General

நன்னூல் – மெய்யீற்றுப் புணரியல் – வகுப்பு 3 – குறிப்புகள்

நன்னூலில் எழுத்ததிகாரம், சொல்லதிகாரம் என்று இரண்டு அதிகாரங்கள் இருக்கின்றன. அதில் எழுத்ததிகாரத்தில் உயிரீற்றுப் புணரியலைத் தொடர்ந்து இருப்பது மெய்யீற்றுப் புணரியல்.

புணர்ச்சி இரண்டு வகைப்படும்.

  • இயல்புப் புணர்ச்சி
  • விகாரப் புணர்ச்சி – தோன்றல் திரிதல் கெடுதல் விகாரம்
    பூ + கொடி = பூங்கொடி (தோன்றல்)
    கல்+ தீது = கஃறீது (திரிதல்)
    மரம் + வேர் = மரவேர்(கெடுதல்)
    ஒன்பது + பத்து = தொண்ணூறு (விகாரம்)

வேற்றுமைப் புணர்ச்சி
வேற்றுமை உருபு மறைந்தோ வெளிப்பட்டோ புணர்வது.
கல்லூரி + கட்டினான் = கல்லூரி கட்டினான்
கல்லூரியை + கட்டினான் = கல்லூரியைக் கட்டினான்

அல்வழிப் புணர்ச்சி
உருபு இல்லாத புணர்ச்சி

  1. எழுவாய்த் தொடர்
  2. விளித்தொடர்
  3. வினைத்தொகை
  4. பண்புத்தொகை
  5. உவமைத் தொகை
  6. உம்மைத் தொகை
  7. அன்மொழித் தொகை
  8. பெயரெச்சத் தொடர்
  9. வினையெச்சத் தொடர்
  10. தெரிநிலை வினைமுற்றுத் தொடர்
  11. குறிப்பு வினைமுற்றுத் தொடர்
  12. இடைச்சொல் தொடர்
  13. உரிச்சொல் தொடர்
  14. அடுக்குத் தொடர்

இந்தப் பதினான்கும் புணர்கின்ற புணர்ச்சி தான் அல்வழிப் புணர்ச்சி.

மெய்யீற்றுப் புணரியல்
நிலைமொழி ஈற்றிலே மெய்யெழுத்து நின்று வருமொழியுடன் புணர்வது மெய்யீற்றுப் புணரியல்.

ஆவி பன்னிரண்டு ஞணநமன யரலவழள (சாயும் உகரம்) குற்றியலுகரம் => 12 + 5 + 6 + 1 => 24 எழுத்துகள் மொழிக்கு இறுதியில் வரும்.

இந்த 24இல் ஆவி – உயிரெழுத்துகள்.
ஞணநமன + யரலவழள -> 11 மெய்யெழுத்துகளும் மொழிக்கு இறுதியில் நின்று புணர்வது தான் மெய்யீட்டுப் புணர்ச்சி.

  1. உடல்மேல் உயிர் வந்து ஒன்றுவது இயல்பே
    தமிழ் + அழகு = தமிழழகு
    நூல் + ஆசிரியர் = நூலாசிரியர்
  2. தனிக்குறில் முன் ஒற்று உயிர்வரின் இரட்டும்.
    கண் + இமை => கண்ண் + இமை = கண்ணிமை

மெய்யீற்றின் முன் மெய்:
தன் ஒழி மெய்முன் யவ்வரின் இகரம்
துன்னும் என்று துணிநரும் உளரே

(துணிநரும் உளரே – இழிவு சிறப்பும்மை)
வேல் + யாது => வேல் + இ + யாது = வேலியாது
ல் + இ = உடல் மேல் உயிர் வந்து ஒன்றுவது இயல்பே

வேல் + யாது = வேல்யாது என்றும் புணரும்.

சில முதல்நிலைத் தொழிற்பெயர்க்கும் ஏவற்கும் சிறப்பு விதி
ஞணநமலவளன ஒற்று இறு தொழிற்பெயர்
ஏவல்வினை நனிய ய அல் மெய் வரின்
உவ்வுறும் ஏவல் உறாசில சில்வழி

வேற்றுமையில்:
உரிஞ்+ கடிது
(உரிஞ் – முதல்நிலைத் தொழிற்பெயர்)
உரிஞ்+ கடிது => உரிஞ் +உ + கடிது
உரிஞு+ கடிது => உரிஞுக்கடிது
(க் – உயிரீற்றுப் புணரியல் – இயல்பினும் விதியினும் நின்ற உயிர் முன் கசதப மிகும்)

ஏவல் வினை – உண்
உண்+சாத்து => உண் + உ + சாத்தா = உண்ணுசாத்தா
(தனிக்குறில் முன்னொட்டு உயிர் வரின் இரட்டும்)
கசதப ஏன் மிகவில்லை?
சாத்தா – என்பது விளிப்பெயர்

நகர ஈற்றுத் தொழிற்பெயருக்குச் சிறப்பு விதி
நவ் இறு தொழிற்பெயர்க்கு அவ்வுமாம் வேற்றுமை
ஏற்கெனவே நகர ஈற்று உகரச் சாரியை பெறும் எனப் பார்த்தோம். அகரச் சாரியையையும் வரும்.
பொருந் + கடுமை
பொருந் + அ + கடுமை => பொருந + கடுமை => பொருநக் கடுமை

ணகர னகர ஈறு – சிறப்பு விதி
ணன வல்லினம் வர டறவும் பிறவரின்
இயல்பும் ஆகும் வேற்றுமைக்கு அல்வழி
அனைத்து மெய்வரினும் இயல்பாகும்

சிறுகண் + களிறு = சிறுகட்களிறு
பொன் + தூண் = பொற்றூண்

மண் + ஞாற்சி = மண்ஞாற்சி
பொன்+ஞாற்சி = பொன்ஞாற்சி

ணகர னகர ஈறு கெடுதல்:
குறில் அணைவில்லா ணனக்கள் வந்த
நகரம் திரிந்துழி நண்ணும் கேடே

குறில் அணைவில்லா – தனிக்குறில் இல்லாத

தூண் – தூ – குறில் இல்லை.
தூண் + நன்று => தூண் + ணன்று => தூ+ணன்று = தூணன்று
பசுமண் – தொடர்மொழி
பசுமண்+நன்று = பசுமண் + ணன்று => பசும+ணன்று = பசுமணன்று

ணகர ஈற்றுப் பெயர்க்குச் சிறப்பு விதி:
சாதி குழூஉ பரண் கவண் பெயர் இறுதி
இயல்பாம் வேற்றுமைக்கு உணவு எண்சாண் பிற
டவ்வாகலுமாம் அல்வழியும்மே

பாண்+குடி = பாண்குடி (பாணர் சாதி)
அமண் + குடி = அமண்குடி (குழு)
பரண்+கால் = பரண்கால்
கவண்+கால் = கவண்கால்
எண்(எள்) +பெரிது = எட்பெரிது
சாண்+கோல் = சாட்கோல்

னகர ஈற்று சாதிப் பெயர்:
னஃகான் கிளைப்பெயர் இயல்பு உம் அஃகான்
அடைவு உம் ஆகும் வேற்றுமை பொருள் கு

எயின்+சேரி = எயின்சேரி
எயின்+சேரி =>எயின் + அ + சேரி =எயினச்சேரி

எயின் – சாதி, னகர ஈற்றுச் சாதிப் பெயர்.
இயல்பாக எயின்சேரி என்றும் வரும். அஃகான் பெற்றும் (அ பெற்றும்) எயின+சேரி என்றும் வரும்.
எயின+சேரி = எயினச்சேரி (கசதப மிகும்.)

மீன் என்பதற்குச் சிறப்பு விதி:
மீன் றவொடு பொரூஉம் வேற்றுமை வழியே

மீன்+கண் = மீற்கண் (றவொடு பொரூஉம் வேற்றுமை வழி)
மீன் + செவி = மீன்செவி

தேன் என்பதற்குச் சிறப்பு விதி:

தேன்மொழி மெய்வரின் இயல்பும் மென்மை
மேவின் இறுதி அழிவும் வலிவரின்
ஈறுபோய் வலிமெலி மிகலுமாம் இருவழி

தேன்+கடிது = தேன்கடிது (அல்வழிப் புணர்ச்சி எனவே தான் தேக்கடிது தேங்கடிது என வரவில்லை)
தேன்+மாட்சி = தேன்மாட்சி
தேன்+மொழி = தேமொழி
(மென்மை மேவின் இறுதி அழிவும்)

தேன்+குடம் = தேக்குடம், தேங்குடம்
(வலிவரின் ஈறுபோய் வலிமெலி மிகலுமாம் இருவழி) (வேற்றுமைப் புணர்ச்சி)

எகின் என்பதற்குச் சிறப்பு விதி:
மரம் அல் எகின் மொழி இயல்பு உம் அகரம்
மருவ வலி மெலி மிகல் உம் ஆகும்

இயல்புப் புணர்ச்சி:
எகின்+கால் = எகின்கால்
எகின்+சிறை = எகின்சிறை

எகின்+புள் => எகின் + அ + புள் = எகினப்புள் => எகினம்புள்

குயின் என்பதற்குச் சிறப்பு விதி:
குயின் ஊன் வேற்றுமைக் கண்ணும் இயல்பே
குயின் + கடுமை = குயின்கடுமை
ஊன+கடுமை = ஊன்கடுமை

மின், பின், பன்,கன் என்பதவற்றிற்குச் சிறப்பு விதி:
மின் பின் பன் கன் தொழிற்பெயர் அனைய
கன் அ ஏற்று மென்மை ஓடு உறழும்

மின்+கடிது => மின் + உ + கடிது => மின்னுக்கடிது
(தொழிற்பெயர் அனைய – தொழிற்பெயர் போல, உகரச் சாரியைப் பெற்று வரும்)

கன் + தட்டு => கன் + அ + தட்டு => கன்ன + தட்டு => கன்னத்தட்டு (தனிக்குறில் ஒற்று உயிர் வரின் இரட்டும்)

தன் என் நின் என்பனவற்றிற்குச் சிறப்புவிதி:
தன் என் என்பவற்று ஈற்று ன வன்மை ஓடு
உறழும் நின் ஈறு இயல்பு ஆம் உற
உறழும் – இயல்பாகவும் வரும், னகரம் றகரமாகவும் வரும்.

தன்+பாதுகாப்பு = தன்பாதுகாப்பு, தற்பாதுகாப்பு

என்+பகை => என்பகை, எற்பகை
நின்+பகை => நின்பகை

மகர ஈறு [பொதுவிதி]
மவ் ஈறு ஒற்று அழிந்து உயிர் ஈறு ஒப்ப உம்
வன்மைக்கு இனம் ஆ திரிப உம் ஆகும்
வட்டம்+கல் = வட்டக்கல்
மரம் + சிறிது = மரஞ்சிறிது

மகரத்திற்குச் சிறப்பு விதி:
வேற்றுமை மப்போய் வலிமெலி உறழ்வும்
அல்வழி உயிர் இடைவரின் இயல்பும் உள

குளம் + கரை = குளக்கரை, குளங்கரை
(வேற்றுமை மப்போய் வலிமெலி உறழ்வும்)
மரம் + அழுதது = மரமழுதது
மரம் + வலிது = மரம் வலிது

நும், தம், எம், நம் என்பனவற்றிற்குச் சிறப்பு விதி:
நும் தம் எம் நம் ஈறு ஆம் மவ்வரு ஞ ந
நும் + ஞாண் = நுஞ்ஞாண்
தம் +ஞாண் = தஞ்ஞாண்
நம் + ஞாண் = நஞ்ஞாண்
நும்+நூல் = நுந்நூல்
தம்+நூல் = தந்நூல்
எம்+நூல் = எந்நூல்
நம்+நூல் = நந்நூல்

அகம் என்பதற்குச் சிறப்பு விதி:
அகம் முனர் செவி கை வரின் இடையன கெடும்

அகம்+செவி -> இடைகெட்டு, அம்+செவி
அம்+செவி = அஞ்செவி
அகம்+கை -> இடை கெட்டு, அம்+கை என மாறி, அங்கை என மாறும்.

மகர மெய்யீற்றுப் புணர்ச்சி விதி, ய், ர், ல், வ் புணர்ச்சி, ள, ழ புணர்ச்சி விதிகள் பார்க்க வேண்டியிருக்கின்றன.

நன்றிக்குரியவர்கள்:

  • மதிப்புறு பேராசிரியர் மு. பாலசுப்பிரமணியன், ஶ்ரீபாரதி கலை அறிவியல் மகளிர் கல்லூரி, கைக்குறிச்சி, புதுக்கோட்டை
Standard

One thought on “நன்னூல் – மெய்யீற்றுப் புணரியல் – வகுப்பு 3 – குறிப்புகள்

  1. இளங்குமரன் says:

    வணக்கம் ஐயா. அருமையான தளம். மிகவும் பயனுள்ள தளம். வாழ்த்துகின்றேன். மேலேயுள்ள படத்தில் இருக்கும் அட்டைப்படம் சிறப்பாக உள்ளது. அந்த நூல் எங்கு கிடைக்கும் ஐயா.

    Like

Leave a comment