சமூகம்

கொரோனா தடுப்பூசிகளின் ஏஜென்டாகி விட்டதா உலக சுகாதார நிறுவனம்? அவுட்லுக் கட்டுரை

ஒமைக்ரான் அச்சம்: தடுப்பூசிகளைப் பரப்பும் நோக்கில் இயற்கையான நோய் எதிர்ப்பாற்றலைப் புறம் தள்ளுகிறதா உலக சுகாதார நிறுவனம்? அவுட்லுக் கட்டுரை

Omicron Scare: Is WHO Ignoring Natural Immunity To Promote Covid-19 Vaccines?
படம் நன்றி: அவுட்லுக்இந்தியா.காம்

ஓமைக்ரானை ஒழிக்கத் தடுப்பூசி ஒன்றே ஒரே வழி என்று உலக சுகாதார நிறுவனம் சொல்கிறது. இப்போது வரை, இயற்கையான நோய் எதிர்ப்பாற்றலையும் அதன் இன்றியமையாமையையும் அது கண்டு கொண்டதாகத் தெரியவில்லை.

மனிதர்களின் இயற்கையான நோய் எதிர்ப்பாற்றலும் தடுப்பூசிகளும் ஒரே அளவு பாதுகாப்பைத் தான் தரும் என உலக சுகாதார அமைப்பே சொல்கிறது. பிறகேன் இயற்கையான நோய் எதிர்ப்பாற்றலைப் பற்றி ஒருவரி கூடப் பேசாமல், இவ்வளவு வெறித்தனமாகத் தடுப்பூசி போடு தடுப்பூசி போடு என்று பரிந்துரைக்கிறது என்பது புரியாத புதிராக இருக்கிறது.

கொரோனாவில் பாதிக்கப்பட்டு குணமான ஒருவரிடம், கொரோனாவை எதிர்க்கும் இயற்கையான எதிர்ப்பாற்றல் உருவாகி விடும். இருக்கும் தடுப்பூசிகள் எல்லாவற்றையும் விட, இயற்கையான நோய் எதிர்ப்பாற்றலே சிறந்தது என்பது தான் இது வரை வந்திருக்கும் அறிவியல் முடிவுகள்.

இந்த அறிவியல் முடிவுகள் எவற்றையும் உலக சுகாதார நிறுவனம் கணக்கில் எடுத்துக் கொண்டதாக அதன் அறிக்கைகளில் பார்க்க முடியவில்லை. இந்தியாவில் இருக்கும் நலவாழ்வுக்கான அறிஞர்கள் சிலர், உலக சுகாதார நிறுவனத்தின் இந்த நிலைப்பாடு ஒரு தலைப்பட்சமானதோ என்று சந்தேகம் தெரிவிக்கிறார்கள்.

“கொரோனா பெருந்தொற்றின் தொடக்கத்தில் இருந்தே உலக சுகாதார நிறுவனத்தின் செயல்பாடுகள் சந்தேகப்படும்படித் தான் இருக்கின்றன. உ.சு. நிறுவனம் தடுப்பூசிகள் மீது காட்டும் அதீத ஆர்வம் கேள்விக்குரியது தான்” என்கிறார் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் சமூக மருந்துகள் பிரிவின் பேராசிரியர் சஞ்சய் ராய்.

கொரோனா தொற்றில் இருந்து இயற்கையாகவே குணமானவர்களுக்கு, ‘நோய் எதிர்ப்பு கடவுச்சீட்டோ’, ‘இக்கட்டு இல்லை’ என்னும் சான்றிதழோ கொடுத்து பயணம் செய்யச் சொல்லலாம் என்று சில நாடுகள் போன ஆண்டு பரிந்துரைத்தன. ஆனால், போன ஆண்டு(2020) ஏப்ரல் 24ஆம் நாள் வெளியிட்ட தன்னுடைய அறிக்கையில் அந்தப் பரிந்துரைகளை உலக சுகாதார நிறுவனம் ஏற்றுக் கொள்ளாமல் புறம் தள்ளியது.

இப்படி நடந்து ஓராண்டுக்குப் பிறகு இயற்கையான நோய் எதிர்ப்பாற்றலே தடுப்பூசிகளைக் காட்டிலும் சிறந்தது என அறிவியல் ஆய்வு முடிவுகள் பல தெரிவித்தன. இப்படிப்பட்ட ஆய்வு முடிவுகள் வந்த பிறகும் உலக சுகாதார நிறுவனம், தடுப்பூசிகளும் இயற்கையான நோய் எதிர்ப்பாற்றலும் ஒரே அளவு பாதுகாப்பைத் தான் தரும் என (மே 10, 2021இல்) அறிக்கை வெளியிட்டது.

“கொரோனா தொற்று வந்த ஒருவர்க்கு மீண்டும் கொரொனா என்பது அரிதானது தான் என்றாலும் மீண்டும் கொரோனா வரலாம். ஆனாலும் 7 மாதங்கள் வரை அதற்கான வாய்ப்பு 80 -90% குறைவு என்றும் அறிகுறியோடு கூடிய கொரோனா மீண்டும் வர 94% வாய்ப்பில்லை என்றும் இங்கிலாந்து, அமெரிக்கா, டென்மார்க் ஆகிய நாடுகளில் செய்யப்பட்ட ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. ” என்று உலக சுகாதார நிறுவனமே சொன்னார்கள்.

இப்படிச் சொன்ன அவர்களே, “இதுவரை செய்யப்பட்ட சோதனைகள், இப்போது வரை இருக்கும் புரிதலின் அடிப்படையில் நோய் எதிர்ப்பாற்றல் மீண்டும் கொரோனா வருவதைத் தடுக்கும் என்று சொல்ல முடியவில்லை. ஆனாலும் இயற்கையான நோய் எதிர்ப்பாற்றல், தடுப்பூசியைப் போன்ற பாதுகாப்பைக் கொடுக்கும்” என்றும் சொன்னார்கள்.

உலக சுகாதார நிறுவனத்தின் இந்த நிலைப்பாட்டைத் தான் டாக்டர் ராய் கேள்விக்கு உட்படுத்துகிறார். “தடுப்பூசியும் இயற்கையான நோய் எதிர்ப்பாற்றலும் ஒன்று போலவே பாதுகாப்பு கொடுக்கும் என்றால், கொரோனாவில் இருந்து இயற்கையாக மீண்டவர்களுக்குத் தடுப்பூசி தேவையில்லை என்று உலக சுகாதார நிறுவனம் பரிந்துரைக்கவில்லை?” என்பதே அவருடைய கேள்வி.

உலக சுகாதார நிறுவனம் “தென்கிழக்கு ஆசியப்பகுதியில் ஓமைக்ரானுக்கு ஆயத்தமாவது” பற்றி வெளியிட்ட (நவம்பர் 27, 2021) அறிக்கை அவருடைய கேள்விக்கு வலு சேர்ப்பது போல அமைந்தது.

“கோவிட் தொற்றைத் தடுக்க, எல்லா வயதினர்க்கும், குறிப்பாக மூத்த குடிமக்களுக்கு, நலப்பணியாளர்கள், பெருந்தொற்றுக்கு ஆளாவோர் ஆகியோர்க்கு முதன்மையாகத் தடுப்பூசி போடப்பட வேண்டும்” என்று மட்டும் பேசிய அந்த அறிக்கை, ஓமைக்ரானுக்கு எதிரான இயற்கை நோய் எதிர்ப்பாற்றலைப் பற்றி எதுவும் பேசாமல் அமைதி காத்தது.

இப்படி அமைதி காப்பதன் மூலம், நோய் எதிர்ப்பின் மிகச்சிறந்த வடிவமாகிய இயற்கை நோய் எதிர்ப்பாற்றலைப் புறம் தள்ளி, தடுப்பூசி செலுத்துதலை உலக சுகாதார நிறுவனம் ஊக்குவிக்கிறது, இது உண்மையில் வருத்தமளிக்கும் ஒன்று என்கிறார் டாக்டர் ராய்.

டாக்டர் ராயின் இந்தக் கருத்து சரியானது என்று சொன்னார் டாக்டர் அமிதவ் பானர்ஜி. இவர் பூனாவில் உள்ள டாக்டர் டிஒய் பட்டீல் மருத்துவக்கல்லூரியின் சமூக மருந்துகள் துறைத்தலைவராக இருக்கிறார். உலக சுகாதார நிறுவனம் (நவம்பர் 27,2021) தன்னுடைய அறிக்கையில் கொரோனாவில் இருந்து இயற்கையாகவே குணமானவர்களுக்குத் தடுப்பூசி தேவையில்லை என்று அறிவித்திருக்க வேண்டும் என்கிறார் அவர்.

“இஸ்ரேலில் நடத்தப்பட்ட பெருந்தொகை மக்கள் ஆய்வுகளைப் பாருங்கள். இயற்கையான நோய் எதிர்ப்பாற்றல் மிகவும் ஆற்றல் வாய்ந்தது என்பது அந்த ஆய்வுகள் வழி தெரிய வந்திருக்கிறது. இயற்கையாகக் குணமானவர்கள் தடுப்பூசி மூலம் குணமானவர்களைக் காட்டிலும் பதின்மூன்று மடங்கு அதிக நோய் எதிர்ப்பாற்றல் கொண்டவர்களாக இருக்கிறார்கள். உங்களுக்குப் புரியும் படி சொல்ல வேண்டும் என்றால், இயற்கை நோய் எதிர்ப்பாற்றலைக் கொண்டு கொரோனாவை வென்றவர்கள் 13 பூஸ்டர் தடுப்பூசிகள் போட்டதற்குச் சமம். இப்படி இருந்தும் இயற்கை நோய் எதிர்ப்பாற்றலை ஏன் உலக சுகாதார நிறுவனம் பேச மறுக்கிறது?” என்று கேட்கிறார் டாக்டர் அமிதவ் பானர்ஜி.

“கொரோனாவில் பாதிக்கப்படும் ஒருவர், ஏறத்தாழ 13 நாட்கள் அந்த வைரசைத் தாங்கி வாழ்கிறார். தடுப்பூசியும் இதையே செய்யப் போகிறது. மட்டுப்படுத்தப்பட்ட வைரஸைத் தடுப்பூசியாகக் கொடுக்கப் போகிறார்கள், இல்லையென்றால் புதிய தொழில்நுட்பத்தின் அடிப்பட்டையில் மரபணு அடிப்படையில் உருவாக்கப்படும் தடுப்பூசியைக் கொடுக்கிறார்கள். இப்படிச் செய்து ஸ்பைக் புரதத்தை உடலில் உருவாக்குகிறார்கள். சரி, பூஸ்டர் தடுப்பூசி என்று ஒன்றைச் சேர்த்தாலும் 3 தடுப்பூசி தான் கிடைக்கிறது, 13 தடுப்பூசிக்குச் சமமான எதிர்ப்பாற்றல் கிடைக்கப் போவதில்லை. அறிவியல் என்பது இப்படிப்பட்ட பொது அறிவுடன் சேர்ந்தது தான்! ” என்கிறார் அவர்.

“உலக சுகாதார நிறுவனமும் உலக அளவில் கொள்கை வகுப்பவர்களும் இப்படிப்பட்ட பொது அறிவு, அறிவியல், சமூகக் கொள்ளை நோயியல் ஆகிய எல்லாவற்றையும் புறக்கணித்து விட்டு, மேற்கு நாடுகளில் இருக்கும் எண்ணிக்கையை அப்படியே ஆசிய, ஆப்பிரிக்க நாடுகளுக்குக் கொடுக்கிறார்கள். இங்கே இருக்கும் பரவல் முறையே வேறு, அதை அவர்கள் கணக்கில் எடுப்பதே இல்லை” என்று வருந்துகிறார் டாக்டர் பானர்ஜி.

தேவையற்ற எச்சரிக்கை செய்திகளையும் உணர்ச்சியைத் தூண்டும் அறிக்கைகளையும் உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டு சூழலைத் தேவையற்ற பீதிக்குள்ளாக்குவதாக வருந்துகிறார் பேராசிரியர் டாக்டர் கோபர்தன் தாஸ். இவர், ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் மூலக்கூறு மருந்துகள் சிறப்பு மையத்தில் பணி புரியும் புகழ் பெற்ற நோய்த்தடுப்பு மருத்துவர்.

“உலக சுகாதார நிறுவனம் குழம்பிப் போய் இருக்கிறது. ஒரு பக்கம் தடுப்பூசியும் இயற்கை நோய் எதிர்ப்பாற்றலும் சமம் என்று அவர்களே சொல்கிறார்கள். மறு பக்கம், இயற்கையாகவே கொரோனாவில் இருந்து குணமானவர்களை ஏற்றுக் கொள்ள அவர்கள் ஆயத்தமாக இல்லை. உண்மையைச் சொல்வதானால், இயற்கையாகக் குணமானவர்கள், தடுப்பூசியால் குணமானவர்களை விடப் பல மடங்கு சிறப்பாக இருக்கிறார்கள் என்பதே உண்மையான ஆய்வுகள் வழி கிடைக்கும் தரவாக இருக்கிறது” என்கிறார் டாக்டர் கோபர்தன் தாஸ்.

“ஓமைக்ரான் என்பது இந்தச் சாபத்திலும் கிடைத்த ஒரு வரம்” என்பதை வலியுறுத்திச் சொல்லும் அவர், 90 நாடுகளுக்கு மேல் பரவினாலும் ஓமைக்ரானால் பாதிக்கப்பட்டோருக்குத் தடுப்பூசி செலுத்தினால் வரும் சின்னச் சின்ன அறிகுறிகளே இருக்கின்றன என்பதைச் சுட்டிக் காட்டுகிறார். “எந்தச் சூழ்நிலையிலும் ஒருவர் நோயாளியாக வேண்டும் என்பது என்னுடைய விருப்பம் இல்லை, அதே நேரம் எந்த ஒரு சூழலிலும் பீதியாக வேண்டிய தேவையில்லை. அரசு நிறுவனங்கள் கொடுக்கும் முன்னெச்சரிக்கைகளையும் வழிகாட்டல்களையும் முறையாகப் பின்பற்றினாலே போதும்” என்கிறார் அவர்..

“உலக சுகாதார நிறுவனம் தேவையான பீதியை உருவாக்கிக் கொண்டிருக்கிறது. எப்போது தேவையோ அப்போது அவர்கள் எச்சரிக்கத் தவறிவிட்டார்கள். 2019 டிசம்பரில் வுகான் பகுதியில் இருந்து கொரோனா பரவுகிறது என்பது அவர்களுக்குத் தெரிந்திருந்தது. அப்போது அவர்கள் எந்தப் போக்குவரத்தையும் நிறுத்தவில்லை. அது மட்டுமில்லை, இந்த நோய் பற்றி யாரும் கவலைப்பட வேண்டாம் என்றும் அவர்கள் சொல்லிக் கொண்டிருந்தார்கள். உலக சுகாதார நிறுவனத்தின் இந்த அறியாமை, பல உயிர்களைக் காவு கொண்டு விட்டது” என்று வருந்துகிறார் அவர்.

இந்திய பொது நலவாழ்வுச் சங்கத்தின் தலைவராகவும் இருக்கும் டாக்டர் சஞ்சய் ராய், “உலக சுகாதார நிறுவனம் பெருந்தொற்றின் தொடக்கத்தில் இருந்து இப்போது வரை வெளியிட்டிருக்கும் அறிக்கைகளைப் பார்த்தாலே அவர்கள் இயற்கையான நோய் எதிர்ப்பாற்றலுக்கு எதிராக எப்படிச் செயல்பட்டிருக்கிறார்கள் என்பது தெளிவாக விளங்கும்” என்கிறார்.


நன்றி:
ஆங்கில மூலம்:

https://www.outlookindia.com/website/story/india-news-omicron-scare-is-who-ignoring-importance-of-natural-immunity-to-promote-covid-19-vaccines/407588

Standard

Leave a comment