தமிழர் சமயம்

கபால மலையில் பலியான கபாலீஸ்வரரே போற்றி

“தென்னாடுடைய சிவனே போற்றி, எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி” என்னும் முழக்கம் மாணிக்கவாசகரால் நமக்குக் கொடுக்கப்பட்டது. வரலாற்று வழியில் எவ்வாறு தோமா வழித் தமிழர் சமயமாகிய இந்து மதத்தில் இயேசு பெருமான் எவ்வாறு வணங்கப்படுகிறார் என்பதைப் பார்க்க வேண்டும்.

தோமாவழித் தமிழர் சமயமாகிய இந்து மதத்தின் முதல் கோவில் கபாலீஸ்வரர் கோவில். “கபால மலையில் பலியான கபாலீஸ்வரரே போற்றி” என்று நம்முடைய முழக்கத்தை இன்று முதல் அமைத்துக் கொள்ள விரும்புகிறேன். கபாலீஸ்வரர் என்பதே இந்து மதத்தின் அடிப்படை நாதமாக இருக்கிறது என்பது நமக்குத் தெரியும். கபாலீஸ்வரரே போற்றி என்று வணங்கும் மக்களை நாம் அதிகம் பார்க்க முடியவில்லை. ஏனென்றால் கபாலம் என்பதைச் சிவபெருமான் ஏந்தியிருக்கிறார். அதை வைத்துத் தான் அவர் பிச்சை எடுக்கிறார். அந்த மண்டையோடு பிரம்மனுடையது. பிரம்மனுக்கு ஐந்து தலை இருந்தது. சிவ பெருமானுக்கும் ஐந்து தலை இருந்தது. அப்போது பார்வதிக்குக் குழப்பம் ஏற்படுத்த பிரம்மன் முயன்றதால், சிவபெருமான் ஒரு தலையைக் கிள்ளி எடுத்து விட்டார்.

சிவபெருமானை வணங்குபவர்கள் சைவர்கள். விஷ்ணுவிற்குச் சிறப்பு கொடுப்பவர்கள் வைணவர்கள். பிரம்மனுக்குச் சிறப்பு கொடுப்பவர்கள் பிராமணர்கள். பிரம்மனுக்கும் விஷ்ணுவிற்கு இடையே யார் பெரியவர்கள் என்னும் போட்டி வந்தது. இருவரும் சிவபெருமானைப் போய்ப் பார்த்தார்கள். சிவபெருமான் – ஒருவர் என்னுடைய பாதத்தையும் இன்னொருவர் என்னுடைய முடியைக் கண்டுபிடிக்க வேண்டும் என்று சொல்லி விடுகிறார். இது தான் திருவண்ணாமலை தீபம் நமக்குச் சொல்லும் புராணக் கதை. விஷ்ணு பன்றி உருவம் எடுத்து பூமியைத் துளைத்தார். பிரம்மன் முடியை நோக்கிப் பறந்து போனார். ஆனாலும் முடியைக் கண்டுபிடிக்க முடியவில்லை. அப்போது முடியில் இருந்து ஒரு தாழம்பூ பறந்து வந்தது.

பிரம்மன் பிறகு சிவபெருமானிடம் வந்து நான் முடியைப் பார்த்தேன், இந்தத் தாழம்பூ தான் சான்று என்று சொன்னார். இந்தப் பொய்யைக் கேட்ட சிவபெருமான் – பிரம்மனையும் தாழம்பூவையும் சபித்தார். ஆகையால் தான் பிரம்மனுக்கு என்று கோவில்கள் இல்லை என்று புராணக் கதைகள் இருக்கின்றன.

பிரம்மன், சிவபெருமானைப் போல நடித்து, பார்வதியிடம் நடித்தார் என்னும் புராணக்கதையும் அதனால் பிரம்மனுடைய தலையைச் சிவன் கொய்தார் என்றும் அதனால் சிவபெருமானுக்கு பிரம்மஹத்தி தோஷம் பிடித்து விட்டது என்று பிராமணர்கள் கதை புனைந்திருக்கிறார்கள். அந்தக் கதையைத் தான் இன்றும் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். இதே கதையை நம்பிச் சிவபெருமான் பிச்சை எடுப்பது போலக் கோவிலில் கோபுரத்திலும் வைத்திருக்கிறார்கள்.

இனி நாம் இந்தக் கதையை விடுத்து, “கபால மலையில் பலியான கபாலீஸ்வரரே போற்றி!” என்னும் முழக்கத்தை முன்னெடுக்க வேண்டும்.

இரண்டாவது சைவக் கோவில் – சிதம்பரம் நடராஜப் பெருமான் கோவில். பிற்காலச் சோழர்களால் பொன்வேயப்பட்டதால் சைவத்தின் தலைமைக் கோவிலாக அக்கோவில் விளங்கி வருகிறது.

கபாலஸ்தலம் என்பது மண்டை ஓடு இருக்கும் இடம் என்று சிலர் நினைக்கிறார்கள். அது தவறு! யார் கொலை செய்யப்பட்டாலும் அந்த உடல், உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு விடும். கபாலஸ்தலம் என்பது ஒரு குன்று. அதற்குரிய விளக்கத்தைத் திருவிவிலிய அகராதி தெளிவாகச் சொல்கிறது. கபால மலையில் இயேசு பெருமான் பலியான காரணத்தால் – அவருக்குக் கபாலீஸ்வரர் என்று பெயர் வந்தது.

புனித தோமாவின் நினைவிடத்தில் கட்டப்பட்ட கபாலீஸ்வரர் கோவிலை இடித்து விட்டு 1566இல் போர்த்துக்கீசியர்கள் கிறித்தவ அடிப்படையிலான கோவிலைக் கட்டியிருக்கிறார்கள். இந்த வரலாறு வெளி வரக்கூடாது என்னும் அடிப்படையில் தான் கோவிலின் அருள்தந்தை, அவர்க்கு மேல் பொறுப்பில் இருக்கும் ஆயர், அவர்க்குத் தலைமை தாங்கும் போப்பாண்டவர் ஆகியோர் சதி செய்திருக்கிறார்கள்.

கபாலீஸ்வரர் கோவிலை இடித்த போது, அங்கிருந்த சிலைகள் சாந்தோம் பேராலயத்தில் இருந்தன. நடராஜர் சிலை, சாந்தோம் பேராலயத்தில் இருந்தது. அதற்குத் தான் அங்கு அருங்காட்சியகம் அமைக்கப்பட்டது. ஆனால் இப்போது சிலை அங்கு இல்லை. இந்து மதச் சிலை அங்கு இருக்கக்கூடாது. அப்படி இருந்தால், அது வரலாற்றை நினைவுபடுத்தும். வரலாற்றை அழிப்பதற்காக, அந்தச் சிலையைக் காணாமல் போய்ச் செய்து விட்டார்கள். கத்தோலிக்கப் போப்பாண்டவர் ஒருவரே, புனித தோமா தென்னிந்தியா வரவேயில்லை என்று சொன்னார்.

இந்தச் சிலை மாயமானது குறித்து காவல்துறையிடம் புகார் தெரிவித்திருக்கிறோம்.

கபால மலை என்று ஏன் பெயர் வைத்தார்கள்?
கபாலம் என்றால் மண்டையோடு. மண்டையோட்டு வடிவில் அந்த மலை இருப்பதால் அந்த மலைக்குக் கபால மலை (கொல்கதா) என்று பெயர்.

நானே கடவுள் என்ற கொள்கை பிராமணர்கள் உடையது என்றால், இயேசு பெருமானும் அதையே தானே சொன்னார். இரண்டுமே அத்வைதக் கொள்கையா?
“நானே அவரென்று அறிந்து கொள்ளுங்கள்” என்று கடவுளே சொல்வதும் மனிதர்கள் – ‘நானே கடவுள்’ என்று சொல்வதும் ஒன்றாகாது அல்லவா! இத்துடன் சேர்ந்து நாம் சிந்திக்க வேண்டிய ஒன்று – இயேசு பெருமான் வாழும் காலத்தில் சொன்னதையும் அவர் உயிர்த்தெழுந்த பின்பு சொன்னதையும் தனித்தனியே பிரித்துப் பார்த்து புரிந்து கொள்வது சரியான புரிதலாக இருக்கும்.

தோமாவழித் தமிழர் சமயம் என்பது சரியா? தோமாவழிக் கிறிஸ்தவம் என்பது சரியா?
தோமாவழிக் கிறிஸ்தவம் என்று சொன்னால் அது கிறிஸ்தவ மதத்தின் ஒரு பகுதி என்று பொருள் ஆகிவிடுகிறது. எனவே தோமாவழித் தமிழர் சமயம் என்று சொல்வது தான் சரியானது.

“இந்தியா தோமாவழித் திராவிட கிறிஸ்தவ நாடு” என்று முனைவர் தெ. தேவகலா புத்தகம் எழுதியிருக்கிறார்களே! அந்தத் தலைப்பை எப்படிப் புரிந்து கொள்வது?
அந்தப் புத்தகம் எழுதப்பட்ட காலத்தில் இயேசு வேறு! கிறிஸ்து வேறு என்னும் உண்மை வெளிப்படவில்லை. இப்போது அந்த உண்மை புரிந்த இந்தக் காலத்தில் தோமாவழித் திராவிட கிறிஸ்தவம் என்று சொல்வது பொருத்தமாக இல்லை. தோமாவழித் தமிழர் சமயம் என்பது தான் பொருத்தமாக இருக்கிறது.

தண்ணீர் திருமுழுக்கு சரியா?
திருத்தூதர் (அப்போஸ்தலர்) 1:5 இல் தண்ணீர் திருமுழுக்கு முடிந்துவிட்டது என்று இயேசு பெருமான் தெளிவாகச் சொல்லியிருக்கிறார். அப்படிச் சொன்ன பிறகும் தண்ணீர் திருமுழுக்குக் கொடுப்பது தவறு அல்லவா! அதற்குரிய முயற்சியை எடுக்கத் தொடங்கலாம்.

இயேசுபெருமானே தண்ணீர் திருமுழுக்கு கொடுத்திருக்கிறாரே!
அவர் உயிரோடு இருக்கும் போது தண்ணீர் திருமுழுக்கு கொடுத்தார். உயிர்த்தெழுந்த பிறகு, “தண்ணீர் திருமுழுக்கு வேண்டாம்” என்று சொல்லியிருக்கிறார். எனவே தண்ணீர் திருமுழுக்கு தேவையில்லை அல்லவா!

(தமிழர் ஆன்மவியல் ஞானசபை வாரக் கூட்டத்தில் 06.05.2020 அன்று பேராசிரியர் முனைவர் மு. தெய்வநாயகம் அவர்கள் ஆற்றிய உரை)

Standard

Leave a comment