞணநமலவளன ஒற்று இறு தொழிற்பெயர்
ஏவல்வினை நனிய ய அல் மெய் வரின்
உவ்வுறும் ஏவல் உறாசில சில்வழி

வேற்றுமையில்:
உரிஞ்+ கடிது
(உரிஞ் – முதல்நிலைத் தொழிற்பெயர்)
உரிஞ்+ கடிது => உரிஞ் +உ + கடிது
உரிஞு+ கடிது => உரிஞுக்கடிது
(க் – உயிரீற்றுப் புணரியல் – இயல்பினும் விதியினும் நின்ற உயிர் முன் கசதப மிகும்)

ஏவல் வினை – உண்
உண்+சாத்து => உண் + உ + சாத்தா = உண்ணுசாத்தா
(தனிக்குறில் முன்னொட்டு உயிர் வரின் இரட்டும்)
கசதப ஏன் மிகவில்லை?
சாத்தா – என்பது விளிப்பெயர்

நகர ஈற்றுத் தொழிற்பெயருக்குச் சிறப்பு விதி
நவ் இறு தொழிற்பெயர்க்கு அவ்வுமாம் வேற்றுமை
ஏற்கெனவே நகர ஈற்று உகரச் சாரியை பெறும் எனப் பார்த்தோம். அகரச் சாரியையையும் வரும்.
பொருந் + கடுமை
பொருந் + அ + கடுமை => பொருந + கடுமை => பொருநக் கடுமை

ணகர னகர ஈறு – சிறப்பு விதி
ணன வல்லினம் வர டறவும் பிறவரின்
இயல்பும் ஆகும் வேற்றுமைக்கு அல்வழி
அனைத்து மெய்வரினும் இயல்பாகும்

சிறுகண் + களிறு = சிறுகட்களிறு
பொன் + தூண் = பொற்றூண்

மண் + ஞாற்சி = மண்ஞாற்சி
பொன்+ஞாற்சி = பொன்ஞாற்சி

ணகர னகர ஈறு கெடுதல்:
குறில் அணைவில்லா ணனக்கள் வந்த
நகரம் திரிந்துழி நண்ணும் கேடே

குறில் அணைவில்லா – தனிக்குறில் இல்லாத

தூண் – தூ – குறில் இல்லை.
தூண் + நன்று => தூண் + ணன்று => தூ+ணன்று = தூணன்று
பசுமண் – தொடர்மொழி
பசுமண்+நன்று = பசுமண் + ணன்று => பசும+ணன்று = பசுமணன்று

ணகர ஈற்றுப் பெயர்க்குச் சிறப்பு விதி:
சாதி குழூஉ பரண் கவண் பெயர் இறுதி
இயல்பாம் வேற்றுமைக்கு உணவு எண்சாண் பிற
டவ்வாகலுமாம் அல்வழியும்மே

பாண்+குடி = பாண்குடி (பாணர் சாதி)
அமண் + குடி = அமண்குடி (குழு)
பரண்+கால் = பரண்கால்
கவண்+கால் = கவண்கால்
எண்(எள்) +பெரிது = எட்பெரிது
சாண்+கோல் = சாட்கோல்

னகர ஈற்று சாதிப் பெயர்:
னஃகான் கிளைப்பெயர் இயல்பு உம் அஃகான்
அடைவு உம் ஆகும் வேற்றுமை பொருள் கு

எயின்+சேரி = எயின்சேரி
எயின்+சேரி =>எயின் + அ + சேரி =எயினச்சேரி

எயின் – சாதி, னகர ஈற்றுச் சாதிப் பெயர்.
இயல்பாக எயின்சேரி என்றும் வரும். அஃகான் பெற்றும் (அ பெற்றும்) எயின+சேரி என்றும் வரும்.
எயின+சேரி = எயினச்சேரி (கசதப மிகும்.)

மீன் என்பதற்குச் சிறப்பு விதி:
மீன் றவொடு பொரூஉம் வேற்றுமை வழியே

மீன்+கண் = மீற்கண் (றவொடு பொரூஉம் வேற்றுமை வழி)
மீன் + செவி = மீன்செவி

தேன் என்பதற்குச் சிறப்பு விதி:

தேன்மொழி மெய்வரின் இயல்பும் மென்மை
மேவின் இறுதி அழிவும் வலிவரின்
ஈறுபோய் வலிமெலி மிகலுமாம் இருவழி

தேன்+கடிது = தேன்கடிது (அல்வழிப் புணர்ச்சி எனவே தான் தேக்கடிது தேங்கடிது என வரவில்லை)
தேன்+மாட்சி = தேன்மாட்சி
தேன்+மொழி = தேமொழி
(மென்மை மேவின் இறுதி அழிவும்)

தேன்+குடம் = தேக்குடம், தேங்குடம்
(வலிவரின் ஈறுபோய் வலிமெலி மிகலுமாம் இருவழி) (வேற்றுமைப் புணர்ச்சி)

எகின் என்பதற்குச் சிறப்பு விதி:
மரம் அல் எகின் மொழி இயல்பு உம் அகரம்
மருவ வலி மெலி மிகல் உம் ஆகும்

இயல்புப் புணர்ச்சி:
எகின்+கால் = எகின்கால்
எகின்+சிறை = எகின்சிறை

எகின்+புள் => எகின் + அ + புள் = எகினப்புள் => எகினம்புள்

குயின் என்பதற்குச் சிறப்பு விதி:
குயின் ஊன் வேற்றுமைக் கண்ணும் இயல்பே
குயின் + கடுமை = குயின்கடுமை
ஊன+கடுமை = ஊன்கடுமை

மின், பின், பன்,கன் என்பதவற்றிற்குச் சிறப்பு விதி:
மின் பின் பன் கன் தொழிற்பெயர் அனைய
கன் அ ஏற்று மென்மை ஓடு உறழும்

மின்+கடிது => மின் + உ + கடிது => மின்னுக்கடிது
(தொழிற்பெயர் அனைய – தொழிற்பெயர் போல, உகரச் சாரியைப் பெற்று வரும்)

கன் + தட்டு => கன் + அ + தட்டு => கன்ன + தட்டு => கன்னத்தட்டு (தனிக்குறில் ஒற்று உயிர் வரின் இரட்டும்)

தன் என் நின் என்பனவற்றிற்குச் சிறப்புவிதி:
தன் என் என்பவற்று ஈற்று ன வன்மை ஓடு
உறழும் நின் ஈறு இயல்பு ஆம் உற
உறழும் – இயல்பாகவும் வரும், னகரம் றகரமாகவும் வரும்.

தன்+பாதுகாப்பு = தன்பாதுகாப்பு, தற்பாதுகாப்பு

என்+பகை => என்பகை, எற்பகை
நின்+பகை => நின்பகை

மகர ஈறு [பொதுவிதி]
மவ் ஈறு ஒற்று அழிந்து உயிர் ஈறு ஒப்ப உம்
வன்மைக்கு இனம் ஆ திரிப உம் ஆகும்
வட்டம்+கல் = வட்டக்கல்
மரம் + சிறிது = மரஞ்சிறிது

மகரத்திற்குச் சிறப்பு விதி:
வேற்றுமை மப்போய் வலிமெலி உறழ்வும்
அல்வழி உயிர் இடைவரின் இயல்பும் உள

குளம் + கரை = குளக்கரை, குளங்கரை
(வேற்றுமை மப்போய் வலிமெலி உறழ்வும்)
மரம் + அழுதது = மரமழுதது
மரம் + வலிது = மரம் வலிது

நும், தம், எம், நம் என்பனவற்றிற்குச் சிறப்பு விதி:
நும் தம் எம் நம் ஈறு ஆம் மவ்வரு ஞ ந
நும் + ஞாண் = நுஞ்ஞாண்
தம் +ஞாண் = தஞ்ஞாண்
நம் + ஞாண் = நஞ்ஞாண்
நும்+நூல் = நுந்நூல்
தம்+நூல் = தந்நூல்
எம்+நூல் = எந்நூல்
நம்+நூல் = நந்நூல்

அகம் என்பதற்குச் சிறப்பு விதி:
அகம் முனர் செவி கை வரின் இடையன கெடும்

அகம்+செவி -> இடைகெட்டு, அம்+செவி
அம்+செவி = அஞ்செவி
அகம்+கை -> இடை கெட்டு, அம்+கை என மாறி, அங்கை என மாறும்.

மகர மெய்யீற்றுப் புணர்ச்சி விதி, ய், ர், ல், வ் புணர்ச்சி, ள, ழ புணர்ச்சி விதிகள் பார்க்க வேண்டியிருக்கின்றன.

நன்றிக்குரியவர்கள்:

  • மதிப்புறு பேராசிரியர் மு. பாலசுப்பிரமணியன், ஶ்ரீபாரதி கலை அறிவியல் மகளிர் கல்லூரி, கைக்குறிச்சி, புதுக்கோட்டை
Standard
General

நன்னூல் – உயிரீற்றுப் புணரியல் – நாள் 2

புணர்ச்சி

அவன் ஒரு மனிதனைப் பார்த்தான்
எப்படி ‘னைப்’ வந்தது? ஐ வேற்றுமை உருபும் வல்லெழுத்தும் மிகுகிறது.

நிலைமொழி – மனிதன்
வருமொழி – பார்த்தான்
வருமொழியால் நிலைமொழி மாற்றமடைந்து மனிதனைப் என மாறுகிறது.

மெய் உயிர் முதல் ஈறு ஆம் இரு பதங்க ளும்
தன்னொடும் பிறிதொடும் அல்வழி வேற்றுமை
பொருளின் பொருந்துழி நிலை வரு மொழிகள்
இயல்பு ஒடு விகாரத்து இயைவது புணர்ப்பு
” (நன்னூல்)

மெய் உயிர் முதல் ஈறு ஆம் இரு பதங்க ளும்
நிலைமொழியிலும் வருமொழியிலும் மெய்யெழுத்து அல்லது உயிரெழுத்து நிற்கலாம்.

அல்வழி வேற்றுமை – அல்வழிப் புணர்ச்சி, வேற்றுமைப்புணர்ச்சி,
இயல்பு ஒடு விகாரத்து இயைவது புணர்ப்பு – இயல்புப் புணர்ச்சி, விகாரத்துப் புணர்ச்சி


புணர்ச்சி வகை 1:
உயிர் முன் உயிர் -> யானை + ஆயிரம் = யானையாயிரம்
உயிர் முன் மெய் -> யானை + கால் = யானைக் கால்
மெய் முன் உயிர் -> யான் + ஆயிரம் = யானாயிரம்
மெய் முன் மெய் -> யான் + பெரியன் = யான்பெரியன்

புணர்ச்சி வகை 2:
வினை முன் பெயர் -> வந்தான் + முருகன்
வினை முன் வினை -> வந்தான் + சென்றான்

புணர்ச்சி வகை 3:
வேற்றுமைப் புணர்ச்சி:
ஐ ஆல் கு இன் அது கண்
மொத்தம் எட்டு வேற்றுமைகள் இருக்கின்றன. முதல், கடைசி வேற்றுமைக்கு உருபுகள் இல்லை.

“வேற்றுமை ஐ முதல் ஆறுஆம்
அல்வழி
தொழில் பண்பு உவமை உம்மை அன்மொழி எழுவாய் விளி ஈர் எச்சம் முற்று இடை உரி தழுவு தொடர் அடுக்கு என ஈர் ஏழ் ஏ

அல்வழிப் புணர்ச்சி (வேற்றுமை அல்லாத வழி புணர்ச்சி) :
தொகை நிலைத் தொடர்
தொகா நிலைத் தொடர்

தொகை நிலைத் தொடர்:
வினைத்தொகை, பண்புத் தொகை, உவமைத் தொகை, அன்மொழித் தொகை

தொகா நிலைத் தொடர்:
எழுவாய்வேற்றுமைத் தொடர்
விளிவேற்றுமைத் தொடர்
இடைச்சொல் தொடர்
உரிச்சொல் தொடர்
அடுக்குத் தொடர்
பெயரெச்சத் தொடர்
வினைமுற்று(குறிப்பு வினைமுற்று, தெரிநிலை வினை முற்று)

புணர்ச்சி – 4 Models
இயல்புப்புணர்ச்சி ->பூ+மழை = பூமழை
தோன்றல் புணர்ச்சி -> பூ+கோதை = பூங்கோதை
திரிதல் புணர்ச்சி -> வில் + கோலம் = விற்கோலம்
கெடுதல் புணர்ச்சி -> வளமை + மனை = வளமனை

“விகாரம் அனைத்தும் மேவலது இயல்பே”
விகாரம் இல்லாமல் வரக்கூடியது இயல்புப் புணர்ச்சி ஆகும்.

“தோன்றல் திரிதல் கெடுதல் விகாரம் மூன்றும் மொழி மூவிடத்தும் ஆகும்.”
விகாரப் புணர்ச்சியாகிய தோன்றல் திரிதல் கெடுதல் மூன்றும் மொழிக்கு முதலில் இடையில் கடையில் என எங்கே வேண்டுமானாலும் நடக்கலாம்.

பகுதி – 2
பொதுவான புணர்ச்சிகளைப் பேசுவோம்.
உயிர் + ஈறு + புணர்ச்சி + இயல் = உயிரீற்றுப்புணரியல்

“நிலைமொழியின் இறுதியில் உயிரெழுத்துகள் பன்னிரண்டும் நிற்றல்”
அ ஆ இ ஈ உ ஊ எ ஏ ஐ ஒ ஓ ஒள

“வருமொழியின் முதலில் பன்னிரண்டு உயிரெழுத்துகளும் நிற்றல்”
“வருமொழியின் முதலில் பதினெட்டு மெய்யெழுத்துகளும் நிற்றல்”
வல்லினம் – க ச ட த ப ற
மெல்லினம் – ஞ ங ண ந ம ன
இடையினம் – ய ர ல வ ழ ள

உயிரீற்றுப்புணரியல் – இயல்புப்புணர்ச்சி
நிலைமொழியின் இறுதியில் உயிரெழுத்துகள் பன்னிரண்டும் நிற்றல்

வருமொழியின் முதலில் மெய்யெழுத்துகளில் மெல்லெழுத்துகளும் இடையின எழுத்துகளும் வரும்.

மெல்லெழுத்துகளில் 3 எழுத்துகள் தாம் வரும் – ஞ், ந், ம்
விள + ஞான்றது = விளஞான்றது
எழு + ஞாயிறு = எழுஞாயிறு
விள + நீண்டது = விளநீண்டது
விள + மாண்டது = விளமாண்டது

இடையினம்
ய, வ – இரண்டு மட்டுமே மொழிக்கு முதலாக வரும்.
விள + யாப்பு = விளயாப்பு
விள + வன்மை = விளவன்மை

இயல்புப்புணர்ச்சி- 2
நிலைமொழியாக உயர்திணை பொதுப்பெயர்கள் இறுதியில் உயிரெழுத்துகள் பன்னிரண்டும் நிற்றல்

வருமொழியின் முதலில் உயர்திணைப் பெயர்களோ பொதுப் பெயர்களோ இருந்தால் எந்த வித மாற்றங்களும் இருக்காது.

இரண்டு பெயர்கள்
நம்பி + பெரியன்= நம்பி பெரியன்
தாய் + பெரியள் = தாய் பெரியள்

விகாரப் புணர்ச்சி – 3
உடம்படு மெய்

நிலைமொழி இறுதியில் உயிரெழுத்துகள் பன்னிரண்டும் நிற்றல்

வருமொழியின் முதலில் உயிரெழுத்துகள் பன்னிரண்டும் நிற்றல்

மணி + அழகிது = மணியழகிது
தீ + அழகிது = தீயழகிது
விள + அழகிது = விளவழகிது
தினை + அமைப்பு = தினையமைப்பு
சே + அடி = சேவடி
அவனே + அழகன் = அவனேயழகன்

சே + அடி = சேயடி
அவனே + அழகன் = அவனேவழகன்

நூற்பா:
இ ஈ ஐ வழி ய வும் ஏனை உயிர் வழி வ வும்
ஏ முன் இவ்விருமையும் உயிர்வரின் உடம்படுமெய் என்றாகும்.

கோ + இல் = கோவில் தான் சரி!

விகாரப் புணர்ச்சி: குற்றியலுகரப் புணர்ச்சி

நிலைமொழி இறுதியில் குற்றியலுகரம் நிற்க

வருமொழியின் முதலில் உயிரெழுத்துகள் பன்னிரண்டும்

நாகு + அரிது = நாகரிது

(உயிர் வரின் உக்குறள் மெய்விட்டு ஓடும் விதிக்கேற்ப ‘உ’ நீங்கும்)

மெய்யெழுத்து வந்தால் (குறிப்புக்காக)
நாகு + யாது = நாகியாது

“உயிர்வரின் உக்குறள் மெய்விட்டு ஓடும்
ய வரின் இயாம்
முற்றும் அற்று வரும். “

“இயல்பினும் விதியினும் நின்ற உயிர் முன் கசதப மிகும்”

டற மொழிக்கு முதலில் வராது.

விள + கோடு = விளக்கோடு
விள + சிறிது = விளச்சிறிது

உயிர்முன் வல்லினம்
நிலைமொழி இறுதியில் உயிர் எழுத்து பன்னிரண்டும் நிற்றல்

வருமொழியின் முதலில் க,ச,த,ப மிகும்.

சிறப்புப் புணர்ச்சி
வாழிய என்பதன் ஈற்றின் உயிர்மெய்
ஏகலும் உரித்து அஃது ஏகினும் இயல்பே

வாழிய + கொற்றா = வாழி கொற்றா

சாவ என்மொஇ ஈற்று உயிர்மெய் சாதல்
உம் விதி
சாவ + குத்தினான் = சாக்குத்தினான்.

பல+பல = பலப்பல
பல + பல = பலபல
பல+பல = பற்பல
இதே போல் தான் சிலசிலவும்!

பல + கலை = பல்கலை

பல சில எனும் இவை தம் முன் தாம் வரின்
இயல்பு உம் மிகல் உம் அகரம் ஏக
லகரம் றகரம் ஆகல் உம் பிற வரின்
அகரம் விகற்பம் ஆகல் உம் உள பிற

ஆகாரப்புணர்ச்சி:
“குறியதன் கீழ் ஆ குறுகல்”

நிலா + அழகன் = நிலவழகன்

இகரப்புணர்ச்சி:
அன்றி இன்றி என் வினையெஞ்சு இகரம்
தொடர்பின் உள் உகரம் ஆய் வரின் இயல்பு

அன்றி + போகி = அன்று போகி

உரி வரின் நாழியின் ஈற்று உயிர்மெய் கெட
மருவும் டகரம் உரியின் வழியெ

நாழி + உரி = நாடுரி

சுவை புளி முன் இன மென்மை உம் தோன்றும்

புளி+சுவை = புளிஞ்சுவை
புளி + சாதம் = புளிஞ்சாதம்

உகரப் புணர்ச்சி:
மூன்று ஆறு உருபு எண் வினைத்தொகை சுட்டு ஈறு
ஆகும் உகரம் முன்னர் இயல்பு

வேற்றுமை உருபுகள் – மூன்றாம் வேற்றுமை உருபு – ஒடு
சாத்தனொடு + கொண்டான் = சாத்தனொடு கொண்டான்
ஆறாம் வேற்றுமை உருபு – அது
சாத்தனது + கை = சாத்தனது கை

எண்ணுப்பெயர் புணர்ச்சியில்
ஒரு + கை = ஒரு கை
அடு + களிறு = அடுகளிறு
அது + பெரிது = அது பெரிது
சாத்தனது + கை = சாத்தனது கை

வன்தொடர் அல்லன முன் மிகா அல்வழி
வன்தொடர் குற்றியலுகரத்தில் மிகாது.
ஆறு + தலை = ஆறுதலை
எஃகு + பெரிது = எஃகு பெரிது

இடை தொடர் ஆய்த தொடர் ஒற்று இடையின்
மிகா நெடில் உயிர் தொடர் முன் மிகா வேற்றுமை

திசைப் பெயர் புணர்ச்சி:
திசை ஒடு திசை உம் பிற உம் சேரின்
நிலை ஈற்று உயிர்மெய் க ஒற்று நீங்கல் உம்
றகரம் ன ல ஆ திரிதல் உம் ஆம் பிற

வடக்கு + மேற்கு = வடமேற்கு
வடக்கு + கிழக்கு = வடகிழக்கு
தெற்கு + மேற்கு = தென்கிழக்கு
மேற்கு + கரை = மேல்கரை
கிழக்கு + காற்று = கீழ்காற்று
கிழக்கு + கரை = கீழ்கரை

எண்ணுப்பெயர் புணர்ச்சி

ஒன்று முதல் எட்டு ஈறு ஆம் எண் உள்
முதல் ஈர் எண் முதல் நீளும் மூன்று ஆறு
ஏழ் குறுகும் ஆறு ஏழு அல்லவற்றின்
ஈற்று உயிர்மெய் உம் ஏழன் உயிர் உம்
ஏகும் ஏற்புழி என்மனார் புலவர்

ஒன்று + ஆயிரம் = ஓராயிரம்
இரண்டு + ஆயிரம் = ஈராயிரம்
மூன்று + தலை = முத்தலை
ஆறு + பத்து = அறுபது
ஏழு + பத்து = எழுபது

ஒன்றன் புள்ளி ரகரம் ஆக
இரண்டன் ஒற்று உயிரேக உ வரும்

ஒன்று + அலை = ஓரலை
இரண்டு + அலை = ஈரலை

மூன்றன் உறுப்பு அழிவு உம் வந்தது

மூன்று + உலகு = மூவுலகு
மூன்று + கலம் = முக்கலம்

நான்கன் மெய் ஏ ல ற ஆகும் ஏ

நான்கு + அடி = நாலடி
ஐந்தன் ஒற்று அடைவது உம் இனம் உம் கேடு உம்
ஐந்து + வகை = ஐவகை

எட்டன் உடம்பு ண ஆகும் என்ப 193
எட்டு + பத்து = எண்பது

ஒன்பான் ஒடு பத்து உம் நூறு உம் ஒன்றின்
முன்னது இன் ஏனைய முரணி ஒ ஒடு

ஒன்பது + பத்து = தொன்பது
தொன்பது + நூறு = தொண்ணூறு

முதல் இரு நான்கு ஆம் எண் முணர் பத்தில்
இடை ஒற்று ஏகல் ஆய்தம் ஆகல்
என இரு விதி உம் ஏற்கும் என்ப

ஒருபது, இருபது, முப்பது, இப்படியே எண்பது வரை.

ஒருபஃது ஆதி முன் ஒன்று முதல் ஒன்பான்
எண் உம் அவை ஊர் பிறவும் எய்தின்
ஆய்தம் அழிய ஆண்டு ஆகும்

ஒன்று + பத்து ஒன்று = ஒருபத்தொன்று
இரு+பத்து ஒன்று = இருபத்தொன்று

இரண்டு முன் வரின் பத்தின் ஈற்று உயிர்மெய்
கரந்திட ஒன்று ன ஆகும் என்ப

பத்து + இரண்டு = பன் + இரண்டு => பன்னிரண்டு

ஊகாரம்:
பூ பெயர் முன் இனமென்மையும் தோன்றும்

பூ + சோலை = பூஞ்சோலை

ஐகாரம்
பனை முன் கொடி வரின் மிகல் உம் வலி வரின்
ஐ போய் அம் உம் திரள் வரின் உறழ்வு உம்
அட்டு உறின் ஐ கெட்டு அ நீள்வு உம் ஆம் வேற்றுமை

பனை + கொடி = பனைக்கொடி
பனை + காய் = பனங்காய்
பனை + அட்டு = பனாட்டு

படிக்க வேண்டிய இணைப்பு:
http://www.tamilvu.org/courses/degree/c021/c0213/html/c0213333.htm

நன்றிக்குரியோர்:
முனைவர் மு. பழனியப்பன்
தமிழ்த்துறைத் தலைவர், அரசு கலை அறிவியல் கல்லூரி, திருவாடனை
https://www.youtube.com/watch?v=QcpVgPkRvF4

Standard