தமிழ்

நன்னூல் – சொல்லதிகாரம் பெயரியல் – நாள் 5 – வகுப்புக்குறிப்புகள்

மு சகம் நிழற்றும் முழு மதி மு குடை
அச்சுதன் அடி தொழுது அறைகுவன் சொல் ஏ

சுதம் – அழிவு

அச்சுதம் – அழியாமை

முக்குடை:

சந்திராதித்யம் = நண்மை வெம்மை நல்கி உயிர் வளர்த்தல்

நித்ய விநோதம் = நாள்தோறும் புதுமையோடு உயிர்களைச் சலிப்பின்றி வாழ வைத்தல்

சகலபாசனம் = அனைத்து உயிர்களோடும் தொடர்பு கொண்டிருத்தல்

அருகன்? கதிரவன்?

இயற்கை வழிபாட்டைச் சொல்கிறது. ஆனால், பவனந்தி முனிவர் சமணர் என்பதால் அருகனைச் சொல்வதாக உரையாசிரியர்கள் சொல்கிறார்கள். அச்சுதா அமரரேறே என்னும் சொல் திருமாலைக் குறிக்கிறது.

வயிர ஊசியும் மயன்வினை இரும்பும்

செயிரறு பொன்னைச் செம்மைசெய் ஆணியும்

தமக்கமை கருவியும் தாமாம் அவைபோல்

உரைத்திறம் உணர்த்தலும் உரையது தொழிலே

– அகத்தியர்

வைரத்தை அறுக்க வைர ஊசியும் இரும்பை வெட்ட இரும்பு உளியும் பொன்னைத்துளையிட பொன்னால் ஆகிய மெருகாணியும் தேவை என்பது போலச் சொல்லின் திறம் அறிய சொல்லேகருவியாய் அமையும்.

இவ்வோத்து என்ன பெயர்த்ததோவெனின்

இம்முதல் ஓத்து என்னனுதலியதோவெனின்

ஓத்து நுதலியதூஉம் ஓத்தினது

பெயர் உரைப்பவே விளங்கும்…

என்றெல்லாம் பழம்பண்டிதர்கள் போல இப்போது சொல்லவியலாதெனினும் சாத்தன், சாத்தி, கருவூரான் எனச் சமகாலப் பொருத்தப்பாடின்றி எடுத்துக்காட்டுப் பெயர்களைக் கூட முன்னோர் சொல் பொன்னே போல் போற்றி வேறு பெயர்களைப் பயன்படுத்தாமலும் இருப்பதில் இருந்து சற்று எளிமையாகப்பெயரியலுள் பயணிக்கலாம்.

பெயரில் என்ன இருக்கிறது?

மானங்காத்தான், அஞ்சான், தையான் – விளிம்பு நிலைப்பெயர்கள்.

பெயரன் – பெயர்த்தி (தமிழ் மரபு)

‘சுட்டி ஒருவர் பெயர்கொளப் பெறார்’ அகம் தவிர்த்து பெயர்கள் மிக முக்கியமானவை. அகழ்வாய்வில் பானை ஓடுகளில் பெயர்கள் தொடர்ச்சியாக சில்வர் பாத்திரங்களிலும் பதியப்பட்டன.

பெயரில் என்ன இருக்கிரது?

பெயரில் தான் எல்லாம் இருக்கிறது என்றான் ஷேக்ஸ்பியர்.

” பலரும் சொல்கிறார்கள்
பெயரில் என்ன இருக்கிறது?

சேரி
பறையன்
தேவடியாள்
பீ, மூத்திரம், கொசு
பன்னி
கழுதை, கருவாடு
பூணூல்
அப்பம், வடை, தயிர் சாதம்

ஆங்கிலம்
சமஸ்கிருதம்
மனு
அமெரிக்கா
சங்கர மடம்
கொழும்பு

வள்ளலார்
பெரியார்
அம்பேத்கர்
மார்க்ஸ்

பெயருக்குப் பின்னால்
எல்லாமும் இருக்கிறது “
– இரா. காமராசு

பலவகைப் பொருள்களின் தொகுதியே உலகு. வன்சிரம் – வன்மையான தலையை உடைய மீன், கீழாநெல்லி – கிளையின் கீழே நெல்லி , ஊமணி – ஊணால் ஆகிய மணி போன்ற பொருள் (ஆட்டில் கழுத்தில் இருக்கும்) பொருள்களைக் குறிப்பதற்குக் குறியீடாய்ப் பெயர் தேவை.

Book Post ­ அவிழ்மடல் என்னும் மொழிபெயர்ப்பை ஒரு தச்சுத் தொழிலாளிதான் உருவாக்கினார். பெருஞ்சித்திரனார், கூட்டிப் பெருக்கும் பெண்ணிடம் தான் refill என்பதற்கு மைக்குச்சி என்னும் வார்த்தையைக்கேட்டார்.

பெயர்ச்சொல்லின் இலக்கணத்தை நன்னூலார் 62 நூற்பாக்களில் விளக்க முதல் 17 நூற்பாக்கள் சொற்களின் இலக்கணத்தைப் பொதுவாகவும் எஞ்சியவை பெயர்ச்சொல்லின் இலக்கணத்தைச் சிறப்பித்தும் கூறுகின்றன.

சொல்லின் பொது இலக்கணம்:

ஒருமொழி தொடர்மொழி பொதுமொழி என்றா
இரு திணை ஐம் பால் பொருள் ஐ உம் தன் ஐ உம்
மூ வகை இடத்து உம் வழக்கு ஒடு செய்யுளின்
வௌிப்படை குறிப்பின் விரிப்பது சொல் ஏ

ஒருமொழி – புலம்

தொடர்மொழி – புலம் பெயர்ந்தோர்

பொதுமொழி – பலகை (பல கைகள், அமர உதவும் பலகை)

இரு திணைகள்:

1. உயர்திணை (Rational)

மக்கள் தேவர் நரகர் உயர்திணை

2. அஃறிணை (Irrational)

மற்று உயிர் உள்ளளவும் இல்லவும் அஃறிணை.

பால் – ஆண்(masculine), பெண் (Feminine), பலர் (Common), ஒன்றன்(neuter singular), பலவின்(neuter plural)

பால் பாகுபாடு:

உயர்திணையே பால் காட்டும். தமிழில் அறிவியல் அடிப்படையில் மொழிக்கட்டமைப்பு

மேலைத்தேய / வடவாரிய மொழிகளில் அஃறிணைக்குப் பால் – அதாவது சடப்பொருள்களுக்குப் பால் காட்டுதல், அறிவியலற்ற ஆணாதிக்க மொழிக்கட்டமைப்பு

எ.கா. மேசை (ஆண்பால்), சிறுபலகை (பெண்பால்)

திணை பால்களுக்குப் புறனடை

பெண்மைவிட்டு ஆண் அவாவுவ பேடு ஆண்பால்

ஆண்மைவிட்டு அல்லது அவாவுவ பெண்பால்

இருமையும் அஃறிணை அன்னவும் ஆகும்.

அலி வந்தான் – ஆண்பால்

பேடி அணியாள் – பெண்பால்

இரண்டையும் இப்படி உயர்திணையாகவும்

அலி வந்தது

பேடி வந்தது என்று அஃறிணையாகவும் சொல்லலாம்.

இடம்(Person)

தன்மை (சொல்வோன்)

முன்னிலை (கேட்போன்)

படர்க்கை (அயலோன்)

வழக்கு(Usage)

சொற்களை வழங்கும் முறையே வழக்கு – தொகையும்(2) விரியும்(6)

இலக்கணம் உடையது இலக்கணப்போலி

மரூஉ என்று ஆகும் மூவகை இயல்பும்

இடக்கர் அடக்கல் மங்கலம் குழூஉக்குறி

எனும் முத்தகுதியோடு ஆறாம் வழக்கியல்

I இயல்பு வழக்கு(Natural Usage):

எப்பொருட்கு எச்சொல் அமைந்ததோ அப்பொருளை அச்சொல்லால் கூறுவது

1. இலக்கணம் உடையது (Grammatical form)

தொன்று தொட்டு இலக்கண நெறி மரபில் வருவது. எ.கா. நிலம் நீர் தீ

2. இலக்கணப் போலி(Apparent Grammatical Form)

இலக்கணம் உடையன போல பொருள் மாறாமல் முன்பின்னாக நிற்பன.

எ.கா. நகர்ப்புறம் – புறநகர்.

3. மரூஉ – (Corrupt Form) – அவ்வப்போது இலக்கணம் சிதைந்து வருவது

எ.கா. சோழ நாடு – சோணாடு.

II தகுதிவழக்கு (Appropriate Usage):

1. இடக்கரடக்கல் (Decent Form) சொல்லத்தகாததை மறைத்து வேறொரு சொல்லால் சொல்லுவது எ.கா கால்கழுவி வந்தார் (மலங்கழுவி வந்தார்)

2. மங்கலம் (Eupherism) ­ மங்கலமல்லாததை மங்கலமாகக் கூறுதல்

செத்தாரைத் துஞ்சினார் எனல்.

3. குழூஉக்குறி(Conventional Form) ­இயல்பான சொற்குறியைத் தங்கள் கூட்டத்து மட்டும் விளங்குமாறு வேறொரு சொற்குறியால் குறிப்பது.

பொற்கொல்லர்கள் பொன்னைப் பறி எனல்.

கள்ளை வேடர்கள் சொல்விளம்பி எனல்.

முசுமுசுக்கை என்பதை இருகுரங்கின் கை என்று சித்தமருத்துவர்கள் சொல்லல்.

சொற்கள் பொருள் உணர்த்தும் முறை:

சொற்கள் பெரும்பான்மை வெளிப்படையாகவும் சிறுபான்மை குறிப்பாகவும் பொருள் உணர்த்தும்.

ஒன்றொழி பொதுச்சொல்:

மாடுகள் பால் கறந்தன (பால் என்னும் குறிப்பு ஆண்பாலை ஒழித்துப் பெண்பாலைச் சுட்டியது)

விகாரம்:

மரைமலர் மலர் என்னும் பின்னொட்டால் தாமரையை உணர்த்தியது.

தகுதி: கால் கழுவி வந்தான் (மலம் கழுவி வந்தமையை)

ஆகுபெயர்: புளி தின்றான் (புளி – புளியம்பழம்)

அன்மொழித் தொகை: பொற்றொடி வந்தாள் (தொடியைக் குறிக்காமல் அதனை அணிந்த பெண்ணைக் குறிப்பால் உணர்த்தியது).

குறிப்பு வினைச்சொல்: சொலல்வல்லன்(வல்லன் எனும் பெயர்ச்சொல் சொல்லுதலில் வல்லன் எனும் வினைக்குறிப்புப் பொருளைத் தந்தது).

முதற்குறிப்பு: ஆத்திசூடி கற்றாள் (ஆத்திசூடி என்னும் நூலைக் குறிப்பால் உணர்த்தியது)

தொகைக்குறிப்பு: தமிழ் வேந்தர் மூவர்

பலவகையாய் வரும் குறிப்புச் சொற்கள்: பாயாவேங்கை (வேங்கை(புலி) பாய்வது, பாயததால் வேங்கை மரமாயிற்று)

சொல்லின் பாகுபாடு:

அதுவே

து ஏ
இயற்சொல் திரிசொல் இயல்பின் பெயர் வினை
என இரண்டு ஆகும் இடை உரி அடுத்து
நான்கு உம் ஆம் திசை வடசொல் அணுகா வழி

இயற்சொல் –

செந்தமிழ் ஆகித் திரியாது யார்க்கும்

தம்பொருள் விளக்கும் தன்மைய இயற்சொல்

திரிசொல் –

பெயர்த்திரிசொல் – கிள்ளை தந்தை – கிளி என்னும் ஒரு பொருள் குறித்த பல பெயர்ச்சொல்.

வினைத் திரிசொல் – படர்ந்தான் ஏகினான் – போனான் என்னும் ஒரு பொருளைக் குறித்த பலவினைச்சொல்.

இடைத்திரிசொல் – சேறும் வருதும் றும் தும் என்னும் எதிர்காலம் குறித்த பல இடைச்சொல்

உரித்திரிசொல் – சால உறு தவ மிகுதி என்னும் ஒரு பொருள் குறித்த பல உரிச்சொல்.

திசைச்சொல்:

பல திசைகளிலும் வழங்குகின்ற மொழிகளில் இருந்து வந்து தமிழில்வழங்கும் சொற்கள்.

செந்தமிழ் நிலம் சேர் பன்னிரு நிலத்தின் உம்
ஒன்பதிற்று இரண்டின் இல் தமிழ் ஒழி நிலத்தின் உம்
தம் குறிப்பின ஏ திசைச்சொல் என்ப

தென்பாண்டி, குட்டம், குடம் கற்கா, வேண், பூழி ,
பன்றி, அருவா, அதன் வடக்கு , நன்றாய
சீதம், மலாடு, புனல் நாடு, செந்தமிழ்சேர்
ஏதம் இல் பன்னிரு நாட்டு எண்”

– பன்னிரு நிலம் குறித்த பழம்பாடல்

திசைச்சொல்லாக விளங்கும் பன்னிரு நிலத்துச் சொற்கள்:

சோற்றை சொன்றி எனல் தென்பாண்டி நாட்டுச் சொல்

தாயைத் தன்னை எனல் குட்ட நாட்டுச் சொல்

தந்தையை அச்சன் எனல் குட நாட்டுச்சொல்

வஞ்சரைக் கையர் எனல் கற்கா நாட்டுச்சொல்

தோட்டத்தைக் கிழார் எனல் வேணாட்டுச் சொல்

சிறுகுளத்தைப் பாழி எனல் பூழிநாட்டுச் சொல்

வயலைச் செய் எனல் பன்றி நாட்டுச் சொல்

சிறுகுளத்தைக் கேணி எனல் அருவா நாட்டுச்சொல்

புளியை எகின் எனல் அருவாவட தலை நாட்டுச் சொல்

தோழனை எலுவன் எனல் சீதநாட்டுச் சொல்

நீரை வெள்ளம் எனல் மலையமான் நாட்டுச் சொல்

தாயை ஆய் எனல் புனல் நாட்டுச் சொல்.

திசைச்சொல்லாக விளங்கும் வேற்றுமொழிச் சொல்:

சிங்களம் சோனகம் சாவகம் சீனம் துளுக் குடகம்

கொங்கணம் கன்னடம் கொல்லம் தெலுங்கம் கலிங்கம் வங்கம்

கங்கம் மகதம் கவுடம் கடாரம் கடுங்குசலம்

தங்கும் புகழ்த்தமிழ் சூழ்பதி னேழ் புவி தாம் இவையே(பழம்பாடல்)

மாமரத்தைக் கொக்கு எனல் துளு மொழிச்சொல்

ஐயோ என்பதை அந்தோ எனல் சிங்கள மொழிச்சொல்

அகப்படுதலைச் சிக்குதல் என்றல் கன்னடமொழிச்சொல்

சொல்லுதலைச் செப்புதல் எனல் தெலுங்கு மொழிச்சொல்

பெயர்ச்சொல்:

இடுகுறி காரண மரபோடு ஆக்கம்

தொடர்ந்து தொழில் அல காலம்தோற்றா

வேற்றுமைக்கு இடனாய்த் திணைபால் இடத்தொன்று

ஏற்பவும் பொதுவும் ஆவன பெயரே

இடுகுறி மரபுப்பெயர்: மரம்

இடுகுறி ஆக்கப்பெயர்: பொய்யாமொழிப் புலவர்

காரணக்குறி மரபுப்பெயர்: பறவை

காரணக்குறி ஆக்கப்பெயர்: பொன்னன்

உயர்திணைப் பெயர்கள்:

ஆண்பால்:

பொருளால் அமைவது தமர், மூவர்

இடத்தால் அமைவது: ஆரூரன்

காலத்தால் அமைவது: தையான்

சினையால் அமைவது: செங்கண்ணன்

குணத்தால் அமைவது: அறிஞன்

தொழிலால் அமைவது : ஓதுவார்

இடைச்சொல்லால் அமைவது: அவன்

பெண்பால்:

பொருளால் அமைவது தமன், ஒருத்தி

இடத்தால் அமைவது: பட்டினத்தாள்

காலத்தால் அமைவது: தையாள்

சினையால் அமைவது: கார்குழலாள்

குணத்தால் அமைவது: புலமையாள்

தொழிலால் அமைவது: ஓதுவாள்

இடைச்சொல்லால் அமைவது: பிறத்தியாள்

இருதிணைப் பொதுப்பெயர் – விரவுப்பெயர்:

உயர்திணைக்குச் சிறந்த பெயர் அஃறிணைக் கண் விரவியும்

அஃறிணைக்குச் சிறந்த பெயர் உயர்திணைக் கண் விரவியும்

வருதலின் விரவுப்பெயர். 26 விரவுப்பெயர்களை நன்னூலார் குறிப்பிடுவார்.

கதிரவன் உதித்தான் – கதிரவன் உதித்தது (இருதிணைப் பொதுப்பெயர்)

ஊமை வந்தான்

ஊமை வந்தாள் (இருபால்பொதுப்பெயர்) சமகாலப் பயன்பாடு உளவியல் அடிப்படையில் மாற்றுத்திறனாளி

ஒருவர் என்பது உயர் இருபாற்றாய்ப்

பன்மை வினைகொளும் பாங்கிற்று என்ப.

ஒருவர் சிறப்புவிதி 289ஆம் நூற்பா ஆடவருள் ஒருவர்(ன்) பெண்டிருள் ஒருவர்(ஒருத்தி)

சினைப்பெயர்:

முடவன் செவியிலி முடக்கொற்றன் போன்ற சமகாலப் பொருத்தப்பாடற்ற உளவியல் சிக்கல் கோன்ட சொற்களுக்கு நிகரியாக மாற்றுத் திறனாளி போன்ற சொற்கள் உருவாக்கப்பெற்றது தமிழ்மொழி சார் சமூகநீதி, உளவியல் செம்மொழி.

ஆகுபெயர்:

பொருள்முதல் ஆறோடு அளவை சொல் தானி

கருவி காரியம் கருத்தன் ஆதியுள்

ஒன்றன் பெயரால் அதற்கு இயை பிறிதைத்

தொன்முரை உரைப்பன ஆகுபெயரே

பொருளாகுபெயர் தாமரைமுகம்

இடவாகுபெயர் அகனமர்ந்து

காலவாகுபெயர் கார் அறுத்தான்

சினையாகுபெயர் வெற்றிலை நட்டான்

பண்பாகுபெயர் கார் நிகர் கை

தொழிலாகுபெயர் வற்றலோடு உண்டான்

அளவாகு பெயர்

எண்ணல் ஒன்றிரண்டு கொடு

எடுத்தல் ஒரு பலம் கொடு

முகத்தல் நாழி கொடு

நீட்டல் கீழைத்தடி

சொல்லாகு பெயர் நூற்கு உரை செய்தான்

தானியாகு பெயர் கழல் தொட்டான்

கருவியாகுபெயர் திருவாசகம் படி

காரியவாகுபெயர் இது அலங்காரம்

கருத்தாவாகுபெயர் வள்ளுவரைப் படி

உவமையாகுபெயர் பாவை வந்தாள்

இருமடியாகுபெயர் புளி காய்த்தது

மும்மடியாகுபெயர் கார் அறுத்தான்

பின்மொழியாகுபெயர் வகரக்கிளவி

முன்மொழியாகுபெயர் துலாக்கோல்

ஏற்கும் எவ்வகைப் பெயர்க்கும் ஈறாய்ப் பொருள்
வேற்றுமை செய்வன எட்டே வேற்றுமை.

பெயரே ஐ, ஆல், கு, இன், அது, கண்
விளி என்றாகும் அவற்றின் பெயர் முறை

பெயர் வேற்றுமை (Nominative Case) – எ.கா. செல்வன்

இரண்டாம் வேற்றுமை (Objective Case):

இரண்டாவதன் உருபு ஐயே அதன் பொருள்

ஆக்கல் அழித்தலடைதல் நீத்தல்

ஒத்தல் உடைமை ஆதி ஆகும்.

மூன்றாம் வேற்றுமை(Instrumental Case)

மூன்றாவதன் உருபு ஆல் ஆன் ஒடு ஓடு

கருவி கருத்தா உடன் நிகழ்வு அதன்பொருள்

நான்காம் வேற்றுமை(Dative Case)

நான்காவதற்கு உருபு ஆகும் குவ்வே

கொடை பகை நேர்ச்சி தகவு அது ஆதல்

ஐந்தாம் வேற்றுமை (Ablative Case)

ஐந்தாவதன் உருபு இல்லும் இன்னும்

நீக்கல் ஒப்பு எல்லை ஏதுப்பொருளே

ஆறாம் வேற்றுமை(Possessive Case)
ஆறன் ஒருமைக்கு அதுவும் ஆதுவும் பன்மைக்கு அவ்வும் உருபாம் பண்பு உறுப்பு ஒன்றன் கூட்டம் பலவின் ஈட்டம் திரிபின் ஆக்க மாம்தற் கிழமையும் பிறிதின் கிழமையும் பேணுதல் பொருளே

ஏழாம் வேற்றுமை (Locative Case)

கண்கால் கடை இடை தலை வாய் திசைவயின்

முன்சார் வலம் இடம் மேல் கீழ் புடை முதல்

பின் பாடு அனை தேம் உழை வழி உழி உளி

உள் அகம் புறம் இல் இடப்பொருள் உருபே

எட்டாம் வேற்றுமை(Vacative Case)

எட்டன் உருபே எய்துபெயர் ஈற்றின்

திரிபு குன்றல் மிகுதல் இயல்பு அயல்

திரிபும் ஆம்பொருள் படர்க்கை யோரைத்

தன்முகம் ஆகத்தான் அழைப்பதுவே

நன்றிக்குரியோர்:

முனைவர் தெ. வெற்றிச்செல்வன்,

தஞ்சாவூர்ப் பல்கலைக்கழகம்

Standard

Leave a comment