தமிழ்

திருவள்ளுவர் கூறும் கண்ணோட்டம்(58)

குற்றம் செய்தவர்கள் தங்கள் குற்றத்தை நினைத்து மனம் வருந்தும்பொழுது அவர்கள் குற்றத்தை மன்னித்தலே கண்ணோட்டம் ஆகும்.

நான்கு அறிவதுவே அவற்றொடு கண்ணே”
(தொல்-மரபியல்-நூற்பா 27)

உன் கண்ணில் நீர் வழிந்தால் என் நெஞ்சில் உதிரம் கொட்டுதடி, என் கண்ணில் பாவையன்றோ கண்ணம்மா, என்னுயிர் நின்னதன்றோ’.- பாரதியார்

அல்லல்பட்டு ஆற்றாது அழுத கண்ணீரன்றே
செல்வத்தைத் தேய்க்கும் படை

அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர்
புண்கணீர் பூசல் தரும்

குறிப்பின் குறிப்பு உணரா ஆயின், உறுப்பினுள்
என்ன பயத்தவோ கண்.
(திருக்குறள் – பொருள்- குறிப்பறிதல் 715)

இருநோக்கு இவளுண்கண் உள்ளது ஒருநோக்கு
நோய்நோக்கு ஒன்றந்நோய் மருந்து’’
(திருக்குறள்-காமம் குறிப்பறிதல் 1111)

கைகேயி தசரதனிடம் இரண்டு வரங்கள் கேட்கிறாள். அவற்றில் ஒன்று இராமன் பதினான்கு ஆண்டுகள் வனவாசம் செய்ய வேண்டுமென்பது. அதைக் கேட்டவுடனே தசரதன் கைகேயிடம் “என் கண்ணை வேண்டுமானாலும் கேள். தருகிறேன். ஆனால், இராமன் வனவாசம் செய்ய வேண்டும் என்னும் கோரிக்கையை விட்டுவிடு” என்று இறைஞ்சுகிறான். இதனைக் கம்பர்,

        “கண்ணே வேண்டும் என்னினும் ஈயக் கடவேன் என்
        உள்நேர் ஆவிவேண்டினும் இன்றே உனது அன்றௌ
        பெண்ணே வண்மைக் கேகயன் யானே! – பெறுவாயேல்
        மண்ணே கொள் நீ மற்றையது ஒன்றும் மற என்றான்”

என்று பாடுகிறார். (கம்ப –கைகேயி சூ.வி.படலம் 32)

கொலையின் கொடியாரை வேந்தொறுத்தல் பைங்கூழ்
களை கட்டதனொடு நேர்

கொலைமேற்கொண்டாரிற் கொடிதே அலைமேற்கொண்டு
அல்லவை செய்தொழுகும் வேந்து (551)

உயிருக்கு உயிர், கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல், கைக்குக் கை, காலுக்குக் கால் – இணைச்சட்டம் (உபாகமம்) 19: 21 (பழைய ஏற்பாடு)

உன்னொரு கன்னத்தில் இட்டால் நீ ஓங்கி அடித்து விடாதே!
இன்னொரு கன்னத்தையும் காட்டு – இது என்றென்றும் ஞானத்தின் பாட்டு!
– இயேசு காவியத்தில் பண்ணரசர் கண்ணதாசன்.

கண்ணுக்குக் கண் பல்லுக்குப் பல் என்றால் இந்த உலகம் எப்போதோ மண்ணோடு மண்ணாகி இருக்கும். – அண்ணல் காந்தியடிகள்.

“கண்ணுக்குக் கண் பல்லுக்குப் பல்” என்று கூறப்பட்டிருப்பதைக் கேள்விப்பட்டிருக்கிறீர்கள். ஆனால் நான் உங்களுக்குச் சொல்கிறேன்: தீமை செய்பவரை எதிர்க்க வேண்டாம். மாறாக, உங்களை வலக்கன்னத்தில் அறைபவருக்கு மறுகன்னத்தையும் திருப்பிக் காட்டுங்கள்.

“உங்கள் பகைவரிடமும் அன்பு கூருங்கள்; உங்களைத் துன்புறுத்துவோருக்காக இறைவனிடம்
வேண்டுங்கள்” – (மத்தேயு 6:44) இயேசு பெருமான்

கண் தான் உடலுக்கு விளக்கு:
“கண் தான் உடலுக்கு விளக்கு. கண் நலமாயிருந்தால் உங்கள் உடல் முழுவதும் ஒளி பெற்றிருக்கும். அது கெட்டுப் போனால் உங்கள் உடல் முழுவதும் இருளாய் இருக்கும். ஆக, உங்களுக்கு ஒளி தரவேண்டியது இருளாயிருந்தால் இருள் எப்படியிருக்கும்!” (மத்தேயு 6:22)

கண்ணுடையர் என்பர் கற்றோர் முகத்திரண்டு
புண்ணுடையர் கல்லா தவர் (திருக்குறள் – கல்வி – 403)

சிலப்பதிகாரத்தில் மாதவி, தான் உயிரினும் மேலாகக் காதலித்த கோவலனுக்கு வரைந்த மடலைக் கோசிகன் என்னும் அந்தணன் வாயிலாக அனுப்பிய போதுஇ அவனைக் “கண்மணி அனையான்” எனக் குறிப்பிட்டிருப்பது கருதத்தக்கது.

        “வருந்துயர் நீக்கு எனமலர்க்கையின் எழுதி
        கண்மணி யனையாற்குக் காட்டுக என்றே
        மண்உடை முடங்கல் மாதவி யீந்ததும்”
                              (சிலம்பு – புறஞ்சோர் இறுத்தகாதை 74-76)

காதலரைக் கண்ணுக்கு நிகராகக் கருதியது போலவே, தாம் ஈன்றெடுத்த குழந்தையையும் ‘கண்ணே’ என்றழைப்பது மிகப்பரவலாகக் காணக் கிடக்கிறது. தாய்பாடும் தாலாட்டுப் பாடலில்,

        கண்ணான கண்ணே கண்ணுறங்கு – என்
        கானகத்து வண்டுறங்கு” 
                                                                    (வாய்மொழிப்பாடல் - தாலாட்டு)

என்று பாடும் போது தன் குழந்தையைக் கண்ணே என்றழைத்து மகிழ்கிறாள்.

கண்ணோட்டம் என்னும் கழிபெருங் காரிகை
உண்மையான் உண்டிவ் வுலகு. (571)
கண்ணோட்டம் என்று சொல்லப்படுகின்ற மிகச்சிறந்த அழகு பண்புடைய அரசனிடம் இருப்பதானாலேயே இவ்வுலகம் அழியாமல் இருந்து வருகிறது.

கண்ணோட்டத் துள்ளது உலகியல் அஃதிலார்
உண்மை நிலக்குப் பொறை. (572)
உலகியல் என்பது கண்ணோட்டத்தினால் தான் உலகில் நிலைபெற்று இருக்கிறது. ஆகையால் கண்ணோட்டம் இல்லாதவர் உயிரோடிருப்பது நிலத்திற்கு வீண் சுமையே தவிர வேறு பயன் இல்லை.

பண்என்னாம் பாடற்கு இயைபின்றேல் கண்என்னாம்
கண்ணோட்டம் இல்லாத கண். (573)
பண்ணானது பாடலோடு பொருந்தாவிடில் அப்பண்ணால் என்ன பயன்? அது போல, கண்ணோட்டம் இல்லாதபொழுது கண்ணால் என்ன பயன்?

உளபோல் முகத்தெவன் செய்யும் அளவினால்
கண்ணோட்டம் இல்லாத கண். (574)
தகுந்த அளவில் கண்ணோட்டமில்லாத கண்கள் முகத்தில் உள்ளவை போலத் தோன்றுவது அல்லாமல் வேறு என்ன பயன் தரும்?

கண்ணிற்கு அணிகலம் கண்ணோட்டம் அஃதின்றேல்
புண்ணென்று உணரப் படும். (575)
ஒருவர் கண்ணுக்கு அணிகலன் போல அழகு செய்வது கண்ணோட்டமே. அந்த அணிகலன் இல்லையேல் அது புண் என்றே கருதப்படும்.

மண்ணோ டியைந்த மரத்தனையர் கண்ணோ
டியைந்துகண் ணோடா தவர். (576)
கண்ணோடு பொருந்தியிருக்கும் கண்ணோடாத வன்நெஞ்சம் உள்ளவர் மண்ணோடு பொருந்தி நகர்தல் இல்லாத மரத்தைப் போன்றவர் ஆவார்.

அறிவினான் ஆகுவது உண்டோ பிறிதின்நோய்
தம்நோய்போல் போற்றாக் கடை

கண்ணோட்டம் இல்லவர் கண்ணிலர் கண்ணுடையார்
கண்ணோட்டம் இன்மையும் இல். (577)
கண்ணோட்டம் இல்லாதவர் கண் இல்லாதவரே ஆவார். கண்ணுடையவர், கண்ணோட்டம் இல்லாதவராக இருக்க மாட்டார்.

கருமம் சிதையாமல் கண்ணோட வல்லார்க்கு
உரிமை உடைத்திவ் வுலகு. (578)
தம் கடமை தவறாமல் கண்ணோடவல்ல அரசர்க்கு இவ்வுலகம் நிலையான உரிமை உடையது.

ஒறுத்தாற்றும் பண்பினார் கண்ணும்கண் ணோடிப்
பொறுத்தாற்றும் பண்பே தலை. (579)
தண்டித்து அடக்கப்பட வேண்டிய குற்றம் உடையவரிடத்தும் கண்ணோட்டம் செய்து அவர் குற்றத்தைப் பொறுத்து அமையும் இயல்பே தலை சிறந்ததாம்.

பெயக்கண்டும் நஞ்சுண் டமைவர் நயத்தக்க
நாகரிகம் வேண்டு பவர். (580)
எல்லோராலும் விரும்பப்படத்தக்க நாகரிகமான கண்ணோட்டத்தை விரும்புபவர் தன் கண் முன்பு தாம் விரும்பாத நஞ்சு போன்ற பொருளைக் கொடுத்தாலும் அதை மறுக்காமல் ஏற்றுக் கொண்டு பின்னும் அவரோடு இன்பமாகப் பழகுவர். (தம்மால் விரும்பப்படாத பொருள் நஞ்சுக்குச் சமமாகக் கூறப்பட்டுள்ளது).

நன்றிக்குரியோர்:
https://tamilnation-tamilmani.blogspot.com/2012/06/blog-post_04.html

Standard

Leave a comment