தனி

வாசிப்பை நேசிக்கும் தீக்கதிரோன்

வாசிப்புப் பழக்கம் என்பது எல்லோருக்குமே தேவையான ஒன்று. ஒரே கருத்தைத் திரைப்படமாகப் பார்ப்பதற்கும் படித்துத் தெரிந்து கொள்வதற்கும் நிறைய வேறுபாடுகள் இருக்கின்றன. திரைப்படமாகப் பார்க்கும் போது விறுவிறுப்பு, தொழில்நுட்பம் ஆகியன நம்மை வியப்பில் ஆழ்த்துகின்றன. ஆனால், அதே கருத்தைப் படித்துத் தெரிந்து கொள்ளும் போது, வேறு வகையான நன்மைகள் கிடைக்கின்றன.

மகாபாரதம், இராமாயணம் என்று புராணங்களை எடுத்துக் கொள்ளுங்கள். இந்தக் கதைகள் இப்போது தொடராகத் தொலைக்காட்சிகளில் வருகின்றன. ஆனால் அவற்றையே கதையாகப் படிக்கும் போது இராமன் இப்படி இருப்பானோ, இராவணன் இப்படி இருப்பானோ என்று நம்முடைய கற்பனைக்கு அங்கே இடம் கிடைக்கிறது. அந்தக் கற்பனைக்குத் தொடர்களும் திரைப்படங்களும் தடை போட்டு விடுகின்றன. எல்லாமே காட்சிப்படுத்தப்படுவதால் கற்பனைக்கு வேலை இல்லாமல் போய் விடுகிறது.

இது போக, ஒரு கருத்தைப் படிக்கும் போது நம்முடைய வேகத்தில் நம்மால் படிக்க முடியும், சிந்திக்க முடியும், அசைபோட்டுப் பார்க்க முடியும். ஆனால், திரைப்படங்களோ தொடர்களோ அப்படிப்பட்டவை அல்ல. அவர்களின் வேகத்திற்கு நாம் ஓட வேண்டும். அதில் சில சமயங்களில் முக்கியமான கருத்துகள் விடுபட்டுப் போக வாய்ப்புகள் உண்டு. இந்தச் சிக்கல் வாசிப்பில் இல்லை.

நான் சிறுவனாக இருக்கும் போது வகுப்பில் ஆசிரியர்கள் இந்து ஆங்கில நாளிதழ் வாங்கிப் படியுங்கள், ஆங்கில அறிவு வளரும் என்று அறிவுறுத்துவார்கள். அவர்கள் அப்படிச் சொல்லியும் ஒரு நாளும் அப்போதெல்லாம் ஆங்கிலச் செய்தித்தாள்களைப் படித்தது கிடையாது. தாத்தா பாட்டி வீட்டுக்குப் போகும் போது விஜயா மாமாவும் தாத்தாவும் வரிவிடாமல் ஆங்கிலச் செய்தித்தாள் படிப்பதைப் பார்த்திருக்கிறேன். அங்கே இந்தியன் எக்ஸ்பிரஸ் என்று நினைவு. மாமாவோடு சேர்ந்து தோது(ஜெகதீஷ்)வும் படிப்பான். என் ஒத்த வயது என்றாலும் என்னால் செய்தித்தாளை எடுத்துப் படிக்க முடியாது. கொஞ்ச நேரம் படிப்பது போலக் கையில் வைத்து விட்டு கீழே வைத்து விடுவேன். எனக்கு ஆங்கிலம் தெரியாது என்னும் உள்மன உணர்வும், அது வெளியே தெரிந்து விடக் கூடாது என்னும் அச்சமுமே அதற்குக் காரணம்.

தினமலரா? தினமணியா?

பின்னாட்களில் எட்டாம் வகுப்பை எட்டுகின்ற நாட்களில் தான் எங்கள் வீட்டில் செய்தித்தாள் வாங்கத் தொடங்கினோம். அதுவும் பக்கத்து வீட்டுச் செய்தித்தாளை அண்ணனும் (இராமானுஜம்) நானும் படிப்பதைப் பார்த்த பிறகு அப்பா வாங்கத் தொடங்கினார். சாதாரண நடுத்தர குடும்பத்தைப் போல, நாங்களும் தினமலரில் தான் போய் விழுந்தோம். பிறகு தினமணியில் நடுப்பக்கக் கட்டுரைகள் நன்றாக இருக்கும் அறிவை வளர்க்கும் என்று யாரோ சொல்ல, தினமணிக்கு மாறினோம். தினமலரில் இருந்து தினமணிக்கு மாறுவது என்பதே பெரிய வேலை. தினமலரின் எழுத்து நடையும் தலைப்பும் வாசகரை அப்படிக் கட்டிப் போட்டிருக்கும். தினமணிக்கு அந்த அலட்டல் எல்லாம் பிடிக்காது. தினமணியைப் படிக்கவே முடியவில்லை, திரும்பவும் தினமலருக்கே மாறி விடுவோம் என அண்ணனும் ஒன்றுமே புரியவில்லை என்றாலும் என்றாவது ஒருநாள் புரிந்து விடும் அப்படியே அறிவாளி ஆகி விடலாம் என நானும் சண்டை போட்ட காலங்கள் எல்லாம் உண்டு. இரண்டாவது அண்ணனுக்கு இந்தக் கொள்கைகள் எல்லாம் கிடையாது. இரண்டில் எதுவென்றாலும் சரிதான்!

அதன் பிறகு நான் கல்லூரி முடித்து வீட்டில் இருந்த காலங்களில் தான் ஒரு ரூபாய்க்குச் செய்தித்தாள் என்று டெக்கான் கிரானிக்கிள் வந்தது. அதுவும் சென்னைப் பதிப்பு மறுநாள் தான் நெல்லையில் கிடைக்கும். இருந்தாலும் ஒரு ரூபாய்க்குக் கிடைக்கிறதே என்று பாளையங்கோட்டை சந்தைப் பகுதியில் அன்னப்பூர்ணா ஓட்டல் வாசலில் இருக்கும் செய்தித்தாள் கடையில் வாங்குவேன்.

இவை எல்லாம் நடந்து வருடங்கள் ஓடி விட்டன. இப்போது எல்லாச் செய்திகளையும் உடனுக்குடன் அலைபேசியிலும் தொலைக்காட்சியிலும் இணையத்திலும் தெரிந்து கொள்கிறோம் என்றாலும் செய்தித்தாள் வாசிப்பு என்பது அலாதி ஆனந்தத்தைத் தரும் அனுபவம் தான்!

இத்தனை வருடங்கள் ஓடிய பிறகும் செய்தித்தாள் வாசிக்கும் பழக்கம் மட்டும் இன்னும் போகவே இல்லை. வடைக்குச் சுருட்டித் தரும் தாளைக் கூட வாசித்துப் பார்ப்பேன். தினமும் செய்தித்தாள் வீட்டுக்கு வரும் நேரத்தில் ஒருவித எதிர்பார்ப்பு இருந்து கொண்டே இருக்கும். செய்தித்தாள் வருவதற்குள் ஓரிரு முறை போய் ‘பேப்பர் வந்து விட்டதா’ என்று பார்த்து விட்டு வருவேன்.

இப்படித் தான் ஒருநாள் வாட்சப்பில் “தீக்கதிர் இன்று” படிக்கத் தொடங்கினேன். சுவாமிநாதன் சித்தப்பா அனுப்பியிருந்தார்கள். மக்கள் நலன் சார்ந்த சிக்கல்கள் பலவற்றைப் புள்ளி விவரங்களுடன் தருவதாகத் தீக்கதிர் எனக்குப் பட்டது. அதிலும் ஒரு நாளிதழை முழுமையாகப் படிப்பதற்கும் அதில் வந்திருக்கும் முதன்மையான செய்திகளை முன்னோட்டமாகத் தருவதற்கும் வித்தியாசம் இருக்கிறது அல்லவா? முன்னோட்டம் சுவையாக இருந்தால் நாம் கொஞ்சம் கொஞ்சமாக முழுமையாக அதைச் சுவைக்க வேண்டும் என்று விரும்புவது இயல்பு தானே! அப்படித் தான் வாட்சப் முன்னோட்டம், அடிக்கடித் தீக்கதிர் தளத்திற்குப் போய்ப் படிக்க வைத்தது.

நன்றி: ஜென்ராம் மீடியா

இடையில் தீக்கதிர் பற்றிக் கணியம் சீனிவாசன் ஒருநாள் பேசியதும், கலீல் ஜாகீர் தீக்கதிருக்கான செயலிக்கு வேலை செய்கிறார் என்று தெரிந்ததும் தீக்கதிர் மீதான நல்ல அபிப்பிராயம் ஓரளவு உருவாகியிருந்தது. எனவே, தீக்கதிரின் முன்னோட்டத்தை வாசிக்கத் தொடங்கினேன். அப்படி வாசிக்கும் போது தான், ஒரு செய்தித்தாளில் மக்கள் நலன் சார்ந்த நிகழ்ச்சிகளைச் சுவைபடச் சுருக்கி, ஒருங்கிணைத்து, தட்டச்சிட்டு எல்லோருக்கும் அனுப்புவது எவ்வளவு சிரமமான செயல் என்றும் அது எவ்வளவு பெரிய வேலை என்றும் தோன்றியது.

இந்தச் சிந்தனை வந்த பிறகு, அந்த விடாமுயற்சிக்கும் கடின உழைப்புக்கும் மதிப்புக் கொடுத்தாவது முன்னோட்டத்தைப் படித்து விட வேண்டும் என்று நினைத்துக் கொண்டேன். எல்லா நாட்களிலும் அதைச் செய்தேன் என்று சொல்ல முடியாது, முடிந்த வரை படித்திருக்கிறேன்.

தீக்கதிர் மார்க்சிஸ்ட் கட்சிச் சார்புச் செய்தித்தாள் ஆயிற்றே! இப்படி ஒரு கட்சியின் செய்தித்தாளைப் பரப்புபவரைப் பாராட்டலாமா என்று நீங்கள் கேட்கலாம். சரியான கேள்வி தான்! சார்பு நிலைகள் என்பன எல்லா ஊடகங்களிலும் இருக்கின்றன. அதே சார்பு தீக்கதிருக்கும் இருக்கும், இருக்கின்றது. மறுப்பதற்கு இல்லை. ஆனால், அந்த ஊடகங்களில் வரும் செய்திகள் மக்கள் நலனுக்கானவையாக இருக்கும் போது, அவற்றை ஒருவர் தலை மேற்கொண்டு பிறருக்கும் தெரிவிக்கும் போது அதை ஆதரிப்பதும் பாராட்டுவதும் நம்முடைய கடமையாகி விடும் அல்லவா!

அதிலும் அம்மாவுக்கு உடல் நலம் சரியில்லாத நிலை, கொரொனா பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலை என்று எந்த நிலையிலும் தவறாமல் தீக்கதிரை அனுப்பியிருக்கிறீர்கள் என்பதை உங்கள் செய்தியில் இன்று தெரிந்து கொண்டேன். நெகிழ்வாக இருந்தது. தீக்கதிருக்கு விடுமுறை இருந்த நாளிலும் “தீக்கதிர் இன்று” வெளிவந்தது என்பது உங்கள் உறுதியைக் காட்டியது.

இப்படியாகத் தீக்கதிர் இன்று தொடர்ச்சியான ஆயிரமாவது நாளை இன்று எட்டியிருக்கிறது. ஆயிரம் நாட்கள் தொடர்ந்து இப்படி ஒரு செய்தித்தாளின் முக்கியமான செய்திகளை ஒருங்கிணைத்து முன்னோட்டமாக வடிவமைத்து எல்லோருக்கும் அனுப்பும் வேலையைச் செய்யும் ஒரு வாசகரைப் பெற்றிருப்பது தீக்கதிரின் பெருமை. என் அறிவுக்கு எட்டிய வரையில் உலக வரலாற்றில் எந்தச் செய்தித்தாளுக்கும் இப்படி ஒரு வாசகர் கிடைத்திருக்க மாட்டார் என்றே நினைக்கிறேன். தீக்கதிருக்கு அந்த வாய்ப்பு வாய்த்திருக்கிறது. தீக்கதிரின் முதல் ஆசிரியர் மூத்த கம்யூனிஸ்ட் தலைவர் சங்கரய்யா என்று இன்றைய தமிழ் இந்துவில் குறிப்பிட்டிருந்தார்கள். அவரின் 100ஆவது பிறந்த நாளும் “தீக்கதிர் இன்று” முன்னோட்டத்தின் 1000ஆவது பதிவும் ஒரே வாரத்தில் வருகின்றன. தீக்கதிரின் முதல் ஆசிரியராக, சங்கரய்யா அவர்களுக்கு தீக்கதிர் வாசகராக இதைவிட என்ன பெருமையை ஒருவரால் செய்து விட முடியும்? அந்தப் பெருமையைத் தீக்கதிருக்கும் சங்கரய்யா அவர்களுக்கும் நீங்கள் கொடுத்திருக்கிறீர்கள்! வாழ்த்துகள் சித்தப்பா!

ஒரு வேண்டுகோள்:
முன்னரே இதை உங்களிடம் கேட்டிருக்கிறேன். ஆயிரம் பதிவுகள் எழுதியிருக்கிறீர்கள். வாட்சப்பிலும் முகநூலிலும் இவற்றைப் பலரும் பகிர்ந்திருந்தாலும் இன்று அவற்றைத் தேடுவது காற்றில் கரைந்த காயத்தைப் போலத் தானே! எனவே, இந்த ஆயிரம் பதிவுகளையும் இனிமேலான பதிவுகளையும் தொகுப்பது இன்றியமையாத ஒன்று.

இப்படிப் பதிவுகளை ஓரிடத்தில் தொகுத்து வைப்பது என்பது இணையத்தில் தேடும் புதிய வாசகர்களைத் தீக்கதிருக்குக் கொண்டு வர உதவியாக இருக்கும். ஒரு பதிவராக உங்களுக்கும் எல்லாப் பதிவுகளையும் மீண்டும் பார்க்க உதவியாக இருக்கும். எனவே இனி வரும் பதிவுகளை வேர்டுபிரஸ் தளத்திலோ உங்களிடம் ஏற்கெனவே இருக்கும் பிளாக்கரிலோ தொடர்ந்து பதிவிடுங்கள். அந்த இணைப்பையும் உங்கள் பதிவோடு சேர்த்து அனுப்புங்கள். அது மிகச் சிறந்த ஒரு வரலாற்றுப் பெட்டகமாக இருக்கும்.

சித்தப்பாவைப் பற்றிய சிறிய அறிமுகத்திற்கு:

https://marxist.tncpim.org/author/swaminathan/

Standard

Leave a comment