தமிழ்

திருவள்ளுவர் கூறும் மடியின்மை(61)

மடியின்மை

மடி – மடித்தல், மடி, ஆடை, தீட்டில்லாத நிலை, மடிதல்,
சோம்பல் – மடி, அசைவு

வைகல்தொறும் அசைவு இன்றி
உல்கு செயக் குறைபடாது (பட்டினப் பாலை 116-125)

கொடியோர்த் தெறுதலும், செவ்வியோர்க்குஅளித்தலும்,
ஒடியா முறையின் மடிவிலை யாகி (புறநானூறு 29)

“நிம்பிரி கொடுமை வியப்பொடு புறமொழி
வன்சொற் பொச்சாப்பு மடிமையொடு குடிமை
இன்புறல் ஏழைமை மறப்போ டொப்புமை
என்றிவை இன்மை என்மனார் புலவர்” (தொல்காப்பியம், நூ. 1220)

குடியென்னும் குன்றா விளக்கம் மடியென்னும்
மாசூர மாய்ந்து கெடும். (601)
தான் பிறந்த குடியாகிய நந்தா விளக்கு, சோம்பல் என்னும் தூசி படிவதால் ஒளி மங்கிக் கெடும்.

மடியை மடியா ஒழுகல் குடியைக்
குடியாக வேண்டு பவர். (602)
தாம் பிறந்த குடியை மேன்மேலும் சிறந்த குடியாக உயர்த்த விரும்புபவர் சோம்பலை நீக்கி இடையறா முயற்சியுடையவராய் இருத்தல் வேண்டும்.

மடிமடிக் கொண்டொழுகும் பேதை பிறந்த
குடிமடியும் தன்னினும் முந்து. (603)
அழிக்கும் இயல்புள்ள சோம்பலைத் தன்னிடம் கொண்டிருக்கும் அறிவிலி பிறந்த குடி, அவனுக்கு முன்பு அழிந்து விடும்.

குடிமடிந்து குற்றம் பெருகும் மடிமடிந்து
மாண்ட உஞற்றி லவர்க்கு. (604)
சோம்பலில் வீழ்ந்து சிறந்த முயற்சியில்லாதோராய் வாழ்பவர்க்கு, குடியும் கெட்டுக் குற்றமும் பெருகும்.

நெடுநீர் மறவி மடிதுயில் நான்கும்
கெடுநீரார் காமக் கலன். (605)
காலம் தாமதித்தல், மறதி, சோம்பல், தூக்கம் ஆகிய நான்கும் கெடுகின்ற இயல்புடையவர் விரும்பி ஏறுகின்ற மரக்கலன்களாகும்.

படியுடையார் பற்றமைந்தக் கண்ணும் மடியுடையார்
மாண்பயன் எய்தல் அரிது. (606)
மாநிலம் ஆளும் மாபெரும் வேந்தரின் துணைகிட்டிய போதிலும் சோம்பேறிகள், அதனால் சிறந்த பயன் அடைதல் இல்லை.

இடிபுரிந்து எள்ளுஞ்சொல் கேட்பர் மடிபுரிந்து
மாண்ட உஞற்றி லவர். (607)
சோம்பலை விரும்பி சிறந்த முயற்சி இல்லாதவராய் வாழுகின்ற அரசர், அமைச்சர் முதலிய துணையாளர்கள் இடித்துரைத்து இகழும் இகழ்ச்சிச் சொல்லைக் கேட்பர்.

மடிமை குடிமைக்கண் தங்கின்தன் ஒன்னார்க்கு
அடிமை புகுத்தி விடும். (608)
நல்ல குடியில் பிறந்தவரிடம் சோம்பல் குடி புகுந்தால் அச்சோம்பல் அவனைத் தன் பகைவர்க்கு அடிமையாக ஆக்கி விடும்.

குடியாண்மை யுள்வந்த குற்றம் ஒருவன்
மடியாண்மை மாற்றக் கெடும்.(609)
ஓர் அரசன் தன் சோம்பல் தன்மையை நீக்கிவிட்டால் அவன் குடியிலும் ஆளுகின்ற தன்மையிலும் வந்த குற்றங்கள் நீங்கிவிடும்.

மடியிலா மன்னவன் எய்தும் அடியளந்தான்
தாஅய தெல்லாம் ஒருங்கு. (610)
சோம்பல் இல்லாத அரசன் உலகம் முழுவதையும் அடைந்து அரசாள்வான்.

பெளத்தம் இந்து மதத்திற்குக் கொடுத்தவை:

அகன் அமர்ந்து செய்யாள் உரையும் முகனமர்ந்து
நல்விருந்து ஓம்புவான் இல் (84)
அவ்வித்து அழுக்காறு உடையானைச் செய்யவள்
தவ்வையைக் காட்டி விடும் (610)
மடியுளான் மாமுகடி என்ப மடியிலான்
தாளுளாள் தாமரையினாள் (617)

Standard

Leave a comment