தமிழர் சமயம்

சாந்தோம் பேராலய அருங்காட்சியகத்தில் இருந்து திருடப்பட்ட நடராஜர் சிலை – மீட்கப்படவேண்டும்

என்னுடைய 86 ஆண்டுகளைத் திரும்பிப் பார்க்கிறேன். ஆருயிர் முறைவழிப்படூஉம் என்பதைத் தான் நான் உணர்கிறேன். என்னுடைய முயற்சியால் பெரிய காரியங்கள் நடந்தன என்று சொல்ல முடியவில்லை. ஆனால் உணர்த்த உணர்தலை ஏற்றுக் கொள்ளும் பக்குவத்தையும் அவரே கொடுக்கிறார். என்னை விடச் சிறந்தவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். அப்படி இருந்தும் கடவுளே என்னை அழைத்துப் பல முறை பேசினார். அவரே வழிநடத்தினார் என்பதை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. உள்ளத்தால் பேசி உணரத் தான் முடியும்.

இந்த வாரம் – இந்தத் தலைப்பில் தான் பேச வேண்டும் என்று நான் முடிவெடுக்கவில்லை. ஆனால் என்னை அறியாமல் ஒரு காரியம் நடந்தது. அருள்தந்தை அடைக்கலம் The St. Thomas Cathedral Museum என்று ஒரு புத்தகம் எழுதியிருக்கிறார். அதைப் படிக்க நேர்ந்தது. அந்தப் புத்தகத்தில் சாந்தோம் பேராலய அருங்காட்சியகத்தில் ஐந்தாம் எண் சிலையாக நடராஜப் பெருமான் வைக்கப்பட்டிருந்ததை அவர் குறிப்பிடுகிறார். அந்தச் சிலை முதலில் பேராலய வராண்டாவில் இருந்திருக்கிறது. அதன் பிறகு அருங்காட்சியகத்தில் சேர்க்கப்பட்டிருக்கிறது. ஆனால் அந்தச் சிலை இன்று சாந்தோம் பேராலய அருங்காட்சியகத்தில் இல்லை. இதைப் பற்றிய என்னுடைய கடிதத்தை இங்கே உங்கள் முன் வைக்கிறேன்.

பெறுநர்

தலைமைச்செயலாளர் அவர்கள்,

தமிழக அரசு, ஜார்ஜ் கோட்டை,

சென்னை – 600009

பொருள்: சாந்தோம் பேராலய அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருந்த நடராஜப் பெருமான் சிலை அருங்காட்சியகத்தில் இருந்து திருடி மறைத்து வைத்திருப்பவர்கள் கைது செய்யப்பட்டு நடராஜப் பெருமான் சிலை மீட்கப்பட வேண்டும்.

  1. சாந்தோம் பேராலய வராண்டாவில் இருந்த நடராஜப் பெருமான் சிலையை, சாந்தோம் பேராலயப் பங்குத் தந்தையாக இருந்த அருள்தந்தை அடைக்கலம் அவர்கள், பதிவு எண் 5 என்று குறித்து சாந்தோம் பேராலய அருங்காட்சியகத்தில் சேர்த்த செய்தி The St. Thomas Cathedral Museum என்னும் தலைப்புள்ள நூலின் 4,5 ஆகிய பக்கங்களில் எழுதப்பட்டுள்ளது. புத்தகத்தின் நகல் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.
  2. “சாந்தோம்” என்னும் பெயர், புனித தோமா அடக்கம் செய்யப்பட்ட இடம் என்னும் வரலாற்றை விளக்கும் பெயராகும்.
  3. புனித தோமா அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் புனித தோமாவின் அடியவர்களால் கட்டப்பட்ட கோவிலே, புனித தோமா வழித் தமிழர் சமயமாகிய இந்து மதத்தைச் சேர்ந்த கபாலீஸ்வரர் கோவில் என்று இப்பொழுதுள்ள கபாலீஸ்வரர் கோவிலின் தலைவாசலில் உள்ள கல்வெட்டுக் கூறுகிறது.
  4. அந்தக் கபாலீஸ்வரர் கோவிலைக் கி.பி. 1566இல் போர்த்துக்கீசிய கத்தோலிக்கர்கள் இடித்து விட்டு, அந்த இடத்தில் கட்டப்பட்டிருப்பதே இப்பொழுது இருக்கும் கத்தோலிக்க மதத்தைச் சேர்ந்த சாந்தோம் பேராலயம் என்று அக்கல்வெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  5. கத்தோலிக்கர்களால் இடிக்கப்பட்ட முதல் கபாலீஸ்வரர் கோவில், திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் ஆகிய சைவ சமயத் தலைவர்களால் பாடல் பெற்ற தலம் என்று மேலே கூறப்பட்டுள்ள கல்வெட்டு தெரிவிக்கிறது.
  6. மேலும் இறந்து போன பூம்பாவை என்னும் பெண்ணின் எலும்பைத் திரும்பப் பெண்ணாக்கித் திருஞானசம்பந்தர் பெற்றோரிடம் சேர்த்த செய்தியும் அக்கல்வெட்டில் கூறப்பட்டுள்ளது.
  7. நடராஜப் பெருமான் என்பது இயேசு பெருமான் சிலுவையில் பலியாகி அடக்கம் செய்யப்பட்டு, மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்து, மகிழ்ச்சிக் கூத்தாடிய கூத்தைக் காட்டுவது என்பதை டாக்டர் தேவகலா விளக்கியிருப்பது 2020 ஜுன் மாதத் தமிழர் சமயம் இதழில் விளக்கப்பட்டுள்ளது. அது இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.
  8. இதனால் புனித தோமா வழித் தமிழர் சமயமாகிய இந்து மதக் கோவிலில் நடராஜப் பெருமான் சிறப்பிக்கப்படுவது இயல்பேயாகும்.
  9. இந்த இயல்பின்படியே, புனித தோமா வழித் தமிழர் சமயமாகிய இந்துமதக்கோவிலாகிய கபாலீஸ்வரர் கோவிலை இடித்து விட்டு அந்த இடத்தின் மீது கட்டப்பட்டுள்ள சாந்தோம் பேராலயத்தின் வராண்டாவில் நடராஜர் சிலை இருந்ததும் அதை அந்தக் கோவிலின் அருள்தந்தை அடைக்கலம் அவர்கள் சாந்தோம் பேராலய அருங்காட்சியகத்தில் இடம் பெற வைத்ததும் இயல்பானவையே ஆகும்.
  10. ஆகவே, புனித தோமா வழித் தமிழர் சமயமாகிய இந்து மத வரலாற்றை உலக மக்களுக்கு விளக்கிக் கொண்டிருக்கும் நடராஜப் பெருமான் சிலை திருடப்பட்டவர்களிடம் இருந்து மீட்கப்பட வேண்டியது காலத்தின் கட்டாயம் ஆகும்.
  11. அருள்தந்தை அடைக்கலம் அவர்களை, சாந்தோம் பேராலயத்தில் அருங்காட்சியகம் அமைக்குமாறு ஏவியவர், அப்பொழுது சென்னை – மயிலைப் பேராயராக இருந்த, பேரருள் பெருந்தகை டாக்டர் ஆர். அருளப்பா அவர்கள் என்று “The St. Thomas Cathedral Museum” என்னும் இந்த நூலை 24.7.1985இல் எழுதிய அருள்தந்தை அடைக்கலம் அவர்கள் நூலின் முன்னுரையில் குறிப்பிட்டுள்ளார்.
  12. 1968இல் திருவள்ளுவர் கிறிஸ்தவரா? என்னும் தலைப்பில் நான் எழுதியிருந்த நூலுக்கு முன்னுரை வாங்க, நான் சென்ற பொழுது, ஏற்பட்ட தொடர்பு 1996இல் பேராயர் டாக்டர் ஆர். அருளப்பா அவர்கள் இறக்கும் வரை தொடர்ந்து சிறப்பாக இருந்தது.
  13. புனித தோமாவின் நற்செய்திப் பணி பற்றி நான் ஆராய்ந்து நூல்கள் வெளியிடுவதற்குக் கடவுளுக்கு அடுத்த நிலையில் எனக்கு அனைத்து வகைகளிலும் துணையாய் இருந்தவர் பேராயர் டாக்டர் R. அருளப்பா அவர்களே என்பதை என்னோடும் பேராயரோடும் தொடர்புடைய அனைவரும் அறிவர்.
  14. 1968 முதல் இன்றுவரை, இந்த ஆராய்ச்சியில், நாற்பதுக்கும் மேற்பட்ட நூல்களும் 1984 முதல் இன்று வரை திராவிட சமயம், தமிழர் சமயம் என்னும் தலைப்பில் மாத இதழ் நடத்தி வருவதையும் அனைவரும் அறிவர். இதனால் புனித தோமாவின் தமிழக நற்செய்திப்பணி பற்றி, யார் என்ன கேள்வி கேட்டாலும் கேட்கின்றவர் ஏற்றுக் கொள்ளும் வகையில் பகுத்தறிவு வழியில் பதில் சொல்ல கடவுள் என்னை ஆயத்தப்படுத்தியுள்ளார். என் வயது 86 ஆகின்றது.
  15. ஆகவே, சாந்தோம் பேராலய அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருந்த நடராஜப்பெருமான் சிலையை அருங்காட்சியகத்தில் இருந்து திருடி மறைத்து வைத்திருப்பவர்கள் கைது செய்யப்பட்டு நடராஜப் பெருமான் சிலை மீட்கப்பட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

இப்படிக்கு
மு. தெய்வநாயகம்.

(28.06.2020 அன்று முனைவர் மு. தெய்வநாயகம் அவர்கள் ஆன்மவியல் ஞானசபையில் இயங்கலை வழி ஆற்றிய உரை)

Standard